தாத்தாக்கு என்ன ஆச்சு?’, ‘பாட்டி ஏன் எழுந்துக்க மாட்டேங்கறாங்க?’ - மரண வீட்டில் குழந்தைகள் எழுப்பக்கூடிய கேள்விகள் இவை. நெருங்கிய உறவினரின் வீட்டில் இழப்பு ஏற்படுத்தும் வலியைவிடவும் அந்த மரணத்தைப் பற்றிக் குழந்தைகளுக்குப் புரியவைப்பதில் உள்ள வலி அதிகமானது.
வீட்டில் நெருக்கமாக இருக்கும் தாத்தா/பாட்டி இறக்கும்போதுதான் பெரும்பாலான குழந்தைகள் முதன்முதலாக மரணம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றிக் கேள்விப்படுவார்கள். ஏன் தாத்தாவை இப்படிக் கிடத்திவைத்திருக்கிறார்கள்? அம்மா ஏன் அழுகிறாள்? தாத்தா தூங்குறாங்களா? என்னதான் ஆச்சு தாத்தாவுக்கு? எனத் தொடர்ந்து கேள்விகள் எழும்பும். தாத்தா, பாட்டி போன்ற தங்களுக்கு அன்புக்குரியவர்களின் பிரிவு அவர்களைக் கவலையில் ஆழ்த்திவிடும்.
அந்தச் சமயத்தில், ‘தாத்தா தூங்குறார். அவர் ரொம்ப தூரமா போயிட்டார்’ எனச் சமாளிக்கும் வாத்தைகள், நேர்மையான பதில்கள் அல்ல எனக் குழந்தைகளுக்குப் புரிந்துவிடும். அது அவர்களை மன அழுத்தத்தில் கொண்டு போய்விட்டுவிடும்.
ஒரு தலைமுறைக்கு முந்தைய நமது வாழ்க்கை உறவுகள், அண்டை வீட்டார் எனப் பிணைந்த சூழலில் இருந்தது. சுக/துக்க நிகழ்ச்சிகளில் எல்லோரும் பங்குகொள்வது வழக்கமாக இருந்தது. அம்மாதிரியான சூழலில் அண்டை வீட்டிலோ தூரத்து உறவினர் வீட்டிலோ மரணம் நிகழும்போது எல்லோரும் கூடி துக்கம் அனுசரிக்கும் முறையும் இருந்தது. அம்மாதிரியான சூழலில் குழந்தைகள் மரணங்களைத் தங்கள் சிறு வயதிலேயே பார்க்கும் வாய்ப்பு அமையும்.
இப்போதும் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மரணம் சிறுவயதிலேயே பரிச்சயமானதாக இருக்க வாய்ப்பு உள்ளது. மரணச் சடங்கு அந்த வீட்டிலேயே நடக்கும். ஒப்பாரி வைப்பார்கள். இதையெல்லாம் வைத்து மரணம் என்ற இழப்பை, இயற்கையைக் குழந்தைகளால் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும்.
உரையாடுங்கள்: இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் தனித் தனிக் குடும்பங்களாகத் தேங்கிவிட்டோம். மரணத்தைச் சந்திக்காமலேயே நம் குழந்தைகள் வளர்ந்துவிடுகிறார்கள். தொலைக்காட்சிகளின் மூலமும், கதைகளின் மூலம்முதான் அவர்களுக்கு மரணங்கள் தெரியவருகின்றன.
இதை வைத்துக் குழந்தைகள், மரணம் குறித்துப் பல கேள்விகளை எழுப்புகின்றன. ‘ஏன் மனுஷங்க செத்துப் போறாங்க?’ ‘செத்த பிறகு என்ன ஆவாங்க?’ ’நானும் செத்துப் போவேனா?’ என்பன போன்ற பலவிதமான கேள்விகள் எழும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளின் இதுமாதிரியான கேள்விகளை நிராகரித்துவிடுவார்கள். அல்லது, ‘இப்படியெல்லாம் கேட்கக் கூடாது’ எனக் கண்டித்து அனுப்பிவிடுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் குழந்தைகளுடன் நாம் சரியாக உரையாடுவதே இல்லை. குழந்தைகளை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. குழந்தைகளை ஒரு மனுஷன்/மனுஷியாக மதிக்க வேண்டும். அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இம்மாதிரி எதிர்கொள்ளும்போது தனித்தன்மை மிக்க ஆளுமை அவர்களுக்குள் உருவாகும். அவர்களுடன் உரையாடும்போது ‘நான் உன்னைவிடப் பெரியவன்’ என்ற அதிகாரத் தொனி இல்லாமல் சமமான மனிதர்களாகக் கருத வேண்டும்.
குழந்தைகளின் கேள்விகளை நிராகரிக்கும்போது அது அவர்களின் மனத்தில் பாதிப்பை உண்டு பண்ணுகிறது. பெற்றோர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. தன் கேள்விக்குப் பதில் கிடைக்காதபோது தன்னம்பிக்கையும் அக்குழந்தைக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் பொதுவாகக் குழந்தைகளின் கேள்விகளை வரவேற்க வேண்டும். கேள்விகளுக்கு நேர்மையான பதிலை அளிக்க வேண்டிய கடமையில் இருந்து நாம் தவறும்போது குழந்தைகள் குழப்பமடைகிறார்கள். அவர்கள் வளர வளர இக்குழப்ப மனநிலை வளர்ந்து அவர்கள் குணத்தையும் பாதித்துவிடும்.
மருத்துவரின் ஆலோசனை: நெருங்கியவர்களின் மரணத்தால் குழந்தைகள் என்ன மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதற்கான தீர்வுகள் குறித்தும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் அருள் பிராகாஷ் கூறுகிறார்: பொதுவாக ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு மரணத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது. 9 வயது குழந்தைக்கு ஓரளவு மரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். 10 வயதுக்குப் பிறகு குழந்தைகளால் மரணத்தைத் தெளிவாக உள்வாங்க முடியும். பொதுவாக இன்றைய சூழலில் உள்ள குழந்தைகளுக்கு மரணத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குள் தங்கள் நெருக்கமானவர்களின் மரணத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
திடீரென மரணத்தை எதிர்கொள்ளும்போது அவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்கள் அதற்கு முன்பாக மரணம் குறித்துக் கேள்வி எழுப்பும்போது நாம் முறையாகப் பதில் அளித்தால் ஓரளவுக்குத் தயார் ஆவதற்கு உதவியாக இருக்கும்.
மரணத்தைப் பார்ப்பதால் இருவிதமான மனநலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது தனக்கு நெருக்கமானவர்களின் மரணத்தால் சில குழந்தைகளுக்கு Acute stress reaction (கடுமையான மன அழுத்தம்) ஏற்படும். இப்பாதிப்பு சில மாதங்கள் வரை நீடிக்கும். இதைச் சிகிச்சை மூலம் சரிசெய்துவிட முடியும். இன்னொன்று Extended grief reaction (நீண்ட மன அழுத்தம்).
இது பல ஆண்டுகள் வரை தொடரும் மனப்பாதிப்பு. இம்மாதிரியான பாதிப்புகள் குழந்தைகளின் மன ஆளுமை அடிப்படையிலேயே நிகழ்கிறது. அவர்களுக்கு முன்பே மரணத்தைப் பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்தும்போது இம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகள் மரணத்திற்கு ஒப்பான பல விஷயங்களைத் தினந்தோறும் சந்திக்கிறார்கள். உதாரணமாக ஒரு பழுத்த இலை மரத்திலிருந்து
உதிர்ந்து விழுவது போன்ற சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் வாழ்க்கையின் சுழற்சியைச் சொல்லலாம். மரணம் என்பது இயற்கையான ஒன்று என அவர்களுக்குப் புரியவைக்கலாம். பெரும்பாலும் மத நம்பிக்கை அடிப்படையில் பதில் அளிப்பது நல்லது. அவர்களுக்குப் புரிவதற்கும் எளிதானதாக இருக்கும். இறந்தவர்கள் கடவுளிடம் செல்கிறார்கள் என்பன போன்ற அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளைச் சொல்லலாம். குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்வார்கள். நாளடைவில் மத நம்பிக்கை சார்ந்த அந்தக் கூற்றின் மூலத்தைத் தேடி அறிந்துகொள்வார்கள்.
அரவணைக்க வேண்டும்: முதியவர்கள் இறப்பு இயற்கை எனச் சொல்லும்போது மிக இளம் வயதுடையவர்கள் இறக்கும்போது குழந்தைகள் குழப்பம் அடைவார்கள். ஒரு உதாரணத்திற்கு யாரேனும் சாலை விபத்தில் மரணம் அடைய நேரிட்டால், சாலைகளைக் கடக்கும்போது வாகனம்மோதி அவர் உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகச் சொல்லி, அதனால் சாலைகளைக் கவனமாகக் கடக்க வேண்டும் என அறிவுரையையும் சொல்லிவிடலாம்.
இறந்த நபரின் உடல் வேலை செய்வதை நிறுத்திவிட்டதால் அவர்கள் இறந்துவிடுகிறார்கள் என்பதையும் புரியவைக்கலாம். அந்த உடல் முன்புபோல் இனி இயங்காது. இறந்தவர்கள் இனி வரமாட்டார்கள் என்பதையும் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும். அவர்கள் கடவுளிடம் சென்றுவிட்டதாகச் சொல்லலாம்.
மேலும் மிக முக்கியமான விஷயம் தங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இழப்பை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். அந்தச் சமயத்தில் அவர்களை அரவணைக்க வேண்டும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பொருத்தமான, நேர்மையான பதில்கள்தான் அவர்கள் இழப்பிலிருந்து மீண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர உதவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago