“கண் இருக்கிறது. வழி இருக்கிறது. சேரும் இடம் தெரிகிறது. போகும் பாதைதான் தெளிவில்லை” இப்படி முடிந்தது ஒரு பெண்ணின் மின்னஞ்சல். அரசுப் பணியில் இருக்கும் அவர், வைதீக முறைகளில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்தில் கல்லூரிப் பேருந்து ஓட்டுநரிடம் மனதைப் பறிகொடுத்திருக்கிறார். வேற்று மதத்தினரான அந்த ஓட்டுநர் முதலில் காதலை வெளிப்படுத்த, நீண்ட யோசனைக்கும் தயக்கத்துக்கும் பிறகு இந்தப் பெண் ஏற்றுக்கொண்டார். பிறகென்ன? அவரைக் கணவராகவே பாவித்துவிட, அவர்களுக்குள் எல்லாமே முடிந்துவிட்டது.
அந்த நபர் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட, அவருக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்ததோடு இன்றுவரை அவர் பட்ட கடனையும் இந்தப் பெண்தான் திருப்பிச் செலுத்திக் கொண்டு வருகிறார். இப்போது பிரச்சினை இதுதான். இவருக்குப் படிப்பும் முடிந்து வேலையிலும் சேர்ந்துவிட்டார். ஆனால் அந்த ஓட்டுநர் காரணமே இல்லாமல் பாராமுகமாக இருக்கிறார். நாள் கணக்கில் பேசாமல் இருந்தவர் இப்போது மாதங்கள் பல கடந்தும் பேசுவதில்லை. இங்கே இந்தத் தோழியோ காரணம் தெரியாமல் குழம்பித் தவிக்கிறார்.
சில பெண்கள் காதலில் விழுந்துவிட்டால் அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள். மேற்படி நபர் தன்னை ஏமாற்றுகிறார் என்று மட்டும் எழுதவில்லையே தவிர அவரால் தான் படும் துன்பங்கள் போதும் என்று கதறுகிறார். மீட்டெடுக்க முடியாததையெல்லாம் கொடுத்துவிட்டுக் காதல் மனதை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். அதே சமயம் அந்த நபருடனான வாழ்க்கை இனிக்காது என்ற நடைமுறை நிஜத்தையும் வலியோடு ஏற்றுக்கொண்டு இந்தப் பெண் படும் பாடு கொடுமையே.
காதலா? கள்ளமா?
பழகிவிட்டு ஒரு ஆண் விலகுகிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? அடிக்கடி ஆளை மாற்றும் காதல் மன்னனாக இருக்கலாம். முடிந்தவரை பணம் முதற்கொண்டு அனைத்தையும் சுரண்டிக்கொண்டு கடைசியில் கம்பி நீட்டிவிடும் திட்டத்துடனேயே பழகியிருக்கலாம். அல்லது இந்தப் பெண்ணின் இன்னொரு முகத்தைத் தெரிந்துகொண்டு விலகும் முடிவை அவர் எடுத்திருக்கலாம். அல்லது எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு ஏதேனும் மனநலச் சிக்கலால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
எப்படி இருந்தாலும் அதிகம் உடைந்து போய் குழப்பத்தின் உச்சியில், வேலை பார்க்கவும் முடியாமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையையும் ஏற்க முடியாமல் வெளியே எதையும் சொல்ல முடியாமல் தவித்துக்கொண்டிருப்பது இந்தப் பெண்தானே?
மாற்றி யோசியுங்கள்
அன்புத் தோழி… அந்த நபரின் நிலையற்ற மனதைத் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களைப் போன்றே காதல் உணர்வு அவரிடமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும் என்று நீங்களே சொல்கிறீர்கள். முதலில் அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். விரட்டி விரட்டிப் பேசுங்கள். பெரும் பிரச்சினைகளாகத் தோன்றும் பலதும் சில மணி நேர மனம் திறத்தலிலேயே சரியாகிவிடும். பணத்துக்காகத்தான் உங்களைக் காதலித்தாரா என்பது இந்நேரம் உங்களுக்கே புரிந்திருக்கும். அதேபோல வருடம் ஒரு பெண் என்று பொழுதுபோக்குபவராக அவர் இருந்தால் அதுவும் உங்களுக்குப் புரிந்திருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி அவருக்கு ஆளுமைக் கோளாறுகளோ உளவியல் கோளாறுகளோ இருக்கவும்கூடும். அதனால் மனநல ஆலோசனையைப் பெறுவது நல்லது. அதன் பிறகு ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.
நிறைய பெண்களுக்கு இதே போலப் பிரச்சினைகள் உண்டு. திருமணம் என்ற நீண்ட உறவுப் பிணைப்புக்கு முன்பே இயற்கை உங்களைப் பேராபத்திலிருந்து காப்பாற்றிவிட்டது என்று நேர்மறையாக நினைத்துக்கொள்ளுங்கள். மறப்பது கடினமாக இருக்கிறது என்பதுதான் காதலின் சாபக்கேடு. ஆனால் சீழ்பிடித்த புண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் குணமாகும் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்தையும் மென்று விழுங்கி நிமிர்ந்து நில்லுங்கள். எல்லாச் சம்பவங்களும் பாவக் கழிவே என்று அமைதி கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர் புறத் தேவைகள் தீர்ந்த பிறகு விலகும் போலிக் காதலனா என்பதைத் தீர்க்கமாக சிந்தித்துப் பாருங்கள். காதல் மோகத்தில் நம் சிந்தனைகள் குதிரைக்குக் கண்ணைக் கட்டிவிட்டதைப் போல ஒரே நோக்கில்தான் பயணித்திருக்கும். இப்போது மாற்றி யோசித்துப் பாருங்கள். மீண்டு வந்துவிடுவீர்கள். காதலில் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவரின் நினைவுகள் என்றும் நம் நெஞ்சத்தில் இருக்கும்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது அவரை நினைக்கும் போது உங்களுக்கு எழும் உணர்வுப் பிரவாகங்கள் அது மகிழ்ச்சியோ அல்லது பரிதவிப்போ இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் இருக்காது.
அதுவும் அவரால் நாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் சீக்கிரமே அந்த உணர்வுகளை நம் மனம் களைந்துவிடும். காலம் என்ற மருத்துவரை உங்களுக்குச் சிகிச்சையளிக்க அனுமதியுங்கள். எல்லாம் சுகமாக மாறும்.
மீண்டும் பூ மலரும்
‘வாழத் தெரிந்தவருக்கு வாழ்க்கை அமைவதில்லை; வாழ்க்கை அமைந்தவருக்கு வாழத் தெரிவதில்லை’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். இப்படியொரு காதலைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டோமே என்று அந்த நபர் கடுமையாக வருத்தப்படுவது காலப்போக்கில் கண்டிப்பாக நடக்கும். ஒருதலைக் காதல் குறித்த ஆய்வுகளின் போது காதலை நிராகரித்தவர்களின் மனநிலையையும் ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களில் பலரும் நீண்ட காலத்துக்கு ஒருவித குற்ற உணர்விலும், இப்படிச் செய்துவிட்டோமே என்ற பரிதவிப்பிலும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. ஆக, காதல் நிராகரிப்பட்டவரையும் விடுவதில்லை. நிராகரித்தவரையும் விடுவதில்லை.
என்ன ஆறுதல் சொன்னாலும் மனச்சோர்வும், கடும் ஏமாற்றமும், ஆற்றாமையும், கோபமும் ஒரு சேர நம்மைக் கொல்லும். காதல் தோல்விக்கும் மனச்சோர்வுக்கும் அவ்வளவு நெருக்கம் உண்டு என்பது நாம் அறியாததல்ல. ஆனால் நீங்கள் மனது வைத்தால் அழகாக, அற்புதமாக, புத்திசாலித்தனமாக, சேதாரமின்றி மீண்டு வரலாம். காதல் நிறைவேறாத கோடானு கோடிப்பேர் இன்னும் இந்த உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் தனி ஆள் இல்லை. உங்களைவிட அதிகம் காயப்பட்டவர்கள் இன்று வாழ்வின் உச்சாணிக்கொம்பில் ஏறி இளைப்பாறுகிறார்கள் என்ற உண்மையை மட்டும் உணருங்கள். விழுந்த குழந்தைதான் எழுந்து நிற்கப் பழகும். பட்ட மரம்தான் கல்லடி படும். காதலில் தோல்வி என்பது ஒரு உறவின் தோல்வியே தவிர வாழ்க்கையின் தோல்வி அல்ல. காயங்களே இல்லாமல் மைதானத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெல்ல முடியாது.
பாட்டிலில் அடைத்துவைப்பதைப் போல சோகங்களையும் பாரங்களையும் கால காலத்துக்கும் மனதில் அடைத்துவைக்க வேண்டாம். ஆண்டுகள் செல்லச் செல்ல அவற்றை மெல்ல ஜீரணித்துவிடுங்கள். மனதை லேசாக்கிக்கொள்ளுங்கள். மறத்தலையும் மன்னித்தலையும்விட மாபெரும் வெற்றிச் சூத்திரம் எதுவும் இல்லை. பழைய அனுபவம் கொடுத்த எச்சரிக்கையிலும் முதிர்ச்சியிலும் உங்கள் பயணம் விவேகமாகத் தொடரட்டும். இப்போதும் மனிதர்கள் உங்கள் குறுக்கே வருவார்கள். சில சம்பவங்கள் உங்களைத் தாலாட்டும். பல சம்பவங்கள் உங்களைத் தூக்கிப் புரட்டிப்போடும். ஆனால் அனுபவம் என்ற ஆசான் உங்களுடன் இருப்பதால் இந்த முறை உங்கள் தேர்வு தவறாது. பார்த்துப் பார்த்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களைச் சேர்த்துவைக்க வேண்டிய இடத்தில் நிச்சயம் சேர்த்து வைக்கும்!
எல்லாமே பேசலாம்!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ், மத்தவங்க கிட்டே பகிர்ந்துக்க முடியாமல் உங்க மனசுக்குள்ளேயும் ஆயிரம் கேள்விகள் அலையடிச்சுக்கிட்டு இருக்கலாம். அதை எல்லாம் எழுதி அனுப்பினால் மனநல மருத்துவரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கிடைக்கும்.
(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago