ஏக்நாத் ஈஸ்வரன் தியான முறைகளைப் பற்றி நிறைய எழுதியும், பிரசங்கங்கள் செய்தும் அமெரிக்காவில் ஆன்மிகம் பரப்பிய அறிஞர். அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில் தினமும் பள்ளியில் எந்த நண்பனுடன் என்னவெல்லாம் விளையாடினேன் என்பதை எல்லாம் தன் பாட்டியிடம் போய்ச் சொல்வாராம். அதனால் அவருடைய பாட்டிக்கு அவர் நண்பர்கள் பெயர்கள், அவர்கள் குணங்கள் எல்லாம் அத்துபடி.
சில நாட்கள் சென்ற பிறகு அவரது பாட்டி அவர் சொல்லாமலேயே அவரைப் பார்த்தவுடனேயே அன்று யாருடன் சேர்ந்து அதிகம் விளையாடி இருக்கிறார் என்பதைச் சொல்லி விடுவாராம். ஏக்நாத் ஈஸ்வரனுக்கு ஆச்சரியமாய் இருக்குமாம்.
“எப்படி பாட்டி நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள்” என்று ஒருமுறை ஏக்நாத் ஈஸ்வரன் திகைப்புடன் கேட்டபோது, பாட்டி சம்ஸ்கிருதப் பழமொழி ஒன்றைச் சொன்னாராம். “சம்சர்கத் தோஷகுணா பவந்தி”. 'யாருடன் சேர்கிறோமோ அவர்களைப் போலவே ஆகி விடுகிறோம்' என்று அதற்குப் பொருள்.
அதன் பொருள் அப்போது தனக்கு விளங்கவில்லை என்றும் பிற்காலத்தில் தியான வழிகளில் ஆழமாய் ஈடுபட்ட போது பூரணமாய் விளங்கியது என்றும் ஏக்நாத் ஈஸ்வரன் பிற்காலத்தில் கூறினார். நாம் நெருங்கிப் பழகும் நபர்களின் வலுவான தன்மைகள் நம்மை அறியாமல் நம்மிடம் ஏற்பட ஆரம்பிக்கின்றன. அவர்கள் சிந்தனைகள், செயல்கள், சொற்கள் ஆகியவற்றின் தாக்கம் நம் சிந்தனைகள், செயல்கள், சொற்களில் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்த உண்மை மற்ற எல்லா பருவங்களையும் விட அதிகமாய் இளமைக்காலத்திற்குப் பொருந்தும்.
உளவியல் அறிஞர்கள் 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு குடும்பத்தை விட அதிகமாய் நண்பர்களையே முக்கியமாய் நினைக்கத் தோன்றும் என்று கூறுகிறார்கள். எனவே இந்த வயதில் ஏற்படும் நட்பு அவர்களை திசை திருப்பும் சக்தி வாய்ந்தது என்று கருதுகிறார்கள். அதனால் இந்த பதின்ம வயதில் சரியான நட்பைத் தேர்ந்தெடுப்பது மற்ற பருவங்களைக் காட்டிலும் மிக முக்கியமாகிறது.
அக்காலத்தில் நம் முன்னோர்கள் சத்சங்கம் என்று சொன்னது இந்த உளவியல் உண்மையைப் புரிந்து கொண்டதால் தான் என்று தோன்றுகிறது. குருகுலத்தில் கல்வி பயிலும் முறை இருந்தது, அரும்பும் பருவத்தில் நல்ல மன அலைகள் மாணவர்களிடத்தில் நிலவ வேண்டித் தான். அறிஞரான ஆசிரியரின் கண்காணிப்பில் தவறான போக்கு மாணவர்களிடம் ஏற்பட அங்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
நல்ல மனிதர்களை அதிகம் கவனிக்கும் போது, அவர்களுடன் அதிகம் பழகும் போது அவர்களிடம் வெளிப்படும் நற்பண்புகள் மீது நமக்கு ஈர்ப்பும், மரியாதையும் ஏற்படுகிறது. எதை அதிகம் மதிக்கிறோமோ, எது அதிகம் நமக்கு பிடித்திருக்கிறதோ அதன் தாக்கம் சிறிது சிறிதாக நம்முள் ஏற்பட ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் அதன் தாக்கங்கள் மிக நுணுக்கமாக இருப்பதால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏற்படும் தாக்கங்கள் பின்பு நம்மிடம் அதே போன்ற குணாதிசயங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை.
பொறுமையாக இருப்பவர், திறமையாக இருப்பவர் நடந்து கொள்கின்ற விதங்கள் சேர்ந்து இருக்கின்றவர்க்கு வழிகாட்டுதலாக இருக்கும். அந்தக் குணங்களால் கிடைக்கிற மரியாதையும், அதனால் ஏற்படும் நல்ல பலன்களும் பல நல்ல புத்தகங்களை விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரேயடியாக முழுமையாக அதே போல் மாறாவிட்டாலும் கூட ஓரளவாவது, சின்னச் சின்ன விஷயங்களிலாவது சேர்ந்து இருப்பவர்களை மாற்றும்.
அதேபோல் அதிகமாய் கோபம் கொள்கிறவர், தீய பழக்கங்களில் ஈடுபடுபவர்களும் நெருங்கி இருப்பவர்களுக்குத் தவறான வழிகாட்டிகளாக மாறி விடுகிறார்கள். இதுதான் சரி, இதுதான் வாழ்க்கையை அனுபவிப்பது என்று அர்த்தப்படுத்திக் கொள்வது அறியாத இளமைப்பருவத்தில் எளிதாகி விடுகிறது. மனப்பக்குவம் ஏற்படும் காலத்திற்கு முன்பே தீயவை மனதில் பதிந்து விட்டால் பின் அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபமாக இருக்காது.
திருக்குறளில் நட்புக்கு ஐந்து அதிகாரங்கள் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நட்பு, நட்பாராய்தல், பழைமை (முதிர்ந்த நட்பு), தீ நட்பு, கூடா நட்பு என்று ஐந்து அதிகாரங்களை நட்பிற்காக திருவள்ளுவர் ஒதுக்கி இருப்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஆராய்ந்து ஆராய்ந்து ஏற்படுத்திக் கொள்ளாத நட்பு கடைசியில் அழிவதற்குக் காரணமான துன்பத்தைக் கொடுக்கும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.
அதனால்தான் அவர் இன்னொரு திருக்குறளில் அது போன்ற நல்லறிவில்லாதவர்கள் நட்பை விட்டு விலகுவதே ஒருவனுக்கு லாபம் என்று லாபக்கணக்கு கூறுகிறார்.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
இதே கருத்தை டாக்டர் ஜான் யாகர் (Dr.Jan Yager) என்ற அமெரிக்க சமூகவியல் அறிஞர் தன்னுடைய “நட்பால் பாதிக்கப்படும்போது” (When Friendship Hurts) என்ற நூலில் இப்படிக் கூறுகிறார். “நட்பு என்பது வாழ்நாள் முழுவதும் கடைசி வரை நீடிக்க வேண்டும் என்ற கருத்து காலகாலமாக இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் சில நட்புகள் முறிந்து விடுவது தான் நல்லது.”
டாக்டர் பெவர்லி ஃபெர் என்ற வின்னிபெக் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஐம்பது சதவீத விவாகரத்துகளில் நண்பர்கள் பங்கு பிரதானமாக இருப்பதாகச் சொல்கிறார். அவர்கள் கருத்துகள், ஆலோசனைகள் எல்லாம் இது போன்ற மிக முக்கிய முடிவெடுப்புகளில் தீர்மானிக்க உந்துபவையாக இருக்கின்றன என்கிறார். உடல்நலம், மனநலம் இரண்டிலுமே நண்பர்கள் பங்கு அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இப்படி முன்னோர்களும், அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் எடுத்துச் சொல்லும் உண்மைகளை யாரும் அப்படியே நம்பி விடக்கூட வேண்டியதில்லை. நாம் இப்போது சில காலம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களின் பழக்கங்கள் குணாதிசயங்கள் ஆகியவற்றை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு, நாம் அவர்களுடன் பழக ஆரம்பித்த பின் எத்தனை விஷயங்களில் எப்படி எல்லாம் மாறி இருக்கிறோம் என்பதை இன்னொரு தாளில் எழுதி வைத்துக் கொண்டு, பிறகு இரண்டையும் ஒப்பிட்டால் மிகத் தெளிவாக நமக்கே விளங்கும்.
சில பேர் நண்பர்களை மாற்றிக் காட்டுகிறோம் பார் என்று சவால் விட்டுப் போய் தாங்களே மாறி விடுவதுண்டு. ஒரு ஆங்கில வேடிக்கைக் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஒரு சிறுவன் தூய ஆங்கிலத்தைப் பயன்படுத்தாமல் கொச்சை ஆங்கில வார்த்தைகளை அதிகம் உபயோகப்படுத்துவதைப் பார்த்து வருத்தப்பட்ட பெற்றோர் அவனை ஆக்ஸ்போர்டு பலகலைக்கழக ஆங்கிலப் பேராசிரியரிடம் சில காலம் அனுப்பி வைத்தார்கள். பிறகு மகனின் முன்னேற்றம் எப்படி இருக்கிறது என்று அறிய அவர்கள் போனபோது அவர்கள் மகனைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு அந்த ஆங்கிலப் பேராசிரியரே கொச்சையான ஆங்கிலத்தில் பதிலளிப்பதைப் பார்த்து துவண்டு போனார்களாம். அவர்கள் மகன் தான் மாறுவதற்குப் பதிலாக அந்தப் பேராசிரியரையே மாற்றி இருக்கிறான்.
இளைஞர்களே, உறவுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் நீங்கள் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டவர்கள். ஆனால் உங்களுக்கு மிக முக்கியமான சுதந்திரம் உள்ளது. நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல் என்பதே அந்த உரிமை. அந்த உரிமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் நட்புகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். நல்ல பண்புகளையும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பையும் கொண்டுள்ள நண்பர்களிடம் நெருங்கிப் பழகுங்கள். இதன் மூலம் நீங்கள் வேகமாக நல்ல முறையில் முன்னேற முடிவது மட்டுமல்லாமல் நீங்களும் மற்றவர்களை நல்வழிப்படுத்தும் நல்ல நண்பனாக மாறுவீர்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago