சவுண்ட் பார்ட்டீஸ்

By கா.இசக்கி முத்து

ஒவ்வொரு இசையமைப் பாளருக்குப் பின்னால் நிறைய ஒலிப் பொறியாளர்கள் (ஆடியோ இன்ஜினியர்ஸ்) இருப்பார்கள். அவர்களுடைய பணிதான் ஒவ்வொரு படத்துக்குமே முக்கியம். அவர்களில் இன்றைக்கு கோலிவுட்டில் ‘ஹிட்’ லிஸ்டில் இருப்பவர்கள் ஜெஹோவாசன் அழகர் மற்றும் ஸ்ரீஹரி. இசையமைப்பாளர் கம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படங்களுக்கு இவர்கள்தான் ‘சவுண்ட்’ கொடுக்கிறார்கள்.

அப்படி அவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று அறிய ஜி.வி.பிரகாஷின் ஸ்டூடியோவைக் கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். இருவரும் ‘4ஜி’ பட இயக்குநரான வெங்கட் பக்கரோடு விவாதித்துக்கொண்டிருந்தார்கள். “வணக்கம் பிரதர்ஸ்... ‘இளமை புதுமை’க்காக உங்க ஃபீல்ட் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..” என்று கேட்டதுதான் தாமதம். ஒவ்வொருவராக லைன் கட்டி வந்தார்கள். முதலில் ஸ்ரீஹரி...

“நான் ஒரு இசை தயாரிப்பாளர். ஜி.வி.பிரகாஷிடமிருந்து ஒரு டியூன் வரும். அந்த டியூனை இசை வடிவத்துக்கு எப்படியெல்லாம் மாற்ற வேண்டும், நிஜ இசைக் கலைஞர்களை வாசிக்கவைத்துப் போட‌லாமா என்பன போன்ற விஷயங்களை ஜி.வி.யோடு பேசி முடிவுசெய்வேன். இயக்குநர்களும் தங்களுடைய ஐடியாக்களைச் சொல்வார்கள். டியூனை முழுமையான இசையாக உருவாக்கி ஜி.வி.க்கு அனுப்புவேன். அது அவர் எதிர்பார்த்த மாதிரி உள்ளதா, மேலும் எதுவெல்லாம் சேர்க்கலாம் என்று சொல்வார். நாங்க இரண்டு பேரும், ஒரு பாடலுக்கான இசையை உருவாக்கி, இயக்குநருக்கு அனுப்பி அதை ஃபைனல் செய்வோம்.

இசை உருவாக்கம் முடிந்தவுடன், பாடகர்கள் வருவார்கள். அவர்களுக்கு எப்படிப் பாட வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்து, படத்தில் பாடல் வரும் தன்மையை விளக்கிப் பதிவு செய்வேன். அதனை வைத்துப் படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவார்கள். அங்கு சென்றவுடன் சில மாற்றங்கள் வரும். அதனைச் சேர்ப்பேன். எந்த ஒரு மாற்றமுமில்லை என்றால், இசை வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பாடலை இறுதி செய்து மிக்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவேன். பாடல்களைத் தயார் செய்து மிக்ஸ் செய்வது என்னுடைய பணி.

நானும் ஜி.வி.யும் சுமார் 20 வருட நண்பர்கள். சிறுவயதில் ‘சமர்ப்பன்’ என்ற இசைக் குழுவில் இருந்தோம். அதில் ஜி.வி. கீபோர்ட் ப்ளேயர், நான் ட்ரம்ஸ் வாசிப்பேன். ஒரு கட்டத்தில் பொறியாளராகப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜி.வி. போன் செய்து ‘படம் பண்ணலாம்னு இருக்கேன்டா வர்றியா’ எனக் கேட்டார். அவ்வளவுதான். படிப்பை விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்பவர், கனடா சென்று இசை தொடர்பான படிப்பைப் படித்துள்ளார். படங்களில் ‘ரெக்கார்டிங் இன்ஜினியர்ஸ்’ மற்றும் ‘மிக்ஸிங் இன்ஜினியர்ஸ்’ என்று இவர்களின் பெயர்கள் வரும்.

“இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. இங்கு வரும் இயக்குநர் நண்பர்களோடு இசை உருவாக்குவதே எனக்குப் பிடித்தமான வேலை. ஈகோ இல்லாமல் சந்தோஷமாகப் பணிபுரிவோம். நான், ஜோ, ஜி.வி. மூவருமே நண்பர்கள் என்பதால், எங்களுடைய எண்ண ஓட்டங்கள் ஒன்று போலத்தான் இருக்கும். மிகக் கடினமாக உழைத்த படம் என்றால் ‘மதராசப்பட்டினம்’ தான். அப்படத்தின் பாடல்களுக்காக சிம்பொனி கால்ஷூட் மட்டும் 12 வரை போனோம்” என்று சொல்லி நிறுத்த, அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார் ஜெஹோவாசன் அழகர்.

“படத்தின் பின்னணி இசைக்கு நான் முழுப் பொறுப்பு. எந்தக் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் அல்லது தீம் மியூசிக் பின்னணியில் இருக்க வேண்டுமா போன்ற விஷயங்களை ஜி.வி.பிரகாஷ் சொல்லிவிடுவார். தனது படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என இயக்குநரும் சொல்வார்.

சில படங்களுக்குக் காட்சியமைப்பு ஒன்று சொல்லும், ஆனால் இயக்குநர்கள் இக்காட்சி இந்த விஷயத்தைச் சொல்வது போன்று பின்னணி இசை வேண்டும் எனச் சொல்வார்கள். அதனால் ஒரு சில படங்களில் காட்சியமைப்புக்குப் பொருந்தாத வகையில் பின்னணி இசை இருக்கும். ஜி.வி. முழுப்பின்னணி இசையையும் கொடுத்துவிடுவார். அதனைக் காட்சியமைப்புக்குத் தகுந்தவாறு நாங்கள் பொருத்துவோம். அந்த இசையை உருவாக்குவது அனைத்துமே ஜி.வி.பிரகாஷ்தான். அந்த இசைக்குத் தேவையான வாத்தியங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் தேர்வு செய்து, இசையை உருவாக்கி அதனைக் காட்சிகளுக்குத் தகுந்தவாறு நான் பொருத்துவேன்.

அதே போல, பாடல்களுக்கு இறுதி வடிவம் கொடுத்து மிக்ஸ் பண்ணுவேன். பாடல்கள் உருவாக்கத்தில் சுமார் 200 ட்ராக்குகள் உள்ளடக்கி இருக்கும். ஆனால், இறுதி வடிவமாக ஒவ்வொன்றையும் அழகுபடுத்தி ஒன்றாக்கிப் பாடல்களுக்கு இறுதி வடிவம் கொடுப்பேன். பாடகர்கள் பாட வரும் போது, அவருடைய குரலுக்கு ஏற்ப மைக் எங்கிருக்க வேண்டும் உள்ளிட்டவற்றை முடிவு செய்வேன்” என்பவர், தான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்துதான் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

“சினிமாவில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற எண்ணமில்லை. தற்போது செய்யும் பணிகளையே தெளிவாகச் செய்ய வேண்டும் அவ்வளவுதான்” என்று தன்னடக்கம் காட்டுகிறார் அழகர். இவர்கள் இருவருக்கும் ‘டால்பி அட்மாஸ்’ தொழில்நுட்பத்தில் கால்பதிக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கட்டத் திட்டம்!

“இப்போது நாங்கள் பெரும்பாலும் டீ.டி.எஸ். மிக்ஸிங் தொழில்நுட்பத்தில்தான் இயங்குகிறோம். அதைத் தாண்டி, ‘டால்பி அட்மாஸ்’ மிக்ஸிங் முறைக்குச் செல்ல நினைக்கிறோம். நிறைய இயக்குநர்கள் அதையும் நாங்களே செய்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். எனவே அதுதான் எங்கள் அடுத்த டார்க்கெட்” என்று சப்தமாகச் சொல்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்