காணவில்லை பால் பேட்மிண்டன்!

By ந.சந்தனச்செல்வி

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் தங்கத்திற்கு முயற்சித்து வெள்ளியை வென்றிருக்கிறார் பி.வி.சிந்து. இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி!

அதேவேளையில் டென்னிஸ், ஷட்டில்காக் என்று ‘ராக்கெட் பேட்' விளையாட்டுகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ‘பால் பேட்மிண்டன்' விளையாட்டுக்கு முற்றிலும் இல்லை. இத்தனைக்கும் ராக்கெட் பேட் விளையாட்டுகள் அனைத்துக்கும் பால் பேட்மிண்டன்தான் தாய்.

பேட்மிண்டன் என்ற வார்த்தை தொடக்கக் காலத்தில் பால் பேட்மிண்டன் விளையாட்டை மட்டும்தான் குறித்துவந்தது. ஆனால் இன்றைக்கு அது ஷட்டில்காக் ஆட்டத்தைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

தஞ்சையில் ராஜாக்கள் காலத்தில் பூவைப் பந்தாகச் சுருட்டி விளையாடியதைப் பார்த்து பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய விளையாட்டுதான் பால் பேட்மிண்டன். தமிழகத்தில் உருவாகிய இந்த விளையாட்டை இப்போது ஆடுபவர்கள் மிகவும் குறைவு. ஆதரிப்பவர்கள் அநேகமாக இல்லையென்றே கூறலாம்.

மணிதர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்துள்ள ‘விளிம்புநிலையில் ஒரு விளையாட்டு' என்ற ஆவணப்படம், தமிழ்நாட்டில் தற்போது பேட்மிண்டன் விளையாட்டின் நிலை என்னவென்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை மணி தர் இயக்கியுள்ளார்.

இன்றைக்கு கிரிக்கெட்டில் டி.என்.பி.எல். போட்டிகள் நடப்பதைப் போன்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டம்தோறும் பால் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இரண்டு அணிகளை வைத்திருந்தது. மதுரை ஃபைவ்ஸ், போடி ஜமீனின் ஆதரவில் பங்கஜம் ஃபைவ்ஸ், சேலத்தில் ஒரு பஸ் உரிமையாளரின் ஆதரவில் பவானி ஃபைவ்ஸ் என்று பல அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்திருக்கின்றன.

ஒவ்வொரு அணியும் ஒரு விளையாட்டு வீரரை ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அந்தக் காலத்திலேயே ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் பெற்ற வீரர்களெல்லாம் உண்டு.

விளையாட்டு மைதானத்திற்குள் வீரர்களே நுழைய முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீரர்களை யானையில் அழைத்துச் சென்ற காட்சிகளையெல்லாம் முன்னாள் விளையாட்டு வீரர்கள் பிச்சை, கலீல் ஆகியோர் அந்த ஆவணப்படத்தில் நினைவுகூர்கிறார்கள்.

பால் பேட்மிண்டன் ஆட்டத்தில் பந்தின் வேகம் அதிகமாக இருக்கும். அதோடு ஒப்பிடும்போது டென்னிஸ் ஆட்டத்தில் பந்தின் வேகம் குறைவு. ஷட்டில்காக் ஆட்டத்தில் இன்னமும் குறைவு. எனவே பால் பேட்மிண்டன் விளையாடிப் பழகியவர்களுக்கு மற்ற ராக்கெட் பேட் விளையாட்டுகள் அனைத்தும் ஆடுவதற்கு எளிதானது. மேலும் பால் பேட்மிண்டன் போட்டியில் வீரர்கள் எதிர்த்து நின்று போராடுவது எதிராளியோடு மட்டுமில்லை. திறந்தவெளி அரங்கத்தில் காற்று, வெளிச்சம் ஆகிய இயற்கை சக்திகளோடும்தான்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விளையாட்டுகளில் கபடி, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளின் நிலை பரவாயில்லை. ஆனால் பால் பாட்மிண்டனின் நிலை ‘அந்தோ பரிதாபம்' என்ற நிலையில்தான் இருக்கின்றது. இந்திய ஒலிம்பிக் அசோசியேஷனில் தொடக்கக் காலத்திலேயே சேர்க்கப்பட்ட விளையாட்டு இது. ஆனால் அதன் பிறகு ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுக்களை நீக்கியதால் பால் பேட்மிண்டன் செல்வாக்கு இழக்க ஆரம்பித்தது. தற்போது இந்த விளையாட்டுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்த அரசு ஆதரவும் இல்லை.

ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கே பால் பேட்மிண்டன் ஃபெடரேஷன் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை இந்த விளையாட்டில் ஊக்கப்படுத்தும் விதமாக பி.எஸ்.அப்துர் ரகுமான், செயின்ட் ஜோசப் மற்றும் எஸ்.ஆர்.எம். ஆகிய கல்வி நிலையங்கள் ஆண்டுதோறும் ஒரு விளையாட்டு வீரருக்கு ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் இலவசச் சேர்க்கையை அளித்துவருகின்றன.

தமிழக அளவில் ‘முதலமைச்சர் டிராஃபி ’ போட்டிகளுக்கு பால் பேட்மிண்டன் விளையாட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் இந்த விளையாட்டின் பிரதிநிதியாக யாருமே இடம்பெறவில்லை. காரணம், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் என்று யாருமில்லை. தேசிய விளையாட்டுப் பயிற்சி மையத்தில் இந்த விளையாட்டுக்குப் பயிற்சியே அளிக்கப்படாதபோது யார்தான் பயிற்சியாளராக அங்கீகரிக்கப்படுவார்கள்?

தமிழக மண்ணில் தோன்றி முன்பொரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த பால் பேட்மிண்டன் இன்று ஆதரிப்பார் யாருமின்றி அழிந்துகொண்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்