"கமர்ஷியல் படங்களே என் தேர்வு" - ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் நேர்காணல்

“வேகமாகப் பறந்துகொண்டி ருக்கிறது ‘றெக்க’ என்று சொல்லலாம். சுமார் 40% படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். காரைக்குடியிலும் மதுரையிலும் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தற்போது கும்பகோணத்தில் தொடங்கியிருக்கிறோம்” என்று சிரிக்கிறார் இளம் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்கள் மூலமாகத் தனது திறமையை நிரூபித்தவரிடம் பேசியதிலிருந்து..

ஒளிப்பதிவுத் துறையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

படிக்கும்போதே எந்த ஒரு விஷயத்திலும் உடனே பதிலைத் தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருப்பேன். புகைப்படம் எடுத்தால் நம்முடைய பணி எப்படி என்பது உடனடியாகத் தெரிந்துவிடும். பரீட்சை எழுதி 2 மாதங்கள் ரிசல்ட்டுக்குக் காத்திருப்பதை விட, இந்த மாதிரி உடனடி ரிசல்ட்டில் கவனம் செலுத்துவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கு எப்போதுமே ரொம்ப கிரியேட்டிவாகப் பணியாற்றுவது பிடிக்கும். அதனால் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தது. உடனடியாகத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளருக்குப் படித்து வேலைசெய்ய ஆரம்பித்தேன். மாணவப் பத்திரிகையாளராகச் சில காலம் புகைப்படம் எடுத்தேன். அதற்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளராகப் பணிபுரிந்தேன். ‘வாரணம் ஆயிரம்’, ‘எந்திரன்’, ‘டேவிட்’ உள்ளிட்ட படங்களில் அவருடன் பணியாற்றிவிட்டு ‘சூது கவ்வும்’ மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

எல்லாமே அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். ஒரு காட்சியைப் படமாக்கும் முன்பு, அந்தக் காட்சியை நாம் எப்படிப் படமாக்கப் போகிறோம் என்பதற்காக ரொம்ப ஹோம் வொர்க் பண்ணுவார். இயக்குநர் சொல்லும் விஷயங்களை நாம் எப்படி உள்வாங்கி அதனை நம்முடைய பணியில் வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

‘எந்திரன்’ படப்பிடிப்பில் உங்களால் மறக்க முடியாத சம்பவம் எது?

படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சார் கேரவனுக்குள் அதிகமாகப் போக மாட்டார். காட்சியில்லை என்றால்கூடப் படப்பிடிப்பு தளத்தில்தான் உட்கார்ந்திருப்பார். எல்லாரும் எப்படிப் பணியாற்றுகிறார்கள் என்பதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருக்கு அது ரொம்ப பிடிக்கும். எனது திரைப்படக் கல்லூரிப் பணிக்காக, தமிழக அரசு விருது வாங்கினேன். ‘எந்திரன்’ இடைவேளையில் வரும் துப்பாக்கிக் காட்சியைக் காலையில் படமாக்கினோம், மாலையில் நான் விருது வாங்கச் சென்றேன். நான் விருது வாங்கும் போது விழாவில் ரஜினி சாரும் இருந்தார். அவருடைய படத்தில் பணியாற்றும்போது, அவர் முன்னிலையில் தமிழக அரசு விருது வாங்கியது மறக்க முடியாத ஒன்று.

‘சூது கவ்வும்’, ‘மெல்லிசை’, ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘றெக்க’ எனத் தொடர்ச்சியாக விஜய் சேதுபதி படங்களிலேயே பணியாற்றுவதன் ரகசியம் என்ன?

அது தானாக நடக்கிறது. இயக்குநர்கள் அனைவருமே என்னுடைய நண்பர்கள். அவர்களுடைய படத்தில் விஜய் சேதுபதி இருக்கார் அவ்வளவுதான். விஜய் சேதுபதி எனக்கு ஒரு உண்மையான நண்பர் என்று சொல்வேன். நான் நன்றாக வர வேண்டும் என்று நினைப்பவர் அவர். எங்கள் நட்பு வலுவாகிக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் எப்போது படத்தை இயக்கப்போகிறீர்கள்?

இப்போதைக்கு ஒளிப்பதிவாளராக நான் நிறைய படங்கள் பண்ண வேண்டும். பல்வேறு வித்தியாசமான கதைக் களங்கள் கொண்ட படங்களில் பணிபுரிய வேண்டும் என்று தான் பார்க்கிறேன். இப்போதைக்கு அந்த மாதிரி எண்ணமே கிடையாது. ஒளிப்பதிவில் வேறு என்ன வித்தியாசம் பண்ணலாம் என்பதில் மட்டுமே எனது முழுக் கவனமும் இருக்கிறது.

எந்த வகையான படங்களில் ஒளிப்பதிவு பண்ணுவதற்கு ரொம்ப பிடிக்கும்? என்ன காரணம்?

எனக்கு கமர்ஷியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். நல்ல பட்ஜெட் இருக்கும், ஒளிப்பதிவில் காட்சிகளைப் பிரம்மாண்டமாகக் காட்டலாம். தமிழ் சினிமாவில் தற்போதும் நாயகர்களைத் தெய்வமாகத்தான் பார்க்கிறார்கள். நாயகன் அசாத்தியமான ஒரு விஷயத்தைப் பண்ணும்போதுதான் மக்கள் ரசிக்கிறார்கள். அதனால் எனக்கு அந்த மாதிரி படங்கள் பண்ணுவது ரொம்ப பிடிக்கும். நலன் குமரசாமியுடன் பணிபுரிந்திருக்கிறேன். அவருடைய ‘ஸ்டைல்’ படங்களிலும் பணியாற்றுவதற்குப் பிடிக்கும்.

கமர்ஷியல் படங்கள் மட்டுமே பணியாற்றுவேன் என்று கிடையாது. எல்லா வகையான படங்களிலும் என்னுடைய திறமையைக் காட்ட ஆசைதான். ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்குமே இந்த ஆசை உண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

36 mins ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்