காதல் மட்டும் போதுமா?

By ஆனந்த் கிருஷ்ணா

இதுவரை வந்த கேள்விகளை வைத்துக்கொண்டு பார்க்கும்போது உறவு என்பது காதல், காதல் முறிவு, பிரிவு, இவை தொடர்பான வேதனை இவை மட்டுமே என்பதாகத் தெரிகிறது. ஏன், பெற்றோருடன் உள்ளது உறவில்லையா? நண்பர்களுடன், சகோதர, சகோதரிகளுடன் உள்ளது உறவு இல்லையா? அவற்றில் சிக்கல்கள் ஏதும் இல்லையா? ஏன் இந்தக் காதலை மட்டும் ஒரேயடியாகத் தூக்கி வைத்திருக்கிறோம்? இவ்வளவு ஆண்டு காலமாக ஒருபுறம் திரைப்படங்களிலும் கதைகளிலும் அதைக் கொண்டாடிவிட்டு, மறுபுறம் அதை ஏதோ பெரும் பாவமாகப் பார்த்து வந்ததன் எதிர்விளைவா? கட்டிவைக்கப்பட்டிருந்த சுதந்திரம் இப்போது தளர்த்தப்பட்டிருப்பதால் கட்டறுத்துக்கொண்டு ஓடும் எதிர்வினையா? உறவு என்னும் நிறப்பிரிகையின் மற்ற வண்ணங்களும் முக்கியம்தானே. அவை பற்றியும் கேள்விகள் வரலாமே…

மனித உறவு பற்றியும், அதன் ஆழம் பற்றியும், அது தொடர்பான மனச் சிக்கல்கள் பற்றியும் தெரிந்துகொள்வது இந்தத் தலைமுறையினருக்கு அவ்வளவு முக்கியமாகப்படவில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால் அதுபற்றிய தெளிவு அடையும் வரை சிக்கல்களும் வலியும் வேதனையும் தொடர்ந்துகொண்டு இருப்பது தவிர்க்க முடியாதது.

நான் 2009லிருந்து ஒரு பையனைக் காதலிக்கிறேன். இந்த ஆண்டு ஆகஸ்ட்வரை எங்கள் காதலில் எந்தப் பிரச்சினையையும் இல்லை. நடுவில் ஒருமுறை எங்களுக்குள் ஒரு சண்டை வந்தது. அதற்குப் பிறகு அது சரியாகிவிட்டது. ஆனால், இப்போது அவன் பிரிந்துவிடலாம் என்று சொல்கிறான். அவனுக்கு இப்போது ஒரு புது கேர்ள் ஃப்ரண்டு இருக்கிறாள். நான் அந்தப் பெண்ணிடமும் என் காதலனை விட்டுவிலகிவிடும்படி சொல்லிப் பார்த்தேன். திடீரென்று அவன் பிரிந்துவிடலாம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் காதலிக்கும் போது அவன்தான் என்னை அதிகமாக காதலித்தான். என்னால் அவனை மறக்க முடியவில்லை. அவன் திரும்பி வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

‘நாங்கள் காதலிக்கும்போது அவன்தான் என்னை அதிகமாகக் காதலித்தான்,’ என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? நீங்கள் அப்போது அவ்வளவு தீவிரமாகக் காதலை உணரவில்லையா? ஐந்து ஆண்டு காலம் உங்கள் மனத்தில் என்னதான் நடந்துகொண்டிருந்தது? இவ்வளவு நீண்ட காலத்தில் ஒரே ஒரு முறைதான் சண்டை வந்ததா? எதனால் உங்கள் காதலனுக்கு இன்னொரு பெண் மீது நாட்டம் ஏற்பட்டது என்று யோசித்துப் பார்த்தீர்களா? பிரிந்துவிடலாம் என்பதற்கு அவர் என்ன காரணம் சொல்கிறார்? அவர் அவ்வளவு தீவிரமாகக் காதலிக்கும்போது தீவிரம் காட்டாத நீங்கள் இப்போது அவர் பிரிந்துவிடலாம் என்று சொல்லும்போது ஏன் அந்தப் புதிய கேர்ள் ஃப்ரண்டிடம் சென்று கேட்கும் அளவுக்குத் தீவிரம் காட்டுகிறீர்கள்?

இப்போதுகூட என்ன நடந்தது, ஏன் அது நடந்தது, காரணம் என்ன என்று தெரிந்துகொள்வதில் அக்கறை காட்டாமல் ‘அவன் திரும்பி வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றுதான் கேட்கிறீர்கள். உறவு என்பது என்ன, அதன் உள்ளியக்கம் என்ன? இரண்டு மனங்களுக்கிடையில் என்னதான் நடக்கிறது? என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது உங்களுக்கு முக்கியமாகவே படவில்லையா? உங்கள் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தை வைத்துக்கொண்டு மனித மனம் பற்றியும் உறவு பற்றியும் தெரிந்துகொள்ளத் தொடங்குங்கள்.

காலம் பின்னோக்கிச் செல்வதில்லை. உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பாருங்கள். வாழ்க்கை என்பது வெறும் நிகழ்வு வரிசை மட்டுமல்ல. அனுபவக்களம். அதில் நடப்பதை வைத்துக்கொண்டு உங்களையும் உங்கள் வாழ்க்கை பற்றியும் புரிந்துகொள்ள முயலுங்கள்.

என்னுடைய ஐந்து ஆண்டு கால நட்பு ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் காதலாக மாறியது. என் வீட்டிலும், என் காதலன் வீட்டிலும் இதைத் தெரிவித்தோம். எங்கள் இருவர் வீட்டிலும் எங்கள் காதலை முதலில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இப்போது என் காதலன் வீட்டில் ஜாதகத்தைக் காரணம் காட்டித் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். என்னால் அவனை மறக்க முடியவில்லை. தற்கொலை எண்ணம் அதிகமாக வருகிறது. பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது. எப்போதும் தனிமையில் இருப்பதைப்போல உணர்கிறேன்.

இதில் சில விஷயங்கள் புரியவில்லை. ஐந்து ஆண்டு கால நட்பு என்கிறீர்கள். அதன் ஆழம் என்ன? என்னதான் நடந்தது அந்த ஐந்து ஆண்டுகளில்? ஆறு மாதங்களுக்கு முன்னர் காதலாக மாறியதும் விரைவிலேயே அது முடிந்து போனது எப்படி? முதலில் உங்கள் காதலை ஏற்றுக்கொண்ட அவரது பெற்றோர் திடீரென்று மனம் மாறியது ஏன் என்று புரியவில்லை. ஜாதகம் என்பது திருமணத்தைத் தவிர்ப்பதற்கு ஒரு வெறும் சாக்காகத்தான் தோன்றுகிறது. இதில் உங்கள் காதலரின் பங்கு என்ன என்பது பற்றி நீங்கள் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. நீங்களும் அந்த முடிவில் மாற்றம் ஏதும் கோரவில்லை என்பதுபோல்தான் தெரிகிறது. அதை எப்படித் தாங்கிக்கொள்வது என்பதுதான் உங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் படுகிறது. உங்கள் பிரச்னை உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமைதான் என்று தோன்றுகிறது.

இந்த உறவு தனிமையில் உங்களைக் கொண்டுவந்து தள்ளியிருக்கிறது. அதாவது உங்களை உங்களிடமே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இந்தத் தனிமையே ஏன் உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கான தொடக்கமாக இருக்கக் கூடாது? உறவுகளில் ஏற்படும் வலிதான் வளர்ச்சியின் ஆதாரமாகச் செயல்படுகிறது. கண்களையும் மனத்தையும் நன்றாகத் திறந்துவைத்துக்கொண்டு பாருங்கள். சில காலம் கழித்து இந்த வேதனைக்கு நீங்களே நன்றி சொல்வீர்கள். உங்களால் தனித்து இதை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் உளவியல் ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்