மர்ம கும்பலால் கடத்தப்பட்ட இளம்பெண்ணான தன் தங்கையைப் பதைபதைப்போடு தேடும் அண்ணனின் பரிதவிப்பை, வலியை, வேதனையை, அந்தப் பியானோவும் வயலினும் புல்லாங்குழலும் பிரதிபலிக்கின்றன. வேறு சில இளம் பெண்கள் காணாமல்போவதைத் திரைக்கதை காட்சிப்படுத்தும்போது பின்னணி இசை நம்மை மேலும் அச்சத்தில் உறையவைக்கிறது.
ஒரே ஒரு பாடல்தான். வழக்கமான கானா பாடலைப் போலவே ஒலித்தாலும் ஹார்மோனியப் பெட்டியின் இசையும் பாடகர் குரலின் தனித்துவமும் நம்மைத் தாளம்போடவைத்தது. ஒற்றை எழுத்தைத் தனக்கு பெயராகச் சூட்டிக்கொண்டு முதல் படத்திலேயே எல்லோரும் அதை உச்சரிக்க வைத்தார் இசையமைப்பாளர் கே. ‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வரவிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குத் தற்போது உற்சாகமாக இசையமைத்துவருகிறார் கே.
பின்னணி இசையைச் சேகரிக்கிறேன்
வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் ஏதாவது பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும். அப்பாவுக்கு மேற்கத்திய இசை மீது பித்து. ஆனால் கற்றதில்லை. செல்ல மகன் கிருஷ்ண குமாருக்கு இசையில் நாட்டமிருப்பதாகத் தோன்றவே சென்னை பத்மாசேஷாத்ரி பள்ளியில் அவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே கீபோர்ட் வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.
அங்கு அபராஜித் மாஸ்டரின் விரல்கள் பியானோவிலும் கீபோர்டிலும் விளையாடுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டார் கிருஷ்ண குமார். கீபோர்ட் வகுப்பில் வழக்கம்போல மேற்கத்திய இசையைச் சொல்லித் தந்த ஆசிரியர் ஒரு நாள் வகுப்பு முடிந்த பிறகு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் தீம் மியூசிக்கை வாசித்தார்.
90களில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை மட்டுமே கேட்குக் குதூகலித்த கிருஷ்ணகுமாருக்கு அப்போதுதான் இளையராஜாவின் இசை அறிமுகமானது. “அபராஜித் மாஸ்டர் அபாரமான இசைக் கலைஞர். பல திரைப்படங்களின் ரீ-ரெக்கார்டிங் டிராக்ஸைச் சேகரிக்கும் அபூர்வமான பழக்கம் அவருக்கு இருந்தது. பின்னாளில் எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது” என நினைவுகூர்கிறார் கே.
ஐ.டி. வேலையில் சேர்ந்துவிடக்கூடாது
டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக்கின் பியானோ கிரேட் வகுப்பையும் சென்னையில் இருந்தே படித்தார். பிளஸ் ஒன் வந்தபோது சொந்தமாக இசையமைத்து, பாடி, ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதிப் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து ‘பேனடெல்லா’ என்கிற மேற்கத்திய இசை பேண்டைத் தொடங்கினார். ஆனால் பள்ளிக் காலம் முடிந்ததும் இசை நண்பர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.
பி.இ.-ல் சேர்க்கப்பட்ட கே-க்கு இன்ஜினீயரிங் படிப்பிலோ கல்லூரி சூழலிலோ மனம் ஒன்றவே இல்லை. “கல்லூரியிலிருந்து மாலை வீடு திரும்பியவுடன் என்னுடைய இசை நண்பர்களைத் தேடி ஓடுவேன். வெவ்வேறு கல்லூரிகளில் படித்தாலும் நாங்கள் நாலு பேரும் தொடர்ந்து இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளில் எங்களுடைய சொந்தப் பாடல்களை வாசிப்பது என மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் கல்லூரி காலம் முடிந்ததும் மேற் படிப்பு, வெளி நாட்டில் வேலை என நாலு பேரும் பிரிந்துபோனோம்” என்கிறார்.
வேண்டாவெறுப்பாக பி.இ. படித்தாலும் கேம்பஸ் இண்டர்வீயுவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலை கிடைத்துவிட்டது. “அதுவரை விளை யாட்டாக இசையமைத்துக் கொண்டிருந்த எனக்கு வேலை கிடைத்தவுடன் இசைதான் என்னுடைய உலகம் என மனதுக்குள் ஒரு பேரொலி கேட்டது. தப்பித் தவறிகூட ஐ.டி. வேலையில் சேர்ந்து விடக் கூடாது என முடிவெடுத்து வேலையை நிராகரித்தேன்” என்கிறார்.
புதிய உலகம் திறந்தது
இதே நாட்களில் குடும்ப நண்பரான மிஷ்கினைப் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தார். என்ன பண்ணுற எனக் கேட்ட மிஷ்கினிடம் நான் இசையமைத்திருந்த ஆங்கிலப் பாடல்களின் டெமோ சிடி-யைக் கொடுத்தேன். ‘இது வேலைக்கு ஆகாது. ஆனால் உன்னால் முடியும்’ எனச் சொல்லி அவர் கூடவே என்னைக் கூட்டிச் சென்றார்” என்கிறார் கே.
அப்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘புத்தனின் பல்’ படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளில் மிஷ்கின் ஈடுபட்டிருந்தார். அதற்கான ஸ்டோரி போர்ட், திரைக்கதை, இயக்கம், இப்படித் திரைப்படம் சம்பந்தமான பல விஷயங்கள் அறிமுகமாயின.
ஓராண்டுக்கும் மேலாக மிஷ்கின் படக் குழுவினரோடு பயணிப்பது, புதிய மனிதர்களைச் சந்திப்பது எனப் புதிய உலகம் அறிமுகமானது. அடுத்து, எயிட்ஸ் விழிப்புணர்வை மையமாக வைத்துக் கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘லவ்’, ‘லைஃப்’, ‘ஹோப்’ ஆகிய மூன்று குறும்படங்களுக்கு இசையமைத்தார். திரையிசையில் தன் திறனை அவற்றில் நிரூபிக்கவே, 2010-ல் ‘யுத்தம் செய்’ படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பைக் கே-யிடம் ஒப்படைத்தார் மிஷ்கின்.
இடிக்கப்பட்ட ரெக்கார்டிங் ஸ்டூடியோ
“இத்தனை அடர்த்தியான திரைக்கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்ச்சி என்பதைவிடவும் அப்படியே குண்டுக் கட்டாகக் கடலில் தூக்கிப் போட்டது போல மூச்சுமுட்டியது. சவுண்ட் இன்ஜினீயரும் கம்போஸருமான ஜெய்ஷங்கர் போன்ற பலர் அப்போது தொழில்நுட்ப ரீதியாக எனக்குக் கைகொடுத்தனர்” என்கிறார் கே.
அதிலும் இந்தியாவின் பிரம்மாண்டமான இசை ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் ஒன்றான சென்னை கோதண்டபானி ஸ்டூடியோவில் 48 பீஸ் ஆர்கெஸ்ட்ராவோடு பணி புரிந்ததது ஒரு முதல் படக் கலைஞனுக்குக் கிடைத்த அபூர்வமான வாய்ப்பு என்கிறார். ஆனால் ‘யுத்தம் செய்’ தான் கோதண்டபாணி ஸ்டூடியோவில் நடைபெற்ற கடைசி இசைப் பதிவு. அதன் பின்னர் அது இடிக்கப்பட்டு இப்போது குடியிருப்பு வளாகமாக மாறிப்போனதை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறார்.
முதல் படத்திலேயே தேர்ந்த இசை ஞானத்தை வெளிப்படுத்தினார் கே. மிகக் கனமான திரைக்கதைக்கு முதலில் இசையமைத்தவர் பின்னர் ‘வாயை மூடி சும்மா இருடா’, ‘மாயாவி மாயாவி’ போன்ற வெகுஜன ரசனைக்குரிய பாடல்களை ‘முகமூடி’ படத்தில் தந்து மேலும் பிரபலமானார். லக்ஷ்மி ராமகிருஷ்ணின் ‘ஆரோகணம்’ சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில் வேலை செய்யும்போதுதான் முழுக்க முழுக்க அத்தனை பொறுப்புகளையும் தானே கையாண்டதாக நினைக்கிறார்.
2013-ல் ராஜீவ் ரவி இயக்கத்தில் ‘அன்னையும் ரசூலும்’ மூலம் மலையாளத் திரைப்படத் துறையில் கால் பதித்தார். இசைக்காகவும் அப்படம் கொண்டாடப்படவே ராஜீவ் ரவியோடு ‘கம்மடிப்பாடம்’ படத்தில் மீண்டும் இசையில் இணைந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் திரைக்கதை, துல்கர் சல்மானின் நடப்பு மற்றும் இசைக்காக இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களால் பாராட்டப்பட்டது.
தொடரும் இசைப் பயணம்
ஆவணப்படம், மாற்று சினிமா போன்றவற்றுக்கும் இசையமைப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார் கே. திருநங்கைகளின் வாழ்வுலகை ஆவணப்படமாகக் காட்டிய கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலையின் ‘இஸ் இட் டூ மச் டு ஆஸ்க்’ (‘Is it too much to ask’) சமீபத்தில் கே இசையமைத்த ஆவணப்படம். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘அம்மணி’ திரைப்படம், இந்தி - தெலுங்கு இரு மொழிப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் ‘காஸி’ (Ghazi) ஆகியவை வெளிவர அவற்றின் இசையமைப்பாளராக ஆவலோடு காத்திருக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ படப் பாடல்கள் பதிவு முடிந்திருக்கும் நிலையில் தென் தமிழகத்தின் குக்கிராமங்களுக்குச் சென்று பின்னணி இசையைப் புதுமையாகவும் அசலான மண் வாசனையோடும் உருவாக்க உற்சாகமாகப் புறப்பட்டுவிட்டார்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago