‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இத்தொடர் ஆரம்பித்தது முதல், வெள்ளிக்கிழமையானால் எனக்கு ஒரு வித்தியாசமான நோய் வந்துவிடுகிறது. வெள்ளிக்கிழமைதோறும் என்னைப் பாராட்டி வரும் எண்ணற்ற மின்னஞ்சல்களை (இங்கு நான் ஒரு ரகசியத்தைப் போட்டு உடைத்துவிடுகிறேன். ‘எண்ணற்ற’ வாசகர்கள் என்று எழுத்தாளர்கள் சொன்னால் இருபது பேர். ‘ஏராளமான’ வாசகர்கள் என்றால் நாற்பது பேர்) படிப்பதற்கான பரபரப்பு ஏற்பட்டுவிடும். இந்த நிலையில் காலை பத்து மணிக்கு மேல் மின்னஞ்சல் வராவிட்டால், உடம்பு ஒரு மாதிரியாகச் சூடாகி, விரல்கள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன. “அன்பார்ந்த சுரேந்தர்நாத்….” என்று ஆரம்பிக்கும் முதல் கடிதத்தைப் படித்த பின்னரே நார்மலாகிறேன்.
இக்கடிதங்களின் விளைவாக, வெள்ளிக் கிழமைகளில், எதற்கெடுத்தாலும், எல்லோரும் என்னைப் பாராட்டவேண்டும் என்று ஏங்க ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குக் காய்கறி வாங்கிக்கொண்டு வந்தால்கூட என் மனைவி, “அன்பார்ந்த சுரேந்தர்நாத், இந்த வாரம் நீங்கள் வாங்கித் தந்த காய்கறிகள் மிகவும் அருமை. அதிலும் குறிப்பாகச் சொத்தைக் கத்தரிக்காயை மட்டுமே தேர்ந்தெடுத்து வாங்கிய விதம் அற்புதம்” என்று மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பஸ்ஸில் கண்டக்டரிடம் சரியான சில்லறை கொடுத்தால் உடனே கண்டக்டர், “அன்பார்ந்த சுரேந்தர்நாத் தாங்கள் மிகச் சரியான சில்லறையைக் கொடுத்துள்ளீர்கள். அதுவும் அனைத்தையும் ஒற்றை ரூபாய் நாணயங்களாகக் கொடுத்தபோது மனம் நெகிழ்ந்துவிட்டது” என்று கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
மிஸ்டு கால் பாராட்டு
சிலர் மின்னஞ்சலில் எனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, மொபைலிலும் தொடர்புகொண்டு பாராட்டுவார்கள். ஒரு நாள் ஒரு மிஸ்டு கால் வந்தது. நான் திருப்பி அழைத்துப் பேசினேன். தான் ஒரு கல்லூரி மாணவன் என்றும், என்னை நீண்ட நேரம் பாராட்ட வேண்டும் என்றும், பேலன்ஸ் குறைவாக இருப்பதால், மிஸ்டு கால் கொடுத்ததாகவும் கூறினார். வரும் பாராட்டை விட்டுவிடக் கூடாது என்பதால், “பரவால்ல தம்பி. நீ பேசு” என்று கூறியதுதான் தாமதம். பையன் கன்னாபின்னாவென்று புகழ, எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. பொதுவாக யாராவது தங்களைப் பாராட்டிப் பேசும்போது, குறுக்கே புகுந்து பேசும் பழக்கம் எழுத்தாளர்களுக்கு இல்லை. எனவே நான், “நீ பேசு ராசா… பேசு” என்பது போல் அவரைப் பேசவிட்டுப் புளகாங்கிதத்துடன் கேட்டுவிட்டு, “நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ தம்பி” என்று மனதுக்குள் வாழ்த்திவிட்டு ஃபோனை வைத்தேன்.
மறு வாரத்திலிருந்து வெள்ளிக்கிழமையானால், அந்தப் பையனிடமிருந்து மிஸ்டு கால் வரும். நான் பரபரப்புடன் அடுத்த விநாடியே ஃபோன் செய்து, தன்னடக்கத்துடன் (?) பாராட்டுகளை ஏற்றுக்கொள்வேன். பையனின் பாராட்டில் லேசாகத் தொய்வு ஏற்படும்போது, நானே கட்டுரையின் நல்ல பகுதியைக் குறிப்பிட்டு, “அது எப்படித் தம்பி இருந்துச்சு?” என்று கேட்க… அவர், “அய்யோ… அது சூப்பர் சார்….” என்று தொடர்ந்து பாராட்டுவார்.
திடீரென்று ஒரு நாள் அவரிடமிருந்து மிஸ்டு கால் வராமல் போக, எனக்குப் பதற்றமாகிவிட்டது. பாராட்டுக்குப் பழக்கமாகிவிட்டதால் நேரம் செல்லச் செல்ல ஒரு மாதிரி வியர்த்துவிட்டு, கை, காலெல்லாம் ஆட ஆரம்பித்துவிட்டது. பேசாமல் என் மனைவியிடமே, “உனக்குப் பட்டுப் புடவை வாங்கித் தரேன். ஐந்து நிமிடம் என்னைப் பாராட்டு” என்று கேட்கலாமா என்று தோன்றியது. பொதுவாகக் கணவர்கள் நோபல் பரிசே வாங்கினாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் மனைவிகளுக்கு இல்லை. எனவே அந்த எண்ணத்தை விட்டுவிட்டு, நான் என் மனைவியிடம், “இன்னும் மிஸ்டு காலக் காணோம். பேசாம நானே ஃபோன் போட்டுப் பாராட்ட வாங்கிக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “சீ…. இதெல்லாம் ஒரு பொழப்பா” என்பது போல் என்னைப் பார்க்க…. நான் மவுனமானேன்.
நானும் பாராட்டினேனே
சரி… என்னைப் பாராட்டுகிறார்களே…. நான் யாரையாவது பாராட்டியிருக்கிறேனா? 1990-களில், பல எழுத்தாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, எக்கச்சக்கமாகப் பாராட்டியிருக்கிறேன். ஆனால், ஒரு எழுத்தாளரின் வீட்டுக்குச் சென்றபோது ஒரு பிரச்சினையாகிவிட்டது. அப்படி என்ன பிரச்சினை?
நான் அவரின் பல கதைகளையும் பயங்கரமாகப் பாராட்டிவிட்டு, “தமிழ்நாட்டுல சரஸ்வதி தேவி மொத்தமா உங்க மேலதான் குடிகொண்டிருக்கா சார்” என்பது போல் அடித்துவிட்டேன் பாருங்கள். அண்ணன் அரண்டுபோய்விட்டார். ஒரு மாதிரிக் கூச்சத்துடன், “என்ன தம்பி…” என்றவர் உள்ளே பார்த்துத் தனது மனைவியிடம், “தம்பிக்கு ஸ்வீட்டும் காஃபியும் எடுத்துட்டு வா” என்று கூறிவிட்டு, “அப்புறம்…” என்று அவர் எடுத்துக் கொடுக்க… நான் தொடர்ந்து பாராட்ட ஆரம்பித்தேன்.
ரைட்டர்னா யாரு?
சமையலறையில் ஏதோ டப்பா திறக்கப்படும் சத்தம் கேட்க… நெய் வாசனை ஆளைத் தூக்கியது. மரியாதையாக அதைத் தின்றுவிட்டு வந்திருக்க வேண்டும். வாயில் சனி பகவான் ஜங்கென்று வந்து உட்கார, “அப்புறம் சார்…. உங்க ஆரம்பகாலக் கதைகள் இருந்த அளவுக்கு, இப்ப வர்ற கதைல்லாம் இருக்கறதில்லன்னு சொல்லிக்கிறாங்களே….” என்று சில பேர் சொல்வதை வெள்ளந்தியாகக் கூறிவிட்டேன். அவ்வளவுதான். காட்சி மாறியது. இதுவரையிலும் அவர் முகத்திலிருந்த சிரிப்பு காணாமல்போய், முகம் கடுமையாக மாறி, ‘சிங்கம்’ சூர்யா போல் ஒன்றரை டன் வாய்ஸில், “ஏய்… நீ யாருகிட்ட பேசுறன்னு தெரியுதா?” என்று மிரட்டுவது போல் கேட்க…. எனக்கு வெலவெலத்துவிட்டது. “ரைட்டர் சார்” என்றேன் மெலிதான குரலில்.
“ரைட்டர்னா யாரு?” என்று அவர் கர்ஜிக்க… “யாரு?” என்ற எனக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. அவர் தனது கால் மேல் கால் போட்டுக்கொண்டு, சோஃபாவில் நன்கு தோரணையாகச் சாய்ந்து கொண்டு, தனது வலது கையைத் தலைக்கு மேல் தூக்கி, கட்டைவிரலை உயர்த்திக் காட்டியபடி, “ரைட்டர்ங்கிறவன் எல்லாத்துக்கும் மேல….” என்று கூற நான் உள்ளுக்குள், “ஆத்தாடியோவ்….” என்று அலறினேன்.
தொடர்ந்து முகத்தில் ரௌத்திரம் பொங்கி வழிய அவர், “உன் கூட டீக்கடைல எவனாச்சும் உக்காந்து பேசுவானுங்கள்ல… இந்த மாதிரிப் பேசுறதெல்லாம் அவனுங்க கிட்ட வச்சுக்க. தொலைச்சிடுவேன் தொலைச்சு” என்று எகிற… எனக்கு வயிறு கலங்கிவிட்டது. அப்போது நடிகர் மனோபாலாவுக்கு ஒன்றுவிட்ட தம்பிபோல் இருந்த நான், எங்கே அடிக்கத்தான் போகிறாரோ என்று பயந்துபோய் எழுந்துவிட்டேன்.
அப்போது எழுத்தாளரின் மனைவி சமையலறை யிலிருந்து எட்டி பார்க்க, ‘என்னைக் காப்பாத்து தாயே…’ என்பதுபோல் நான் அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். அவர், ‘இன்னைக்கி நீ சிக்கிட்டியா?’ என்பதுபோல் என்னைப் பார்த்துவிட்டுத் திரும்பி விட்டார்.
கிழக்கும் மேற்கும்
ஆளை விட்டால் போதும் என்று, “உங்களுக்கு மூடு சரியில்ல சார்… நான் கிளம்புறேன்” என்றேன். உடனே அவர் ஆவேசமாக, “நீ போயிட்டீன்னா, உனக்குச் சொன்ன ஸ்வீட்டையும், காபியையும் யாரு சாப்பிடுறது?” என்று கேட்க…. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. “உக்காந்து சாப்பிட்டுட்டு போ” என்று அவர் மிரட்ட…. “இதென்னடா வம்பா போச்சு. தீனி போட்டு அடிக்கப்போறாரா?” என்று திகிலுடன் அமர்ந்தேன். ஸ்வீட்டும், காபியும் வர…. . நான் பீதியுடன் விழுங்கிவிட்டு ஓடி வந்துவிட்டேன். அன்று முதல் நெடுநாட்களுக்கு எழுத்தாளர்கள் யாரையாவது கிழக்கே பார்த்தால், மேற்கே தலைதெறித்து ஓடிவிடுவேன்.
பாராட்டுவ?
சரி… விமர்சித்தால்தானே பிரச்சினை என்று, அதன் பிறகு எழுத்தாளர்களைப் புத்தகக் கண்காட்சிகளிலோ, இலக்கியக் கூட்டங்களிலோ பார்க்கும் போது அவர்களுடைய நல்லபடைப்பு களை மட்டும் குறிப்பிட்டுப் பாராட்ட, பிரச்சினையில்லாமல் ஓடிக்கொண் டிருந்தது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியின்போது அதுவும் பிரச்சினையாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளரிடம், “தம்பி…. உங்களோட அந்தச் சிறுகதை ரொம்ப நல்லா இருந்துச்சு” என்றேன். தம்பி என்ன மூடில் இருந்தார் என்று தெரியவில்லை. “அந்தக் கதையா? அது ஒண்ணும் நல்லா இல்லையே” என்றார் அலட்சியமாக.
“இல்ல தம்பி. நல்லாதான் இருந்துச்சு. நான் உங்க கதையத்தான் சொல்றேன்” என்றேன். உடனே அவர் எரிச்சலுடன், “என் கதைதான் சார். எனக்கு அந்தக் கதை பிடிக்கவே இல்ல...” என்றார். “இல்ல தம்பி... அந்தக் கதைல எவ்வளவு நுட்பமா” என்று நான் ஆரம்பிக்க.… அவர் பயங்கரக் கோபத்துடன், “ஹலோ…. நான் அது நல்லால்லங்கிறேன். நீங்க மறுபடியும், மறுபடியும் நல்லாருக்குன்னா என்ன அர்த்தம்?” என்று குரலை உயர்த்திப் பேச... அமைதியான நான், “இனிமே யாரையாச்சும் பாராட்டுவியா? பாராட்டுவியா?” என்று என்னை நானே திட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago