காதல் வழிச் சாலை 13: எனக்கு 33 அவருக்கு 26

By மோகன வெங்கடாசலபதி

எனக்கு ஒரு மின்மடல் வந்திருந்தது. “என் வயது 33. தகவல் தொழில்நுட்பப் பொறியாளர். என்னுடன் பணிபுரியும் இளைஞரைக் காதலிக்கிறேன். என்னைவிட ஏழு வயது சிறியவரான அவரும் என்னை மனப்பூர்வமாகக் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். எங்களுடையது, நிபந்தனையற்ற காதல் (Unconditional love). சமூகம் எங்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. திருமணமான பிறகு சில ஆண்டுகளில் அவர் மாறிவிடுவாரா? எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? இது போன்ற திருமணங்கள் இயற்கையை மீறியவையா?” இதுதான் அந்தப் பெண்ணின் கேள்வி. இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மடலில் உறுதியும் தெளிவும் இருந்தன. காதலுக்கு அவர் வைத்திருக்கும் வரையறை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அன்புத் தோழி… காதலின் முதல் தேவை அசைக்க முடியாத நம்பிக்கை. அது உங்களிடம் இருப்பதாகவே உணர்கிறேன்.

வரையறுக்கப்பட்ட வட்டத்தை விட்டு விலகுபவர்கள் ஒன்று புத்திசாலிகளாகவும் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். அல்லது மன ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பக்கவாட்டுச் சிந்தனை உள்ள யாருமே முதலில் சமூகத்தால் எள்ளி நகையாடப்படுவார்கள். செல்லும் பாதையில் தெளிவும் எடுத்து வைக்கும் அடிகளில் உறுதியும் கொண்டிருந்த எவருமே இலக்கை அடையாமல் இருந்ததில்லை.

காலம் மாறிப்போச்சு

ஆண் எப்போதுமே குடும்பத் தலைவனாக முன்வைக்கப்படுபவன். நாகரிகம் வளர்வதற்கு முன்பாக குடும்பப் பாதுகாப்பு என்பது ஆணின் உடல் வலிமை சார்ந்த ஒன்றாகவும் கருதப்பட்டுவந்தது. அப்போது பெண் வீட்டுக்குள் இருந்தாள். அதனால் அவன் சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிதலுடன் இருந்து குடும்பத்தை நடத்திச் செல்லும் ஒரு செயல் அலுவலராகப் பெண் இருந்தாள். ஆக, தன்னைவிட வயதில் இளைய பெண்ணை மணம் செய்வது வழக்கத்தில் இருந்திருக்கலாம்.

பெண்ணின் பூப்படையும் வயது, அவர்களின் மன முதிர்ச்சி, பேறு பாக்கியம் முடிவடையும் காலம் - இப்படிப் பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிறார்கள். பல தளங்களில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் பதவிகளிலும் அதிகாரத்திலும் இருக்கிறார்கள். இரண்டு சம்பளம், இரட்டிப்பு நிம்மதி என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. வயது குறைவான பெண்ணை மணப்பது என்பது ஒரு பழக்கமாகத்தான் இருந்திருக்கிறது. சட்டமாக ஆக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் விரும்பினால் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

நாலு பேர் என்ன சொல்வார்கள்?

சமூகத்தை எப்போதும் நம்மால் திருப்திப்படுத்த முடியாது. தர்க்கரீதியில் ஒரு விஷயத்துக்கு விளக்கம் தேடுவதைவிட, தார்மீகரீதியில் அதை அணுகுவது அறிவுப்பூர்வமானது.

ஒரு ஊரில் மாடு புனிதமாகக் கருதப்படுகிறது, வழிபடப்படுகிறது. பக்கத்து ஊரில் அது மதிய உணவுக்கான தொடுகறியாக இருக்கிறது. ஒரு கட்சித் தலைவரைத் தூக்கியெறியும் சமூகம், அடுத்த தேர்தலில் அவரைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. சமூகம் பல வண்ணங்களைக் கொண்டது. நம்மை அது குழப்பிவிடாமல், நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டுகள் பல கழிந்த பிறகு, நீங்கள் வெற்றிகரமான தம்பதியராக இருக்கிறீர்களா என்பதைத்தான் சமூகம் பார்க்குமே தவிர, உங்கள் வயது வித்தியாசத்தைப் பார்த்துக்கொண்டிருக்க அப்போது யாருக்கும் நேரமிருக்காது.

இல்லம் சங்கீதம்

உடல் இயங்கியல் ரீதியாகப் பார்ப்போம். மாதவிடாய் நிற்கும் காலம் சராசரியாக 48 வயது. அதாவது ஒரு பெண்ணின் கருத்தரிப்புக்கான சாத்தியக்கூறுகள் குறைவது மாத்திரமல்ல… தாம்பத்தியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் குறையும் பருவமும் அதுதான். அதன்படி உங்களுக்கு இன்னும் 15 ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் உங்கள் வருங்கால கணவரின் இப்போதைய வயது 26. இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 41-வது வயதில் இருப்பார். வாழ்க்கை நாற்பது வயதில்தான் ஆரம்பிக்கிறது என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

அது உண்மையோ பொய்யோ ஆணுக்கு நாற்பது வயதெல்லாம் அவ்வளவு ஒன்றும் முடியாத வயதல்ல. அப்போது சம்சார வீணையை மீட்டுவதில் இருவருக்கும் ஒரு ஸ்வர பேதம் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாலியல் திருப்தி மட்டுமே வாழ்க்கையல்ல என்பதும் உண்மைதான். ஆனால் பாலியல் திருப்தி இல்லாத வாழ்க்கையும் நிறைவற்றதே. அளவுகள் மாறலாம். ஆனால், தேவை மாறாது. அதை அனுசரித்துக்கொள்ளும் மனநிலை இருவருக்கும் இப்போதே இருக்க வேண்டும்.

யார் சொல்லி யார் கேட்பது?

அடுத்து மன முதிர்ச்சி. இயல்பாகவே பெண்கள் ஆண்களைவிட உடலளவில் மாத்திரமல்ல, மனதளவிலும் சீக்கிரம் முதிர்ச்சியடைந்துவிடுகின்றனர். அவர் உங்களுக்குச் சொல்வதைக் காட்டிலும் நீங்கள் அவருக்குச் சொல்லும் ஆலோசனைகள் கூடுதலாக இருக்கும். அதை அவர் விரும்பி ரசித்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. “நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது? எனக்கும் எல்லாம் தெரியும்” என்று அவர் நினத்துவிட்டால், நெருடல் ஆரம்பித்துவிடும்.

பெண்ணின் அறியாமையை ரசிக்கும் ஆண்கள் நிறைய உண்டு. அது காதலையும் அதிகரித்து தாம்பத்திய சங்கீதத்தை மேலும் இனிமையாக்க வல்லது. ஆனால், உங்கள் விஷயத்தில் அவர் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பளிப்பவராகவும் அதிலெல்லாம் ஈகோ பார்ப்பவராகவும் இருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதனால்தானே உங்கள் காதல், கல்யாணம்வரை வந்திருக்கிறது! குழந்தை குறித்த திட்டமிடலும் உங்கள் திருமணத்தின் முக்கிய அம்சம். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே, அது குறித்து முடிவெடுப்பது நல்லது.

காதலுக்கு நாம்தான் பொறுப்பு

மற்றபடி காதல் திருமணங்களுக்கே உரித்தான பல பிரச்சினைகள் எல்லாருக்கும் பொதுவானதே. பெற்றோர் பார்த்து செய்துவைத்த கல்யாணத்தில் சிக்கல் வந்தால் அவர்களிடம் போய் அழலாம், முறையிடலாம். காதலித்து, சில பல எதிர்ப்புகளை மீறி மணந்து அதில் சிக்கல்கள் வந்தால், வேறு யாரிடமும் சென்று முறையிட முடியாது. “நாங்கதான் அப்பவே சொன்னோமே” என்று உறவினர்கள் நீட்டி முழக்குவார்கள். சொல்லப்போனால் காதல் மணம் புரிபவர்களுக்குப் பொறுப்புணர்வு அதிகமாக இருக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலின் உச்சம்தான் காதல் திருமணத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவீடு.

நான் பல முறை சொல்லியிருக்கிறேன். காதலிக்கும்போது இருக்கும் வேகம், மோகம் எல்லாம் அப்படியே இருக்காது. கண்டிப்பாக சில ஆண்டுகளுக்குப் பிறகு குறையத்தான் செய்யும். அது இயல்பு என்று உளவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டதே. அப்படிக் குறையும்போதுதான், இயற்கை நம்மை வேறு மாதிரி அணுகி அந்த உறவின் மெல்லிய இழை அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. உதாரணம் குழந்தை. ஆம், மன்மதன் அம்பு மழுங்க ஆரம்பிக்கும்போது மழலையின் அழுகை அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது.

பிள்ளைப் பேற்றை அனுபவிக்கும் ஆனந்தத்தில் ஒருவரின் தவறுகளை மற்றவர் மன்னித்துப் பின் மறந்தும் விடுவார்கள். வாழ்வில் ஒரு மோகம் குறையும்போது மற்றொன்று உள்ளே வரும். ஒன்றில் இருந்து விடுபட முயலும்போது, இன்னொன்று வந்து சேரும். தொடர்ந்த அந்தப் பொறுப்புகள் மூலமாக வாழ்க்கை தொய்வின்றி இயற்கை அன்னையால் வழி நடத்தப்படும்.

கணவன், மனைவியிடம் பரஸ்பரம் சரணாகதி அடைவது என்பது ஒரு மாபெரும் சூத்திரம். இதை அறிந்துகொண்ட காதலர்கள் பூட்டிய அறைக்குள் பிரளயமே வந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். இரண்டு பேரால் ஒரு அறைக்குள் வைத்து தீர்த்துக்கொள்ள முடியாத பிரச்சினை, எத்தனை பெரிய மன்றத்தில் வைத்துப் பேசினாலும் தீராது என்பதை உண்மையான தம்பதிகள் உணர்ந்திருக்க வேண்டும். ஆம்… உங்கள் இருவருக்குமான வாழ்க்கை உங்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியம். மற்றவர்களுக்கு அது புரியாது, புரிய வேண்டிய அவசியமும் இல்லை.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்