காதலிப்பதற்கு ஒரு ஆணும், பெண்ணும் இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து, காதல் உருவாக ஒரு பொதுவான இடம் தேவைப்படுகிறது. அதன் பெயர் ‘லவ் ஸ்பாட்’ என்று சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் இயங்கும் ‘ஃபண்டமென்ட்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஆன் லவ்’ எனும் அமைப்பு சொல்கிறது (சும்மா சொல்லி வைப்போம்..!).
1980-களில் கல்லூரிகளே பிரதான லவ் ஸ்பாட்டாக இருந்தன. ஆனால் பூர்வ ஜென்மத்தில் நீங்கள் காகங்களுக்கோ, நாய்களுக்கோ உணவளித்திருந்தால் மட்டுமே ‘கோ-எட்’ கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே கோ-எட்டில் படிக்காத துரதிர்ருஷ்டசாலிகளுக்கென்று காதல் தேவதைகள் தீவிரமாக யோசித்துச் சில புதிய இடங்களை உருவாக்கினர்.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்
பொதுவாகக் கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் காலையில் புதுமலர் போல பளிச்சென்று வந்து, மாலையில் எண்ணெய் வடியும் முகம், பப்பரக்கா தலையுடன் வாடிய மலர் போல் ஆகிவிடுவர். எனவே காலையில் பார்த்தபோது உருவான காதல், மாலையில் பார்க்கும்போது மறைந்துவிடும்.
ஆனால் டைப்ரைட்டிங் வகுப்புகள் ஒரு மணி நேரம்தான் என்பதால், இங்கு ஆண்களும், பெண்களும் பளிச்சென்று வந்து, ஒரு மணி நேரத்தில் தங்கள் பளிச்சை இழக்காமலே சென்றுவிடுவதால், கல்லூரிகளை விட இந்த இன்ஸ்டிட்யூட்களில்தான் காதல் அதிகமாக உருவானது.
இங்கு ஆண்கள், டைப்ரைட்டிங் மெஷின் காரேஜை மடேரென்று இழுத்துப் பெண்களின் கவனத்தைக் கவரலாம். அப்போது உங்களைத் திரும்பிப் பார்க்கும் பெண் கள்ளச் சிரிப்போடு, மேலுதட்டில் அரும்பும் வியர்வையைத் துடைத்துக்கொண்டால் அது உங்கள் ஆள்.
இந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் காதலில் முக்கியமான விஷயம், நீங்கள் முதலில் பார்த்த பெண்ணே உங்கள் ஒரே இலக்காக இருக்க வேண்டும். ஏனெனில் இன்ஸ்டிட்யூட்களில் திடீர் திடீரென்று புதிய அழகிகள் சேருவார்கள். ஆண்கள் பல சமயங்களில் ‘ஸ்லிப்’பாகும் தருணம் இது. அந்தச் சமயத்தில் உங்கள் ஆள், “அந்த புதுப்பொண்ணு அழகாயில்ல?” என்று கேட்டு ஆழம் பார்ப்பார்கள். அப்போது நீங்கள் ஒரு ஞானி போல், “அது அழகு இல்ல. சும்மா பொம்மை மாதிரி உயிர்ப்பே இல்லாம இருக்கு. உயிர்ப்போட இருக்கிற அழகுன்னா...” என்று நீங்கள் உற்றுப் பார்த்தால் போதும். அந்தப் பெண் கையில் சுருட்டியிருக்கும் வெள்ளை பேப்பரில் தன் ஒரு கண்ணை மறைத்துக்கொண்டு, மற்றொரு கண்ணால் உங்களைப் பார்த்துப் படபடவென்று இமைகளைச் சிமிட்டினால் அதன் பெயர்தான் காதல்.
நூலகம்
இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, நூலகம் என்னும் இடத்திற்கு ஏராளமான இளம் ஆண்களும், ஒன்றிரண்டு இளம்பெண்களும் வருவார்கள். அங்கு 108 வைஷ்ணவத் தலங்கள், அறிஞர் வாழ்வில் நகைச்சுவை, செக்கிழுத்த செம்மல் போன்ற புத்தகங்களைப் படிப்பவர்கள் எல்லாம் இந்தக் காதல் ஆட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். அதே போல் எம். எஸ். உதயமூர்த்தி, மெர்வின் போன்றவர்களின் சுயமுன்னேற்றப் புத்தகங்களைப் படிப்பவர்களும், வாழ்க்கையில் உருப்படுவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருப்பதால், அவர்களும் காதலில் சிக்கிக்கொள்ள வாய்ப்பில்லை.
சுஜாதா, பாலகுமாரன், பட்டுகோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் வாசகர்கள் இடையே காதல் ஏற்படப் பிரகாசமான வாய்ப்புகள் இருந்தன. “நீங்க பாலகுமாரனோட ‘மெர்க்குரிப் பூக்கள்’ படிச்சிருக்கீங்களா?” என்று தொடங்கும் உரையாடல் மூலமாகவே காதல் வளர்த்தெடுக்கப்படும்.
உரையாடல் என்றால், ஆண், பெண் இருவரும் பேசுவதல்ல. பெண்கள் பேசுவார்கள். ஆண்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பெண்களின் பேச்சில் சற்றே தொய்வு ஏற்படும்போது, அவர்கள் மேலும் பேசுவதற்கான ‘லீட்’ எடுத்துக்கொடுக்க மட்டும் ஆண்களுக்கு அனுமதி உண்டு. குறிப்பாகப் பெண்கள் அறிவுஜீவி போலத் தங்களைக் காட்டிக்கொள்ள முற்படும்போது, அதனை நீங்கள் அங்கீகரிக்கும் விதமாக மகா பிரமிப்புடன் பார்க்க வேண்டும். அதை விட முக்கியமான விஷயம்... அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் நகத்தை நோண்டிக்கொண்டோ, ஜன்னலுக்கு வெளியே செல்லும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டோ இருந்தால் நீங்கள் ஃபெயில்.
ஒரு நாள் அவன் பாலகுமாரனின், ‘இனிது இனிது காதல் இனிது’ புத்தகத்தை அவளுக்கு அளிக்க, அவள் பதிலுக்கு அவனை அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டே, ‘உள்ளம் கவர் கள்வன்’ புத்தகத்தைக் கொடுத்தால் ரை… ரைட்...
மொட்டை மாடி
அந்தக் காலகட்டத்தில் இளம் பெண்கள் துணி காயப்போட, தலை பின்ன, மிளகாய், வத்தல் காய வைக்க மொட்டை மாடிகளுக்கு வருவார்கள். அப்போது ஆண் படிப்பது போலப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து மொட்டை மாடியில் அமர்ந்து கொள்வான். அப்போது எதிர்வீட்டு மாடியிலிருந்து ‘டப்...’ ‘டப்...’ என்று ஈரத்துணியை உதறும் சத்தம் கேட்கும்போது பையன் உஷாராகிவிடுவான்.
அந்தக் காலகட்டத்தில் இளம் பெண்கள் துணி காயப்போட, தலை பின்ன, மிளகாய், வத்தல் காய வைக்க மொட்டை மாடிகளுக்கு வருவார்கள். அப்போது ஆண் படிப்பது போலப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து மொட்டை மாடியில் அமர்ந்து கொள்வான். அப்போது எதிர்வீட்டு மாடியிலிருந்து ‘டப்...’ ‘டப்...’ என்று ஈரத்துணியை உதறும் சத்தம் கேட்கும்போது பையன் உஷாராகிவிடுவான்.
அந்தப் பெண் துணிகளைக் காயப் போடும்போது, இரண்டு துணிகளுக்கிடையே உங்களைப் பார்ப்பது போலக் காயப் போட்டால் பொண்ணு காதலுக்கு ‘யெஸ்’..! அனைத்துத் துணிகளையும் தன் முகம் தெரியாதவாறு மறைத்துக்கொண்டு காயப்போட்டால் பொண்ணு ‘நோ’.
இந்த மொட்டை மாடி ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்க்கை பெரும்பாலும் மொட்டை மாடியிலேயே இருப்பது போலப் பார்த்துக்கொள்வார்கள். பெண்கள் அவ்வப்போது மொட்டை மாடிக்கு வந்து காய வைத்த மிளகாய், மல்லியை கிளறிவிட்டு கூடவே ஆண்களின் மனதையும் கிள்ளிவிட்டுச் செல்வார்கள்.
பிறகு ஜடை பின்னும்போது உங்களைப் பார்த்தபடி போட்ட ஜடையை அவிழ்த்து, அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக்கொண்டேயிருந்தால் அவர்கள் காதலின் எல்லைக்கோட்டுக்கு வந்துவிட்டார்கள். அப்போது ஆண்கள் ஒரு மல்லிகைப்பூப் பந்தை வாங்கி வீசி எறிய, பொண்ணு ‘கப்’பென்று பிடித்துத் தலையில் வைத்துக்கொண்டால், அதை ‘மல்லிகைப்பூக் காதல்” என்று சங்கக் கவிஞர் மல்லிகைக்கண்ணனார் கூறியிருக்கிறார்.
டிஜிட்டல் காதல்
ஒரு மொபைல் ஃபோனின் உள்ளங்கை அளவு இடத்திலேயே காதலை வளர்த்தெடுப்பதே டிஜிட்டல் காதலாகும். 1995-க்குப் பிறகு பிறந்தவர்கள், நேரில் மனிதர்கள் பேசிக் கொள்வதைச் சட்ட விரோதக் காரியமாக நினைக்கின்றனர். எனவே இளைஞர்கள், பக்கத்தில், ஓரடி தொலைவில் இருக்கும் பெண்ணிடம்கூட, “சாப்டாச்சா?” என்று ‘வாட்ஸ் அப்’ மெசேஜில்தான் கேட்பார்கள். பதிலுக்கு அவர்கள் மொபைலில் சார்ஜே இல்லையென்றாலும் சார்ஜ் போட்டு, “சாப்டுட்டேன்” என்று மெசேஜ் அனுப்புவார்களே தவிர நேரடியாகப் பதில் சொல்ல மாட்டார்கள்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு ஜலதோஷம் வந்துவிட்டால், பணக்கார பக்தர்களை கார்ப்பரேட் சாமியார்கள் பரிவோடு பார்ப்பது போல அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு, கண்ணீர் விடும் ‘டியர்ஃபுல்’ எமோஜியை அனுப்பினால், பதிலுக்கு அப்பெண் உங்களை நன்றியுடன் பார்த்துவிட்டு, “ஷல் வீ ஹேவ் எ காஃபி?” என்று கேட்க (மெசேஜில்தான்)… கட் பண்ணா காஃபி ஷாப்.
நமது லோக்கல் காஃபியுடன், காஃபியல்லாத சமாச்சாரங்களை எல்லாம் கலந்து, ஏஸி, கண்ணாடியெல்லாம் போட்டு, மங்கலாக எரியும் விளக்கொளியில் காஃபி குடித்துவிட்டு, 1,000 ரூபாய் பில்லைப் பார்க்கும் ஆண், உள்ளுக்குள் முதல் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதை அறியாமலேயே கமுக்கமாகக் காசைக் கொடுத்துவிட்டு வரும் இடம்தான் காஃபி ஷாப்.
இங்கு ஒரு ஆணும், பெண்ணும் 2017-ல் பின்வருமாறு பேசி தங்கள் காதலை டிக்ளேர் செய்கிறார்கள்.
ஆண்: நீங்க கமிட்டடா?
பெண்: நோ. ஆனா ரெண்டு பிரேக் அப். உங்களுக்கு?
ஆண்: எனக்கு நாலு பிரேக் அப். எய்த்து படிக்கிறப்ப முதல் பிரேக் அப்.
பெண்: ஸோ ஸேட். இப்ப ஏதும் கமிட் ஆயிருக்கீங்களா?
ஆண்: ஒரு பொண்ணு கூட கமிட் ஆவலாம்ன்னு இருந்தேன். ஆனா அவங்கப்பா டி.எஸ்.பி.ன்னு தெரிஞ்சு கமிட்மென்ட்ட ட்ராப் பண்ணிட்டேன். உங்கப்பா என்ன பண்றாரு?
பெண்: போலீஸ் இல்ல. மிலிட்டரி. ஆன்ட்டி டெர்ரரிஸ்ட் ஸ்குவாட், ஸ்பெஷல் கமாண்டோ ஃபோர்ஸ். நீங்க ஏகே 47 துப்பாக்கியை நேர்ல பார்த்துருக்கீங்களா?
ஆண்: ஆ.….
பெண்: பயந்துட்டீங்களா? சும்மா சொன்னேன்.
ஆண்: தேங்க்ஸ். அப்புறம்… விராட் கோலிக்கு, நடிகை அனுஷ்கா சர்மா மேல ஒண்ணு வந்துச்சே? என்னது அது?
பெண்: காதல்.
ஆண்: அது எனக்கும் உங்க மேல வந்துருச்சு. உங்களுக்கு?
பெண்: விராட் கோலிக்கு அனுஷ்கா சர்மா மேல வந்த காதல் எனக்கு வரல.
ஆண் (சோகத்துடன்): நிஜமாத்தான் சொல்றீங்களா?
பெண்: ஆனா அனுஷ்கா சர்மாவுக்கு, விராட் கோலி மேல வந்த காதல் வந்துருச்சு.
ஹேப்பி வேலன்டைன்ஸ் டே..!
- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago