சென்னையில் எங்கே திரும்பினாலும் "வெளிநாட்டுப் பறவைகளை பார்க்கணுமா, நேரா வேடந்தாங்கல் போங்க சார். அந்த எடம்தான் சார் உங்களுக்கு கரெக்ட்" என்பது போன்ற இலவச அறிவுரைகள் நிறையவே கிடைக்கும். ஆனால் நம் வீடுகளுக்கு அருகில் இல்லாத பறவைகளைப் பார்க்க சென்னை அருகே வேடந்தாங்கல், பழவேற்காடு, தமிழகத்தின் மத்தியில் இருப்பவர்களுக்கு கோடிக்கரை, தென் மாவட்டம் என்றால் கூந்தங்குளம் போன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டுமா என்ன?
இல்லை. தென்சென்னையில் பறவைகளின் சொர்க்கபுரி ஒன்று இருக்கிறது. அது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். சதுப்பு நிலம் என்பது ஏரி போல நீர் தேங்கியிருக்கும் நீர்நிலையல்ல. நன்னீரும் கடலில் இருந்து உள்ளே வரும் உவர் நீரும் சேரும் குறைந்த ஆழமுடைய இடங்கள்தான் சதுப்பு நிலங்கள் ஆகின்றன. பொதுவாக பருவமழை தொடங்கி, நீர்நிலைகள் உயிர் பெறத் தொடங்கும் வேளையில், அப்பகுதிகளை மேலும் சுவாரசியமாக்கும் பறவைகள் கூட ஆரம்பித்து விடுகின்றன. இப்படி அவை கூடும் இடங்களில் பள்ளிக்கரணை முக்கியமானது.
தென்சென்னையில் ஒரு காலத்தில் மத்திய கைலாஷ் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்திருக்கிறது பள்ளிக்கரணை. இன்றைக்கு பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்கு பத்தில் ஒரு பங்காக இது சுருக்கப்பட்டு விட்டது. எல்லாம் வெறும் 30-40 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளன. அரசின் அலட்சிய மனோபாவம், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு, மக்களின் தணியாத வீடு கட்டும் ஆசை போன்றவையே இதற்குக் காரணம். பள்ளிக்கரணையைப் பற்றி நினைத்தவுடன் நம் மனதில் எட்டிப் பார்க்கும் அவல முகம் இதுதான்.
அந்த சித்திரம் மனதில் ஆட, காலைச் சூரியன் உதித்த நேரத்தில் ஒரு நாள் பள்ளிக்கரணை நோக்கிப் பயணித்தேன். வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் குட்டையை வழக்கம் போல் எட்டிப் பார்த்தேன். அந்த இடத்தில் குட்டை இல்லை. அழிக்கப்பட்டு அந்த இடம் சமதளமாக்கப்பட்டிருந்தது. 2004ஆம் ஆண்டில் இந்த இடம் வரை பள்ளிக்கரணை பரவியிருந்தது. 2008ஆம் ஆண்டு குட்டை மட்டும் எஞ்சியிருந்தது. இன்று எதுவுமே இல்லை. பாய்ச்சல் வேக வளர்ச்சியின் அடையாளம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது!
அடுத்ததாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குப் போவதற்கு முந்தைய ஜங்ஷனில் மிகப் பெரிய பாலம் குறுக்கு மறுக்காக முளைத்துவிட்டது. இந்தப் பாலத்துக்கு இடது பக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எஞ்சியுள்ள பகுதி தொடங்குகிறது. இங்கு பெருங்கூட்டமாக நாணல் வளர்ந்திருக்கிறது. பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய, இவை பெரிதும் உதவுகின்றன. ஆனால், ஒரு பகுதி நாணல்கள் தீ வைத்து அழிக்கப்பட்டிருந்தன. தண்ணீரையும் காணோம். இப்படி புறப்பட்டது முதலே எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருந்தது.
தற்போதுள்ள நிலையில் துரைப்பாக்கம் செல்லும் சாலை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை இரண்டாகப் பிளக்கிறது. எஞ்சியுள்ள பள்ளிக்கரணையின் இடதுபுறமாக மெதுவாக நகரநகர பறவைகள் தென்பட ஆரம்பித்தது, என் மனதில் சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. முதலில் என் கண்ணில் பட்டவை நீலத் தாழைக்கோழியும் நாமக்கோழியும்தான். முக்குளிப்பான்களையும் பரவலாக பார்க்க முடிந்தது. அனைத்தும் நீர்ப்பறவைகள்.
பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் உத்தரவுக்குப் பின், இப்பொழுது குப்பை கொட்டப்படாதது போன்ற ஒரு தோற்றம் மட்டும் இருக்கிறது. ஆனால், குப்பை கொட்டுவது குறைந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கிடங்குக்கு முன்புறமாக மிகப் பெரிதாக விரிந்திருந்த பள்ளிக்கரணையின் ஒரு சிறு பகுதியில் தண்ணீர் கிடந்தது. இங்குதான் மேலே குறிப்பிட்ட பறவைகளை அதிக எண்ணிக்கையில், சுமார் ஆயிரத்துக்குள் பார்க்க முடிந்தது. நீலத் தாழைக்கோழிகள் (Purple moorhen) கரையோரமாகவும், காய்ந்த வெங்காயத் தாமரை இடையேயும் பெருமளவு இரை தேடிக் கொண்டிருந்தன. முக்குளிப்பான்கள் (Little Grebe) நொடிக்கொரு தரம் நீரில் மூழ்கி இரை தேடின. நாமக் கோழிகள் (Common Coot) சிறுசிறு குழுக்களாக நீந்தி இரை தேடிய வண்ணமிருந்தன.
பறவைகள் திட்டமிட்ட வாழ்க்கையைக் கொண்டவை. நம்மைப் போல கடைகளிலோ, ஹோட்டலிலோ அவற்றுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதால், காலை எழுந்தது முதல் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்குவதற்கு முன்னால் வேகவேகமாக இரை தேட ஆரம்பித்து விடுகின்றன. அவற்றின் உணவு நம்முடையதைப் போல விலைமிகுந்ததும் இல்லை. எதற்கும் பயனற்றது என்றும், சில நேரம் தொந்தரவுக்கு உரியதாகவும் நாம் கருதும் நீர் வாழ் புழுப் பூச்சிகள், கரைகளில் கிடைக்கும் நத்தை, நண்டுகள் போன்றவைதான் அவற்றின் உணவு.
இயற்கையாளர்கள், பள்ளிக்கரணைவாசிகளின் தொடர் போராட்டத்துக்குப் பின், பள்ளிக்கரணையின் மேற்கண்ட பகுதியும், இதற்கு எதிர்ப்புறம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT) அமைந்துள்ள பகுதியைத் தவிர்த்த, எஞ்சியுள்ள நீர்நிலையையும் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்று 2007இல் அரசு அறிவித்தது. அதற்கான அறிவிப்புப் பலகைகளை இரு பக்கமும் பார்க்க முடிகிறது. ஆனால் பறவை வேட்டையைத் தடுக்க எந்த வனக் காவலர்களையும் இதுவரை நேரில் பார்க்க முடியவில்லை.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துக்குப் பின்புறமுள்ள சதுப்புநிலம் இயற்கையாளர்களிடையே பிரசித்தி பெற்றது. சற்று வெளிப்படையான சப்தத்துடன் மின்சாரத்தை கடத்திக் கொண்டிருக்கும் உயர்அழுத்த மின்கம்பிகளைச் சுமந்த பிரம்மாண்ட மின்கோபுரம் ஒன்று சதுப்புநிலத்தின் நடுவில் இருக்கிறது. கூழைக்கடா எனப்படும் பெலிகன் பறவைகளின் ஆஸ்தான ஓய்விடம் இது. உச்சியில் ஒன்றும், பக்கவாட்டு கம்பிகளில் ஆறேழுமாக உட்கார்ந்து இறகுகளை கோதிக் கொண்டிருந்தன. இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான பல்வேறு வகைப் பறவைகளை பார்க்கலாம். இவ்வளவுக்கும் ஜூலை மாதம் பறவைகள் வரத் தொடங்கும் காலம்தான். இவை பெரும்பாலும் உள்நாட்டு வலசை பறவைகள். கோடை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றுவிடும் இவை, பருவமழை பெய்யத் தொடங்கும்போது தெற்கிலுள்ள இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்துவிடுகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்துவிட்டு, கோடையில் நீர்நிலை வறளும்போது வேறு பகுதிகளுக்குச் சென்று விடுகின்றன. டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுப் பறவைகளும் பள்ளிக்கரணைக்கு வலசை வருகின்றன. குஜராத்தில் இருந்து வலசை வரும் பூநாரைகள் (ஃபிளாமிங்கோ), இப்போது பள்ளிக்கரணைக்கும் வருவதாக ஆர்வலர்களின் பதிவுகள் கூறுகின்றன. இது பள்ளிக்கரணைக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நான் சென்றபோது பூநாரைகளை பார்க்க முடியவில்லை.
எதிர்ப்பக்கம் பார்த்த நீலத் தாழைக்கோழிகள், நாமக்கோழிகள், முக்குளிப்பான் ஆகியவற்றுடன் நீளவால் இலைக்கோழிகள் (Pheasant tailed jacana), நெடுங்கால் உள்ளான் (Black winged stilt) உள்ளிட்ட வேறு சில பறவைகளையும் பெரும் எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. பறவைகளை நோக்குவதற்கு மிக முக்கியமான தேவை இரு கண்ணோக்கி எனப்படும் தொழில்முறை பைனாகுலர். பறவைகள் அளவில் சிறியவை என்பதாலும் பரந்த பரப்பில் விரவிக் கிடப்பதாலும் வெறும் கண்களால், அவற்றை துல்லியமாகப் பார்க்க முடியாது. வாய்ப்பு இருந்தால் ஒரு கேமராவும் எடுத்துச் செல்லலாம். ஆனால் கேமராவைத் திருப்பி, "க்ளிக்" செய்வதற்குள் சரேலெனக் கடந்து சென்றுவிடும் பறவைகளும் உண்டு.
பறவைகளை நோக்கும்போது, மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களால் மட்டுமே வேகமாகக் கடந்து செல்லும் பறவை எது என்பதை யூகிக்க முடியும். அதுவும்கூட 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. கையில் வைத்திருக்கும் பறவை வழிகாட்டிப் புத்தகத்துடன், பறவையின் முக்கிய அடையாளங்களை ஒப்புநோக்கித்தான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
நான் சதுப்புநிலத்தில் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தபோது மூன்று வாத்துகள் வேகமாக என்னைக் கடந்து சென்றன. அவற்றை அடையாளம் காண முடியவில்லை. இப்பகுதிக்கு பல்வஸ் சீழ்க்கைச் சிறகி (Fulvous Whistling duck) எனப்படும் அரிய வாத்து வந்ததை மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டியைச் சேர்ந்த கே. ஞானஸ்கந்தன் பதிவு செய்துள்ளார். இன்றைய பறவை நோக்கலில் நான் பார்த்த இரண்டு புதிய பறவைகள் தண்ணீர்க் கோழி (பெண்) (Watercock), சாம்பல் கதிர்க்குருவி (Ashy prinia). இவற்றை அன்றுதான் முதன்முறையாகப் பார்த்தேன். இது போன்ற அரிய பறவைகளைத் தவிர காக்கை, கள்ளப்பருந்து, கரிச்சான், கதிர்க்குருவிகள் போன்றவற்றையும் பார்த்தேன்.
தாங்கள் போட்ட குப்பையும் சேர்ந்துதான் இங்கு ஊர்க்குப்பையாக கிடக்கிறது என்பதை மறந்து, இப்பகுதி வழியே வாகனங்களில் செல்லும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் பறவைகளும், அவற்றுக்கு உணவு தரும் இயற்கையும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் செழிப்பையும் வளத்தையும் மட்டுமே பெருக்குகின்றன. மனிதர்கள் எல்லாவற்றையும் உறிஞ்சி சக்கையாக்கித் துப்பிவிட்டு போக நினைக்கும் நேரத்தில், இயற்கை தனக்குக் கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் தவற விடாமல் செழிப்பை பிரசவித்துக் கொண்டே இருக்கிறது. நீண்டகால வேரறுப்புக்குப் பிறகு பள்ளிக்கரணையில் இயற்கை சுழற்சி மெதுவாகத் துளிர்விட ஆரம்பித்திருப்பதை, சீழ்க்கைச் சிறகி, சாம்பல் ஆள்காட்டி (Whitetailed Lapwing) போன்ற அரிய பறவைகளின் வருகை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
நான் வீட்டுக்குத் திரும்ப யத்தனித்த நேரம் என் தலைக்கு மேலே மூன்று பறவைகள் வந்து ஒரு கணம் அந்தரத்தில் நின்றன. அவசரத்தில் அவை நீர்க்காகங்கள் என்று தவறாக நினைத்து விட்டேன். சாலையில் விரைந்து கொண்டிருந்த வாகனங்களின் வேகம், இரைச்சலுக்கு அஞ்சி அவை சற்று நிதானித்து அந்தரத்தில் நின்றிருக்க வேண்டும். மீண்டும் சாலையைக் கடந்து அவை வேகமாகப் பறந்தபோதுதான், நம் பண்டைப் புலவர்கள் பாடிச் சிறப்பித்த அன்றில் பறவைகள்தான் (Glossy ibis) அவை என்பது தெரிந்தது. அன்று தொடங்கி இன்று வரை நாம் அவற்றை மறந்தாலும், அவை நம்மை விட்டுப் பிரியவில்லை. இந்த ஒடிசலான உறவு இன்னும் எத்தனை காலம் நிலைக்குமோ?!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago