நல்லா ‘கவர்’ பண்றாங்கப்பா..!

By ம.சுசித்ரா

அருமையான பழைய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் ஆன்மாவை உருவி எறிந்துவிட்டு, புதிய பீட்டுகளைச் சேர்த்து, பாடலுக்குச் சம்பந்தம் இல்லாத குரல்களைப் பாடவைத்துப் புதிய பாணியில் அதே பாடல்களைத் தரும் ‘ட்ரெண்ட்’ சில வருடங்களுக்கு முன்பு ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் சினிமாவில் ஆரம்பமானது. இந்தப் பாணியில் எக்கச்சக்கமானப் பாடல்கள் ரவுண்டு கட்டின. இசைப் புயல்கூட இதிலிருந்து தப்ப முடியாமல் ‘தொட்டால் பூ மலரும்’, ‘பொன் மகள் வந்தாள்’ என ரீமிக்ஸ் செய்ததைப் பார்த்தோம்… கேட்டோம்! தற்போது இந்த ஸ்டைல் வேறு மாதிரி போய்க்கொண்டிருக்கிறது.

இன்று ‘சிங்கிள்ஸ்’ என ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் மட்டும் முதலில் யூடியூப்பில் வெளியிடப்படுகிறது. சாதாரண இசை ரசிகர்களின் மனதில் அதன் மெட்டு பதிவதற்குள்ளாகவே சில மணி நேரங்களில் அதே யூடியூப்பில் அந்தப் பாடலின் ‘கவர் சாங்’ வெளிவந்துவிடுகிறது.

பாடித் தள்ளிய பாடல்

‘அட! யாரு யாரை கவர் பண்ணுறாங்க பாஸ்?’ என்று அப்பாவித்தனமாக எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. நம்ம ஊரில் ஒரு பாடலின் இசையமைப்பாளரோ அதைப் பாடிய பாடகரோ அல்லாமல் வேறு யாரோ அந்தப் பாடலை அங்கும் இங்கும் அவர்களுடைய கற்பனைக்கு ஏற்ற மாதிரி மாற்றிப் பாடுவதுதான் ‘கவர் சாங்’. இதை ‘கவர்’, ‘கவர் வெர்ஷன்’ எனவும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் அப்படி ‘கன்னாபின்னா’வென நூற்றுக்கணக்கில் ‘கவர்’ செய்யப்பட்ட ஒரு தமிழ்ப் பாடல் ‘தள்ளிப் போகாதே’. நடிகர் சிம்பு தொடங்கி இளம் இசைக் கலைஞர்கள், முன்னணி இசைக் கலைஞர்கள், “ஸ்ருதி’ன்னா தெலுங்கு ‘பிரேமம்’ படக் கதாநாயகிதானே?” எனக் கேட்கும் அளவுக்கு இசையில் ஸ்ருதி ஞானம் கொண்டவர்கள் என இப்படி ஏகப்பட்ட பேர் ‘தள்ளிப் போகாதே’ பாடலைப் பாடித் தள்ளிவிட்டார்கள். அதே போல ‘மன மன மெண்டல் மனதில்’, ‘என்னோடு நீ இருந்தால்’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் ‘கவர்’ செய்யப்பட்டிருக்கின்றன.

ஒரிஜினல் பாடல்களைவிடவும் அபாரமாக ‘ரீ அரேஞ்ச்’ செய்யும் இளம் கலைஞர்களையும் இதன் மூலம் அடையாளம் காண முடிகிறது. 2014-ல் அமெரிக்காவில் பெர்க்லி இசைக் கல்லூரி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததைக் கொண்டாட அதன் மாணவர்கள் ‘ஜியா ஜலே’ பாடலை ‘கவர்’ செய்ததைக் கேட்டு ரஹ்மானே மனம் திறந்து பாராட்டினார்.

மோஜோ டிவி, மசாலா காஃபி, ரோஸ் பவுல், பிரள் மியூசிக் மீடியா ஃபாக்ட்ரி போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாக ‘கவர் வெர்ஷன்’ பாடல்களைத் தயாரித்து வெளியிடுகின்றன. பாடல்கள் மட்டுமின்றி சுவாரசியமான கதையோட்டம் கொண்ட குறும்படங்களும் ‘கவர் வீடியோ’க்களாக வரிசைகட்டுகின்றன. ‘எ ட்ரிப்யூட் டூ கவுதம் வாசுதேவ் மேனன்’, ‘ஏ சண்டக்காரா கவர் ஃபீட்’ போன்ற கவர் வீடியோக்கள் செம்ம ஹிட்!

பல பரிமாணங்களில்

‘கவர் வெர்ஷன்’ மட்டுமல்ல ‘அன்பிளக்ட்’ (unplugged), ‘மேஷ் அப்’ (mash up), ‘ரெப்ரைஸ் வெர்ஷன்’ (reprise version) இப்படி, இன்று இசை பல பரிணாமங்களில் திரியவிடப்படுகிறது. ‘இதெல்லாம் என்னப்பா!’ எனத் தேடினால் ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல சுவாரஸ்யமான அர்த்தங்களும் ஆச்சரியமான வரலாறும் இருக்கின்றன.

உலக அளவில் தேடுவதை விடுவோம், நம்ம ஊருல இதுபோன்ற பாணிகள் ரஹ்மானின் இசையோடு பரவ ஆரம்பித்தது எனலாம். முன்பெல்லாம் சினிமா பாடல்களை மேடைக் கச்சேரி செய்பவர்கள் அச்சு அசலாக அந்தப் பாடல்களைப் பாடுவார்கள். ஒரிஜினல் பாடலை இம்மி அளவும் மாற்றாமல் பாடுவதுதான் திறமை என்றார்கள். ஒரு முறை நட்சத்திர இரவு நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி. புதிய ஜாலங்கள் காட்டி அவருடைய பாடலையே பாடியபோது “இஷ்ட்டத்துக்குப் பாடுறாரு பாரு…” என என் வீட்டில் அம்மா, அப்பா கோபப்பட்டது நினைவுக்கு வருகிறது.

ஆனால் ரஹ்மான் இசையமைக்கும் போதே தன்னுடைய பாடல்களை சக இசைக் கலைஞர்கள் ‘இம்ப்ரோவைஸ்’ செய்வதைக் கொண்டாடுபவர். அவரால் எலக்ட்ரானிக் இசைக் கருவிகளின்றி இசையமைக்க முடியாது என்கிற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. ஆனால் ரஹ்மானால் தமிழ் இசை ரசிகர்களுக்கு அறிமுகமான ‘அன்பிளக்ட் ஸ்டைல்’ என்பதன் அடிப்படையே எலக்டிரிக் கிட்டார், பாஸ், கிக் டிரம்ஸ் போன்ற எல்க்ட்ரானிக் கருவிகள் இல்லாமல் பாடலைப் புதிய கோணங்களில் மேடை ஏற்றுவதுதான். ‘எம்.டி.வி அன்பிளக்ட் (MTV Unplugged)’ நிகழ்ச்சி இதற்காகவே நடத்தப்படுகிறது. அதில் ஏ.ஆர். ரஹ்மான் 2012-ல் செய்த கச்சேரி படு ஹிட். இதே போல தமிழில் ‘மிர்ச்சி அன்பிளக்ட்’ களைகட்டுகிறது!

டோன்ட் மிஸ்

அடுத்தாக, ‘முன்னாள் காதலி’ (மிருதன்), ‘கண்ணம்மா’ (கோ-2) என இப்படிச் சமீபத்தில் வெளியான பாடல்கள் அதன் ஆல்பங்களிலேயே ‘ரெப்ரைஸ் வெர்ஷன்’ ஆக வெளியிடப்பட்டுள்ளன. பாடலில் பிரயோகிக்கப்பட்ட இசைக் கருவிகளையோ அல்லது பாடல் வரிகளையோ அங்கும் இங்கும் மாற்றுவதுதான் இந்த ‘ரெப்ரைஸ்’ வகை. ‘மேஷ் அப்’ என்பது பல பாடல்களைக் கலந்துகட்டி டி.ஜே. ஸ்டைலில் கோத்துத் தருவது. ‘ரஹ்மான் மேஷ் அப்’, ‘இளையராஜா மேஷ் அப்’ என டி.வி. சேனல்களிலும் யூடியூப்பிலும் தெறிக்கவிடுகிறார்கள் நம் இளசுகள். இதில் நடிகை-பாடகி ஆண்ட்ரியா, பாடகி ஸ்வேதா மோகன், பாடகி சக்தி கோபாலன் ஆகியோரின் மேஷ் அப் ‘டோன்ட் மிஸ்’ வகையறா!

மேலோட்டமாய்ப் பார்க்கும்போது இது வெறும் புதிய ட்ரெண்ட் எனத் தோன்றலாம். ஆனால் உள்ளார்ந்து பார்க்கும்போது சில பேருக்கு மட்டுமே எட்டும் கனியாக இருந்த இசை இன்று பரவலாக்கப்பட்டுவருகிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு சிலர் மட்டுமே இசை உருவாக்க முடியும் என்கிற கெடுபிடியை இத்தகைய முயற்சிகள் தளர்த்துகின்றன. சொந்தமாக இசையமைப்பது ஒரு விதமான படைப்பாற்றல் என்றால் வேறொரு பாடலை மீண்டும் கையில் எடுத்து, அழகூட்டி, அதைப் புதிய கோணத்தில் மீட்டுருவாக்கம் செய்வதற்கும் நிச்சயமாக சிறந்த கற்பனைத் திறன் வேண்டும். அதை வென்றெடுக்கும் இளைஞர்கள் எல்லாத் தரப்பிலிருந்தும் உருவாகும் காலமாக இது மாறியிருக்கிறது!

‘கவர்’ வந்த கதை

1950-களில் அமெரிக்காவின் ‘ராக் அண்ட் ரோல்’ ராஜாவான எல்விஸ் பிரெஸ்லி ‘கவர் சாங்’ என்கிற பாணியைத் தொடங்கிவைத்தார். அவர் கார்ல் பெர்கின்ஸின் ‘புளூ ஸ்வேட் ஷூஸ்’ (Blue Suede Shoes) பாடலை அட்டகாசமாகச் செய்த கவர் வெர்ஷன் அமெரிக்க இளைஞர்களைப் பித்துப்பிடிக்க வைத்து ஆட்டியது. அதனை அடுத்துப் பல அமெரிக்கக் கலைஞர்கள் கவர் செய்து அசத்தினார்கள். அவற்றில் மிகவும் பரபரப்பாகி, வெற்றிநடை போட்டது ‘தி ஐஸ்லி பிரதர்ஸி’ன் பாடலான ‘ட்விஸ்ட் அண்ட் ஷவுட்’டை (Twist and Shout) உலகப் புகழ் பெற்ற ‘பீட்டில்ஸ்’ பாடிய விதம்தான்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்