பாட்மிண்டன் (இறகுப் பந்து) உலகில் சீனாதான் ஜாம்பவான். அவ்வப்போது பெருஞ்சுவரைச் சாய்த்து ஜப்பான், மலேசியா, டென்மார்க் போன்ற நாடுகளும் வெற்றியைச் சுவைத்து வந்தன. அந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி.சிந்து, பிரனாய் குமார், கிடாம்பி ஸ்ரீநாத் ஆகியோர் அடுத்தடுத்து பெற்றுவரும் வெற்றிகளின் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியாவில் பாட்மிண்டன்
18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பாட்மிண்டன் அறிமுகமானது. இங்கிலாந்தின் பாட்மிண்டன் என்ற கிராமத்தில் பிரபு குடும்பத்தினர் முதன்முதலில் இறகுப் பந்தைக் கொண்டு விளையாடினார்கள். அதனால் இந்த விளையாட்டு பாட்மிண்டன் எனும் கிராமத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்தியாவில் 1850-ம் ஆண்டுக் காலகட்டத்தில் தஞ்சை ராஜ வம்சத்தினர் இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்தினர். அவர்கள் ‘பூப்பந்து’ என்ற பெயரில் விளையாடினர். பிறகு இந்த விளையாட்டு அன்றைய மதராஸ், கல்கத்தா, பம்பாய், இன்றைய பாகிஸ்தான் நகரான பெஷாவர் ஆகிய இடங்களுக்கும் பரவியது. இன்று விளையாடப்படும் பாட்மிண்டனுக்கான விதிமுறைகள் 1873-ம் ஆண்டு கல்கத்தாவில்தான் உருவாக்கப்பட்டன.
ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் இந்தியாவில் விளையாடப்படும் விளையாட்டாக இது இருந்தாலும் உலக அரங்கில் பாட்மிண்டனில் இந்தியா பின் தங்கியே இருந்தது. 1949-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் சர்வதேச பாட்மிண்டன் போட்டியான தாமஸ் கோப்பையில் இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. ஆனால், இந்தியாவைவிடக் குறைந்த பாட்மிண்டன் வரலாறு கொண்ட மலேசியா பல முறை கோப்பையை வென்றுள்ளது.
முதல் வெற்றி
இந்திய வீரர் நந்து எம்.நாடேகர், 1959-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த செலங்கூர் சர்வதேசப் போட்டியில் கோப்பையை வென்றதுதான் இந்தியாவின் முதல் சர்வதேச வெற்றி. அப்போது இந்திய பாட்மிண்டனின் வரலாறு 100 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அதன் பிறகும் இந்த வெற்றி தொடரவில்லை. பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு 1965-ல் ஆசியக் கோபையில் தினேஷ் கன்னா கோப்பையை வென்றார். அடுத்த வெற்றிக்காக இந்தியா 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிரகாஷ் படுகோன் 1980-ல் பாட்மிண்டனின் தாயகமான இங்கிலாந்தில் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபனில் கோப்பையை வென்றார். டென்னிஸின் கிராண்ட்ஸ்லாமுக்கு நிகரானது இந்தப் போட்டி. இதில் இந்தியா அடைந்த வெற்றி பாட்மிண்டன் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதன் பிறகும் இந்தியாவின் வெற்றி தொடரவில்லை.
இந்தப் பின்னணியில்தான் 1996-ம் ஆண்டு இந்திய பாட்மிண்டன் உலகுக்கு அறிமுகம் ஆனார் புலேலா கோபிசந்த். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் இவர். 1990-களுக்கு முன்பிருந்தே பாட்மிண்டன் ஆடிவரும் கோபிசந்த், 1996-ம் ஆண்டு தேசிய பாட்மிண்டன் போட்டியில் அறிமுகமானார். அந்தத் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து 2000-ம் ஆண்டுவரை இந்த வெற்றியைத் தக்கவைத்த பெருமை இவருக்குண்டு. 2001-ம் ஆண்டு நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று படுகோனே சாதனையைச் சமன் செய்தார். இந்த வெற்றிதான் இன்றைய இளம் நட்சத்திரங்களான சாய்னா நேவல், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீநாத், பிரனாய் குமார் ஆகியோர் உருவாகக் காரணமாக இருந்தது.
கோபிசந்த் தாராளம்
அது மட்டுமல்லாமல் ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் இறுதிவரை சென்று இரண்டாமிடம் பெற்றார் கோபிசந்த். ஆனால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை. பாட்மிண்டனிலிருந்து ஓய்வுபெற்றதும் பாட்மிண்டன் பயிற்சி மையத்தைத் தொடங்கினார். இந்தியாவில் சினிமாவுக்கு நிகராக கிரிக்கெட் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் பாட்மிண்டனுக்காக நிதி உதவிசெய்ய யாரும் முன்வரவில்லை. அதற்காக கோபிசந்த் தனது வீட்டையே அடமானம் வைத்தார். தனக்குக் கிடைக்காத பயிற்சியை வருங்கால வீரர்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஹைதராபாத்தில் இந்த மையத்தை அவர் தொடங்கினார்.
மின்னிய நட்சத்திரங்கள்
அவரது பயிற்சியில் உருவான சாய்னா நேவால் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது இந்திய பாட்மிண்டனில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு. இதுதான் இந்திய பாட்மிண்டனுக்காக ஒலிம்பிக்கில் கிடைத்த முதல் பதக்கம். சாய்னாவின் இந்த வெற்றியால் பாட்மிண்டன் என்னும் விளையாட்டின் பக்கம் கவனம் திரும்பியது. டென்னிஸ் மட்டைகளுடன் சுற்றிக்கொண்டிருந்த சிறுவர்கள் பாட்மிண்டன் ராக்கெட்டுடன் சுற்றத் தொடங்கினர். டென்மார்க் போட்டி, சர்வதேச பாட்மிண்டன் போட்டி எனப் பலவற்றில் கோப்பைகளை வென்று சாதனைகளை சாய்னா தொடர்ந்தார். முதன்முறையாக சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முதலிடம் பிடித்தார். சாய்னாவின் ஒவ்வொரு வெற்றியும் சாதனைகள் ஆயின.
சாய்னாவைத் தொடர்ந்து பி.வி.சிந்துவும் கோபிசந்தின் பயிற்சியின் மூலம் உருவானார். வாலிபால் வீரர்களின் மகளான சிந்து கோபிசந்திடம் எட்டு வயதிலிருந்து பயிற்சி எடுத்து வருகிறார். 10 வயதில் செர்வோ கோப்பையை வென்றார். 14 வயதில் அனைத்திந்திய பள்ளிகளுக்கான போட்டியில் தங்கம் வென்றார். 2010-ல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2013-ல் மலேசிய ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதைத் தொடர்ந்து பல போட்டிகளில் அவர் வெற்றிவாகை சூடினார். எல்லாவற்றுக்கும் மகுடமாக 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தொடரும் சாதனை
இந்த வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விளையாட்டு தொடர்பான ஓர் ஆய்வு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக அதிகம் விளையாடப்படும் விளையாட்டாக பாட்மிண்டன் மாறியுள்ளது என்றது. இப்போது சாய்னவோ சிந்துவோ செய்யாத ஒரு சாதனையை கோபிசந்தின் மற்றொரு மாணவரான ஸ்ரீகாந்த் செய்து, பாட்மிண்டன் உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தார். ஒரே வாரத்தில் இரு ஓபன் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 18-ம் தேதி இந்தோனேசிய ஓபன் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த சயகா சாட்டோவை வீழ்த்திப் பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சீனாவின் சென் லாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதன் மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலில் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் 29-வது இடத்திலிருந்தவர் தற்போது முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். ஆனால், “தரவரிசைப் பட்டியல் என் இலக்கல்ல; வெற்றிகள்தான்” எனச் சொல்லும் ஸ்ரீகாந்த், இந்திய ஆண்கள் பாட்மிண்டனுக்குப் புது உற்சாகத்தை அளித்திருக்கிறார். சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் பெற்று தந்த மாயாஜால வெற்றியால் இந்திய பாட்மிண்டனின் வளர்ச்சி ராக்கெட் வேகம் பெறும். இறகுப் பந்து சீற ஆரம்பித்துவிட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago