எப்படி இருக்கும் 2016?

By ந.வினோத் குமார்

டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கடிகாரம் ஓசை எழுப்பும்போது, புதிய வருடம் மட்டும் பிறப்பதில்லை. கூடவே, புதிய நம்பிக்கைகளும், அந்த ஆண்டுக்கான புதிய எதிர்பார்ப்புகளும் பிறக்கின்றன. கடந்து சென்ற ஆண்டின் வலிகள், கண்ணீர், நிராசைகள், ஏக்கங்கள், கசப்புகள் எல்லாவற்றையும் 'ஸ்பாம்' ஆக்கிவிட்டு, புதிய ஆண்டை கனவுகளோடும், முன் தயாரிப்புகளோடும் எதிர்கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது நமக்கான வெற்றி!

தேர்தல்... தேடல்!

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் ‘டாலர்' தேசத்தின் தலைவிதியை மாற்றுமா என்று உலகமே எதிர்நோக்க, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் யார், எந்தக் கட்சி, எவ்வளவு தரும் என்று மக்கள் மனங்களில் ஊகங்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலோ, தமிழக சட்டமன்றத் தேர்தலோ... புதிய தலைமைக்குச் சவால்கள் நிறையவே இருக்கின்றன. ‘இவர் இல்லையென்றால் அவர்', ‘இந்தக் கட்சி இல்லையென்றால் அந்தக் கட்சி' என தேர்தலை ஒரு சம்பிரதாயமாக நோக்காமல், ஒரு தேடலாக மேற்கொள்ளும்பட்சத்தில் கிடைக்கும் ஒரு நல்லரசு தலைமை! அமெரிக்காவில் இது சாத்தியம். ‘ஆல்கேட்ஸ்' பலர் நிறைந்திருக்கும் தமிழகத்தில்..?

முடிவிலா போர்!

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசியல் கொதிப்பு மிகுந்த இடங்களில் போர்கள் தொடரும் என்பது கணிக்கவே தேவையில்லாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஒரு பக்கம் ஐ.எஸ். அமைப்பு வளர்ந்து வர, இன்னொரு பக்கம் உலகை ‘நாட்டாமை' செய்வதற்கு இது ரஷ்யாவின் முறை! சிரியா, உக்ரைன் ஆகிய பிரச்சினைகளின் காரணமாக தற்போது ரஷ்யாவின் கையே ஓங்கியிருக்கிறது. பொருளாதார நசிவு, மக்களின் அதிருப்தி ஆகியவற்றுடனே இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது ரஷ்யா. ஆனாலும், அதையெல்லாம் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ‘அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்' என்று அமெரிக்காவையே பயமுறுத்தி வருகிறது.

நடுங்கும் பொருளாதாரம்!

பொருளா தாரத்தைப் பொறுத்த வரையில் இந்த ஆண்டு உலகம் முழுவதற்குமே கொஞ்சம் மந்தமான ஆண்டாகத்தான் இருக்கும். 'உலகளவிலான பொருளாதார வளர்ச்சி என்பது இந்த ஆண்டு 3.6 சதவீதமாக மட்டுமே இருக்கும். இது கடந்த ஆண்டின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது (3.1 சதவீதம்) மந்தமான முன்னேற்றம்தான்' என்கிறார் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட். ஆசிய அளவில் சீனாவின் பொருளாதாரமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைவாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 'அந்நிய நேரடி முதலீடு அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளது. எனவே 2016ம் ஆண்டில் வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியப் பொருளாதாரம் முன்னனியில் இருக்கும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், 'எல் நினோ' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, நாட்டில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதை எப்படி நமது அரசுகள் எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் சாமான்யனின் கேள்வி.

தேர்தல், போர், பொருளாதாரம்... இந்த மூன்றும்தான் இந்த ஆண்டை வழிநடத்தும் விஷயங்களாக இருக்கப் போகின்றன. இவற்றில் எதிர்பார்த்தவை நிகழலாம். எதிர்பாராதவையும் நிகழலாம். ஆனால், நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதில்தானே இருக்கிறது வருடங்களின் அழகும் வரலாற்றின் வசீகரமும்!



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்