விமானத்திலிருந்து கொட்டும் கடும் மழை

By ரோஹின்

அதிசய மக்கள் கழகத்தின் அமைச்சர் லொள்ளூர் லூஜுவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. எப்போதுமே ஏதாவது அதிரிபுதிரியான திட்டத்தை அறிவிப்பதில் அவருக்கு இணையாக உலகத்தில் யாருமே இல்லை. ‘இந்தக் கடுங்கோடையைக் கடக்க என்ன செய்வது’ என்று இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் அவரைப் பொளந்துவிடுவார்கள். ஏதவது ஒரு நல்ல திட்டம் கிடைக்க வேண்டுமே என்ற பதற்றம்தான் அவருக்கு. இந்த நேரம் பார்த்துத் தன் உதவியாளர் வெள்ளைச்சாமியை வேறு காணவில்லையே எனத்தான் அவர் பதறிக்கொண்டிருந்தார்.

அடிப்படையில் லொள்ளூர் லூஜு கல்வி கற்காதவர். அவர் இரண்டே முறைதான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். ஒருமுறை சிறுவனாக இருந்தபோது, கடுமையான மழையில் ஒதுங்கியது ஓர் உயர் தரமான பள்ளியில். அடுத்ததாக, அவர் அமைச்சரானபோது தனது கிராமத்துப் பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறார். மற்றபடி கல்வி நிலையங்களில் தனது பாதம் படாமல் பார்த்துக்கொள்வார். எல்லாம் நல்லபடியாகத்தானே போகிறது தான் அங்கு ஏன் போக வேண்டும் என்ற நல்ல மனம்தான் காரணம். மற்றபடி அமைச்சர் பத்தரை மாற்றுத் தங்கம்.

அவருடைய கட்சித் தலைவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எல்லோரும் மண் சோறு உண்டு பிரார்த்தனை செய்தனர். லொள்ளூர் ராஜுவுக்கோ மனம் பொறுக்கவில்லை. தங்கத் தலைவர் உடல்நலம் தேற மண் சோறா சாப்பிடுவது என்று வெகுண்டெழுந்து பொன் சோறு சாப்பிட்டுப் பிரார்த்தனை செய்தவர் அவர். சரி, விஷயத்துக்கு வருகிறேன். மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற அவருடைய திட்டங்களை எல்லாம் அவர் வகுப்பது கிடையாது. அவருடைய உதவியாளர் வெகுளி வெள்ளைச்சாமிதான் அந்தத் திட்டங்களின் மூளையாகச் செயல்படுவார். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். பணம் பணத்தோடு சேரும்; அறிவு அறிவோடு சேரும் என்பார்களே அதைப் போல் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தது ஒன்றும் பெரிய அதிசயமல்ல.

வெகுளி வெள்ளையும் லேசுப்பட்டவரல்ல. அவர் பள்ளியில் படித்தபோது, கணித ஆசிரியர் ஒரு முறை, ‘ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை இருவருக்குச் சமமாகப் பிரித்துக்கொடுக்க முடியுமா’ என்ற கேள்வியை எழுப்பினார். ‘ஐந்து ரூபாயை மூன்று பேருக்குச் சமமாக கொடுப்பது வேண்டுமானால் சிரமம். இரண்டு பேருக்குக் கொடுப்பது என்ன கஷ்டமா ஆளுக்கு இரண்டரை ரூபாய் கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது’ என்றனர் மாணவர்கள். ‘இல்லை இல்லை சில்லரை மாற்றிக் கொடுக்கக் கூடாது’ என்று சிவபெருமான் போல் சொல்லிவிட்டார் ஆசிரியர்.

வகுப்பறையில் பயங்கர அமைதி. சற்று நேரம் யோசித்த வெள்ளைச் சாமி சரேலென்று சென்றான். ஆசிரியருடைய கையிலிருந்து ஐந்து ரூபாய் நோட்டைப் படக்கெனப் பிடுங்கி, சரி பாதியாகக் கிழித்தான். ஆசிரியர் அதிர்ந்துபோய் நின்றபோது, ‘இப்போது இதை ஆளுக்கொன்றாகக் கொடுத்துவிடலாம் சார், சில்லரை மாற்றக் கூடாது என்றுதானே சொன்னீர்கள் கிழிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே’ என்றான் பெருமையுடன் வெள்ளை. ஆசிரியர் வெலவெலத்துப் போய்விட்டார். இது வெள்ளையின் சமயோசிதப் புத்திக்கு ஒரு சான்றுதான். இப்படிப் பலப் பல சம்பவங்கள் உண்டு.

சுகாதாரத் துறை அமைச்சராக லூஜு இருந்தபோது, அவருடைய நாட்டில் சர்க்கரை வியாதிக்காரர்கள் பெருகிக்கொண்டே இருந்தார்கள். மக்கள் துயரத்தைப் பார்க்க லூஜுவுக்குத் தாங்காது. அதில் அவர் அவருடைய கட்சித் தலைவரைப் போல. ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும் எனத் துடியாக இருப்பார். வெள்ளையுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் லூஜு. சர்க்கரை நோய் எதனால் வருகிறது அதனால் என்ன பாதிப்பு என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார் வெள்ளை. அதிகம் சாப்பிடுவதுதான் சர்க்கரை நோய்க்கு ஆதாரச் சிக்கல் என்பதை வெள்ளை கண்டுகொண்டார். எனவே, தீவிரமாக யோசித்தவர் லூஜுவுடன் தன் யோசனையைச் சொன்னார். அதைக் கேட்டு லேசாக லூஜுவே அதிர்ந்தார்.

ஆனால் எல்லாம் பரிசோதனை முயற்சிதானே. முயற்சிசெய்து பார்ப்போம். வென்றால் நல்லது தானே என்றார் வெள்ளை. லூஜுவுக்குச் சரி என்று தான் பட்டது. மூக்கால் உண்ணும் திட்டம் தான் அது. வாய் வழியே உண்பதால் அதிகம் உண்கிறோம். சர்க்கரை நோயால் படாதபாடு படுகிறோம். மூக்கால் உண்டால் குறைவாகத் தான் உண்ண முடியும் ஆகவே அதிகச் சர்க்கரையும் உருவாகாது எனவே சிக்கல் இல்லை. ஆனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்தது போல் வெற்றிபெறவில்லை. ஆனால் புதுமையான முயற்சியை மேற்கொண்ட லொள்ளூர் லூஜுவைப் பற்றிய செய்தி உலகப் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்தது.

வெள்ளை வந்துவிட்டார். அமைச்சர் அவரைக் கடிந்துகொண்டார். ஆனால், புன்னகைத்தவாறே கடும் மழை வருவதற்கான உத்தியைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அமைச்சர் வெள்ளையிடம் என்னவென்று கேட்டார். அவர் காதோடு காதாகச் சொன்னார் வெள்ளை. அதைக் கேட்ட அமைச்சரின் முகத்தின் ஒரு பெருமிதப் புன்னகை தோன்றியது. நீதான்டா நம்மாளு. உன்னைப் போன்றவர்களால்தான் தான் நமது அதிசய மக்கள் கழகம் மக்களிடைய பெரும் வரவேற்புப் பெறுகிறது என்பது போல் அவரைப் பார்த்தார். உடனடியாகச் செய்தியாளர் கூட்டத்துக்குச் சென்றார்.

எதிர்பார்த்தது போலவே செய்தியாளர்கள் அமைச்சருக்காகக் காத்துக் கிடந்தார்கள். யாருடைய மைக்கை நீட்டுவது என்பதில் பலத்த போட்டி. ஒரு மைக் கிட்டத்தட்ட லூஜுவின் முகவாயைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவு மைக்கை நெருக்கமாக வைத்த செய்தியாளர் தனது ஆசிரியரிடம் தனக்குக் கிடைக்கப்போகும் பாராட்டை எண்ணி மெய்மறந்துவிட்டார்.

முதல் கேள்வியே, ‘நாட்டில் நிலவும் கடும் வறட்சியை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்’ என்பதுதான். எல்லோரையும் அமைதியாகப் பார்த்த லூஜு. ‘மழை எப்படி வருகிறது’ என்று கேட்டார். இப்படி ஒரு கேள்வியை லொள்ளூர் லூஜுவிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று ஒரு செய்தியாளர் தன் அலுவலகத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் தோழருக்கு போன் செய்து மழை எப்படிப் பெய்கிறது என்பதை கூகுளில் பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் கூட்டத்திலும் விவரம் அறிந்த சிலர் இருந்தார்கள் போல. விடை சொன்னார்கள். ‘கடல் நீர் தானே மேலே போய் மழையாகக் கொட்டுகிறது அதில் யாருக்கும் சந்தேகமில்லையே’ என்று கேட்டுவிட்டு நிறுத்தினார். எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள். ஆகவே, கடல் நீரைப் பெரிய பெரிய தொட்டிகளில் நிரப்பி அவற்றை விமானத்தில் ஏற்றி, அதை வானில் இருந்து கொட்டப்போகிறோம். இப்போது வானிலிருந்து வருவது மழைதானே, அது தூய நீர் தானே? எப்படி இந்தத் திட்டம் என்பது போல் பார்த்தவர் இந்தத் திட்டத்துக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்