நெருப்புடா, கருப்பு நெருப்புடா!

By கிங் விஸ்வா

இன்றைய சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடி, முகமூடி அணிந்த முதல் காமிக்ஸ் ஹீரோ வேதாளர் (The Phantom), இன்றும் உலகமெங்கும் தினசரிகளில் ‘ஸ்ட்ரிப்’ வடிவில் வந்துகொண்டிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃப்ரூ (FREW) காமிக்ஸ் என்ற மாதமிருமுறை இதழ், அவரது புதிய கதைகளை, ஆங்கில hd புத்தக வடிவில் 1948 முதல் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், சில காலம் தடைபட்டிருந்த ஃப்ரூ காமிக்ஸ், இப்போது அட்டகாசமான கதைகளுடன் மீண்டும் வெளியாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் ஜூன் மாதம் நடக்கும் சூப்பர்நோவா என்ற காமிக்ஸ், புத்தகத் திருவிழாவில் ஃப்ரூ காமிக்ஸ் நிறுவனம் முதன்முறையாகப் பங்கேற்றது. அதைச் சிறப்பிக்கும் வகையில், வேதாளர் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் சாகசம் செய்த இரண்டு பாகக் கதையை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் வேதாளர்

150 ஆண்டுகளாக வங்கத்தில் இருக்கும் ஓவியத்தைப் பரிசோதிக்கவருகிறார் ஜூலியன் டால்வுட். பால் காடெய்னால் ஆஸ்திரேலிய பாலைவனத்தையும் பழங்குடியினரையும் காட்சிப்படுத்தி வரையப்பட்ட அந்த ஓவியம் எப்படி வங்கத்துக்கு வந்தது என்பது, முதல் பாகத்தில் பிளாஷ்பேக் ஆக சொல்லப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் இருக்கும் ஒரு குறியீட்டை வைத்து, ஒரு வரைபடத்தை உருவாக்குகிறார் டால்வுட். அந்த வரைபடம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடி மக்களான அபாரிஜினர்களின் ரகசிய மறைவிடத்துக்கு வழிகாட்டுவதாக இருக்க, வேதாளரும் டால்வுட்டும் ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்கிறார்கள்.

அந்த மறைவிடத்தின் சிறப்பம்சம் என்ன?

உண்மையில் டால்வுட் யார்?

வேதாளர் ஏன் அந்த மறைவிடத்துக்குக் கூடவே செல்கிறார்?

கருப்பு நெருப்பு என்றால் என்ன?

- உள்ளிட்ட கேள்விகளுக்கு விறுவிறுப்பாகப் பதில் சொல்கிறது இந்தக் கதை. குறிப்பாக ஆஸ்திரேலியப் பழங்குடியினரையும், அவர்களது பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை கதையினூடே வெளிப்படுத்தியுள்ள விதம் ரசிக்க வைக்கிறது.

அட்டகாசமான தருணங்கள்

இங்கிலாந்தில் ஆரம்பிக்கும் ஒரு காதல், எப்படி ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்கிறது என்பதே கதையின் அடிப்படை. சொத்துக்காக காதலர்களைப் பிரித்து, மனைவி மீது திருட்டுப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவுக்குக் கைதியாக அனுப்பிவிடுகிறார்கள். கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் கணவன், அவளைத் தேடிச் செல்ல, அவனது கப்பல் விபத்துக்குள்ளாகி, வங்கத்தில் கரை தட்டுவது எதேச்சையான செயல் என்று சொல்ல முடியாது. விதி நடத்தும் திரைக்கதையில் கணவன் - மனைவியைச் சேர்த்து வைப்பது வேதாளரின் பணி என்றிருக்கும்போது, அதை எப்படித் தடுக்க முடியும்?

தொல்நம்பிக்கைக் கதையாகச் சொல்லப்படும் ஒரு அருவி, அந்த அருவியில் குளித்தால் அனைத்து நோய்களும் குணமாவது, அதை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கும் பழங்குடியினர், யாருக்குமே தனது முகத்தைக் காட்டாத வேதாளர் ஒரு ஓவியருக்கு மாடலாக இருப்பது என்று கதையில் அட்டகாசமான பல தருணங்கள் இருக்கின்றன.

கதையின் போக்கில் அபாரிஜினர்களின் மரணத்துக்குப் பிறகான கனவு நேரம் என்ற நம்பிக்கையை மிகவும் அழகாக விவரித்துள்ளார் பிரபலமான மாடஸ்டி பிளைஸி கதாசிரியரான பீட்டர் ஓ டானலின் உறவினரான நார்மன். ஆஸ்திரேலியப் பழங்குடியினரைத் தன்னுடைய ஓவியங்களால் சிறப்பித்துள்ளார் ஸ்பெயின் நாட்டு ஓவியரான கார்லோஸ்.

என்னதான் முழு வண்ணத்தில் காமிக்ஸ் கதைகள் தற்போது படைக்கப்பட்டாலும், கறுப்பு வெள்ளையில் சில கதைகளைப் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு காமிக்ஸ் தொடர்தான் வேதாளரின் கதைகள். லீ ஃபாக் உருவாக்கிய இந்த சரித்திர நாயகனின் சிறப்பம்சம் என்னவென்றால், இக்கதைகளை ஒருமுறை படித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அவருக்கு ரசிகராக மாறிவிடுவோம் என்பதுதான். தொலைக்காட்சிகளுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் முந்தைய காலகட்டத்தில், தினமும் பத்துக் கோடி மக்களால் வாசிக்கப்பட்ட வேதாளர், இன்றைக்கும் ரசிக்கும்படியாக இருப்பதே அந்தக் கதாபாத்திரத்தின் தனிச்சிறப்பு.

கொசுறு:

ஃப்ரூ என்ற பெயர் எப்படி வைக்கப்பட்டது என்பதே ஒரு தனிக் கதை. 1948-ல் இதை நிறுவியவர்களுடைய பெயரின் முதல் எழுத்துகள் (F R E W) தான் இதற்குக் காரணம்.

ஐந்து ஆஸ்திரேலிய ஓவியர்களைக் கொண்டு ஒரு சிறப்பு அட்டைப்படம் சூப்பர்நோவா விழாவுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்