இளமையின் பாய்ச்சல்

ஒரு பைக் வாங்க வேண்டும். இது இன்றைய இளைஞர்களின் கனவு. கணங்களின் சாகஸங்களில் வாழும் இளைஞர்களைப் பொருத்தவரை பைக் ஒரு வாகனம் அல்ல. அது உற்சாகத்தின் வெளிப்பாடு. இளமையின் குறியீடு. இன்னும் சொன்னால் பைக் என்பது நவீன யுகத்தின் பஞ்சகல்யாணிக் குதிரை.

சென்ற தலைமுறையினருக்கு சைக்கிள்களைக் கொண்டாடும் மனோபாவம் இருந்தது. சைக்கிளைத் தினமும் கழுவித் துடைத்து அதற்கு எண்ணெய் இடுவார்கள். சைக்கிள் சக்கரங்களில் வைப்பதற்காகவே அப்போது கடைகளில் நைலான் பூக்கள் விற்கப்பட்டன. இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள், வித்தியாசமான பெல் என சைக்கிளை ஒரு குழந்தையைப் போல அழகுபடுத்துவார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடுகள்தாம். இவற்றை இன்றைய தலைமுறையின் தீவிரக் காதலுடன் ஒப்பிட முடியாது.

இளைஞர்களின் பைக் காதலுக்கான தொடர்பைத் தேடிப் பயணித்தால் அப்பயணம் நூற்றாண்டுகளுக்கு அப்பால் சென்று முடிகிறது. அங்கு சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது ஒரு பஞ்சகல்யாணிக் குதிரை. அன்றைய இளைஞர்களுக்கு குதிரையேற்றம் வீரத்தின் அடையாளமாக இருந்துள்ளது. குதிரைகள் போர்களில் முக்கியப் பங்காற்றியுள்ளன. பஞ்சகல்யாணிக் குதிரையின் மீதேறிப் போரிடும் வீரனை யாராலும் வீழ்த்த முடியாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இளவரசர்கள் குதிரையின் போர்த் திறனுக்கும் அப்பாற்பட்டு குதிரையேற்றத்தைக் கலையாகப் போற்றினர். குதிரைகளில் மீதேறிச் செல்வது பெண்களைக் கவரும் வசீகரத்தின் அம்சமாகவும் பார்க்கப்பட்டது. வேகமாகச் சென்று குதிரையை இழுத்து நிறுத்தும்போது அது உச்சஸ்தாயில் கனைத்துத் திமிறி நிற்கும். இது ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. இன்றைய இளைஞர்கள் பலரும் தங்கள் பைக்கின் எஞ்சின் சத்தத்தை மாற்றுவதுடன் இதை ஒப்பிடலாம். ராயப்பேட்டையைச் சேர்ந்த பைக் பழுதுநீக்கும் ரமேஷ்குமார், “தன்னிடம் வரும் பெரும்பாலான இளைஞர்கள் சைலன்ஸரின் சத்தத்தைக் குதிரைபோல மாற்ற வேண்டும் எனக் கேட்கிறார்கள்” என்கிறார். இப்போது காவல் துறையின் கட்டுப்பாடுகளால் ஹாரன் சத்தம், சைலன்ஸர் மாற்றுவதை அவர் கைவிட்டுவிட்டதாகச் சொல்கிறார். “ஆனால் முன்பு இதற்காகவே ஒரு நாள் முழுவதும் வேலைசெய்திருக்கிறோம். சில சமயங்களில் செய்ய முடியாமல் திருப்பி அனுப்பும்படி இளைஞர் பலரும் ஒரே நேரத்தில் வந்து குவிந்துவிடுவார்கள்” எனக் கூறுகிறார்.

இன்றைய தலைமுறையினர் பலரும் தங்களை ஒரு ராஜகுமாரனாகவே கற்பனை செய்துகொள்கின்றனர். இந்தத் தன்னம்பிக்கை ஆரோக்கியமான விஷயம்தான். அவர்கள் தங்கள் பைக்குகளைப் பேணுவது அன்று ராஜகுமாரன்கள் குதிரைகளைப் பேணுவதற்கு இணையானது. ராஜாக்கள் குதிரைகளைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் கொண்டிருந்தார்கள். உயர்வான தீவனம் பல தொலைவுக்கு அப்பால் கிடைக்கும் பட்சத்தில் அங்கு சென்று வாங்குவதற்கும் அவர்கள் தயங்கவில்லை. அதுபோலத் தங்கள் பைக்குகளின் உதிரி பாகங்களை வாங்குவதற்காக இந்த பைக் காதலர்கள் மாநிலம் தாண்டிப் பயணிக்கிறார்கள். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அர்விந்த், தன்னுடைய பைக்கிற்குத் தரமான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக வெளிமாநிங்களுக்குச் செல்லவும் தயங்க மாட்டேன் என்கிறார். சென்ற முறை பைக் உதிரி பாகம் வாங்குவதற்காக கர்நாடகம் சென்று வந்ததாகச் சொல்கிறார்.

பெரும்பாலும் நடுத்தர இளைஞர்கள்தான் பைக் வாங்குவதைக் கனவாகக் கொண்டு நடக்கிறார்கள். பைக் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் சாதனமாகவும் இருக்கிறது. “தனியாக நடந்து செல்லும்போதோ பேருந்துப் பயணத்திலோ சட்டெனத் தாழ்வு மனப்பான்மை வருவதுண்டு. அது குடும்பப் பின்னணியில் இருந்து வருவதாக இருக்கலாம். ஆனால் பைக் ஓட்டும்போது கிடைக்கும் மன ஆற்றல் வேறு எதிலும் கிடைப்பதில்லை” என்கிறார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ராம்குமார். இவர் பைக்கை அஃறிணையாகப் பார்ப்பதில்லை. ஓர் உயிருள்ள ஜீவனாகவே பைக்குடன் தான் உறவாடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். “விபத்துகளில் சிக்கும்போது என்னைவிட பைக்குக்குத்தான் காயம் அதிகம் இருக்கும். அதற்கு என் மீதுள்ள பிரியம்தான் இதற்குக் காரணம்” எனவும் கூறுகிறார்.

ராம்குமாரின் பேச்சு கேட்க வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதன் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் சிந்திக்கவைப்பவை.

இளைய தலைமுறையினரின் இந்த பைக் காதலை மையப்படுத்தி வந்த பொல்லாதவன் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் நாயகன் தனுஷ் தன் காதலியைவிட ஒரு படி மேலாக பைக்கை நேசிப்பான். இன்றைக்குள்ள தீவிர பைக் காதலுக்கு இந்தப் படம் சிறந்த சான்று. இது மட்டுமல்லாமல் இக்காதலை விளம்பரங்களின் மூலம் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வளர்த்தெடுக்கின்றன. பைக்கை நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாகனம் எனக் குறுக்கிவிட முடியாது. இறக்குமதிசெய்யப்படும் பல லட்சம் விலையுள்ள பைக்குகளின் விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாக ஒரு செய்திக் குறிப்பு கூறுகிறது. இது வசதி படைத்த இளைஞர்களும் பைக்கையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. உள்ளூர்த் தாயரிப்புகளுக்கும் நல்ல சந்தை இருக்கிறது என்றே தொழில் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பைக்கிற்குப் பெயர் சூட்டி அழைக்கும் பழக்கம் பொதுவாக இளைஞர்களிடம் இருக்கிறது. காதலியின் பெயரைத்தான் பெரும்பாலும் சூட்டுகிறார்கள் என்கிறார் அர்விந்த். ராம்குமார் அவருடைய பைக்கிற்கு லஷ்மி எனப் பெயர் சூட்டியுள்ளார். பெயர் சூட்டி அழைக்கும் இயல்பு மரபில் இருந்து வந்ததாகக் கொள்ளலாம். மேலும் பைக் பெண்களைக் கவரக் கூடிய விஷயமாகவும் இருக்கிறது. இளைஞர்களின் பைக் ஆர்வத்தின் அடிப்படையிலே அவர்களின் குணங்களை எங்களால் கணிக்க முடியும் எனப் பெரும்பாலான பெண்கள் கூறுகிறார்கள். ஆனால் பைக் குறித்த பெண்களின் விருப்பம் வெவ்வேறாக இருக்கிறது.

கல்லூரி மாணவியான மகேஸ்வரிக்கு வேகம்தான் பிடிக்கிறது. “பசங்க டிராஃபிக் ஜாம்ல புகுந்து வேகமா போறதை ரசிப்பேன். அப்படிப் போகும் யங்ஸ்டரை எங்காவது பார்த்தால் அவர் என் கண் பார்வையிலேந்து மறையும்வரை அவரையே பாத்துகிட்டிருப்பேன்” என்கிறார் அவர். வேகமாகச் செல்பவர்களுடன் பயணிப்பதைத் த்ரிலான அனுபவம் என்கிறார் மகேஸ்வரி. “பைக்ல மெதுவா போறவங்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி யாரையாவது பாத்தா எரிச்சல் வரும்” என்று அதே எரிச்சல் தொனியுடன் சொல்கிறார்.

விஜியின் கருத்து இதற்கு நேர் எதிராக இருக்கிறது. பைக்கில் வேகமாகச் செல்பவர்களைப் பக்குவம் இல்லாதவர்களாகப் பார்க்கிறார் விஜி. “பைக்கில் செல்வது எனக்கும் பிடிக்கும் என்றாலும் மெதுவாக ஓட்டுபவர்களின் பின்னால்தான் போகப் பிடிக்கும். மெதுவாகச் செல்வதுதான் மனதுக்கு ஆசுவாசம் தருகிறது” என்கிறார் விஜி.

பைக் காதலர்கள் மத்தியிலும் வெவ்வேறு வகையான விருப்பங்கள் இருக்கின்றன. எஞ்சின் சத்தத்திற்காகவும் வேகத்திற்காகவும் பழைய மாடல் பைக்குகளைத் தேடி அலைகிறவர்களும் உண்டு. எரிபொருள் சிக்கனம் தரும் பைக்கைத் தேர்ந்தெடுப்பவர்களும் உண்டு.

விருப்பங்கள் மாறினாலும் கனவு மாறுவதில்லை. இளைஞர்களின் அந்தக் கனவில் நவீன பஞ்சகல்யாணி ஓடிக்கொண்டிருக்கிறது.

இளைஞர்களின் பைக் ஆர்வத்தின் அடிப்படையிலே அவர்களின் குணங்களை எங்களால் கணிக்க முடியும் எனப் பெரும்பாலான பெண்கள் கூறுகிறார்கள்.

புரவி வீரனும் பைக் இளைஞனும்

பைக் மீது ஆண்களுக்கும் பைக் ஓட்டும் ஆண் மீது பெண்களுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கான காரணம் குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர். அசோகன்.

‘‘ஆண்களின் பைக் மோகத்துக்குப் பல காரணங்கள் உண்டு. ஆதியில் மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்ததுமே வேகமாகச் செல்லக்கூடிய எதன் மீதும் அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பிறகு குதிரை மீதேறிச் செல்வது பெருமிதமாகத் தோன்றியது. காற்றைக் கிழித்துப் பறக்கும் குதிரை வீரனைக் கம்பீரத்தின் அடையாளமாகக் கண்டனர். அப்படி ஓர் உணர்வு தருவதால்தான் இளைஞர்கள் இன்று பைக் மீது தீராத மோகத்துடன் இருக்கிறார்கள். காரும் வேகமாகத்தானே செல்கிறது, அதன் மீது ஏன் அத்துணை ஆர்வம் இல்லை என்ற சந்தேகம் எழலாம். கார் என்பது பாதுகாப்பான வாகனம்தான். ஆனால் காற்றைக் கிழித்துச் செல்லும் அனுபவம் பைக்கில் மட்டுமே சாத்தியம்.

பெற்றோரின் அரவணைப்பில் வாழும் ஒரு சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் இந்தச் சமூகத்துக்கு, ‘வளர்ந்துவிட்டேன், நான் இனி சுதந்திரமானவன்’ என்று அறிவிக்க நினைக்கிறான். அதன் வெளிப்பாடே பைக் மோகம். இந்த பைக் மோகத்துக்கு சமூகக் காரணங்களும் உண்டு. ஊடகங்களில் வெற்றிபெற்ற ஓர் ஆணைக் காட்டும் போது அவனைப் பைக்குடன் சேர்த்துதான் காட்டுகிறார்கள். இதனடிப்படையில்தான் பைக் கம்பீரத்தின் அடையாளமாக இருக்கிறது. பெண்களுக்கும் பைக் பிடிக்கும். தங்களால் முடியாத ஒரு இடத்தில் தங்களை இருத்திப் பார்க்க நினைக்கிறார்கள். அதனால்தான் வேகமாக வண்டியோட்டும் இளைஞ னின் பின்னால் அமர்ந்து செல்வதைப் பெண்கள் சாகசமாக உணர்கிறார்கள். சாலையில் வேகமாக வண்டியோட்டும் ஒருவன் மீது கோபம் வராமல் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ஆணின் மூளை எதையுமே விளைவுரீதியாகப் பார்க்கும்போது பெண்ணின் மூளை உணர்வுரீதியாகப் பார்க்கிறது. அதன் விளைவுதான் பைக் ஓட்டும் ஆணின் மீது ஏற்படும் ஈர்ப்பும்.’’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்