கிரீஸ் படிந்த முகத்தில் காதல் கொப்பளிக்கத் தான் பழுதுபார்த்த பைக்கைக் கோணலாக உட்கார்ந்து ஓட்டியபடி ‘தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களி மண்ணை’ என அந்த இளைஞர் பாட, ‘உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்’ எனக் காதலியைத் தோள்மீது சாய்த்து அரவணைத்துப் பாட, தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய இசையமைப்பாளர் கிடைத்தார். 2004-ல் ‘காதல்’ திரைப்படம் மூலம் புதிய இசை அலையை உருவாக்கினார் ஜோஷ்வா ஸ்ரீதர். பல வருடங்களுக்குப் பிறகு சூசன் டிமெலோவின் அழுத்தமான குரலில் ‘மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே’ கேட்டபோது ஜோஷ்வாவின் மறுபிரவேசத்தை ஆவலோடு எதிர்பார்த்தோம். அத்தனை மாயாஜாலமான பாடலைத் தந்துவிட்டு மீண்டும் மாயமானார். விரைவில் வெளிவரவிருக்கும் பாஷா நாசர், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் தனபால் பதமநாபன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பறந்து செல்ல வா’ படப் பாடல்களிலும் அதே உயிரோட்டம் இருக்கிறது.
இளையராஜாவைப் போல ஆவேன்
அப்படத்துக்குத் தற்போது அமைதியாகப் பின்னணி இசையமைத்துக் கொண்டிருக்கிறார் ஜோஷ்வா ஸ்ரீதர். தன்னை அறியாமல் இளையராஜாவின் இசை அவரை ஆக்கிரமிக்க, “நானும் ஒரு நாள் இளையராஜாவைப் போல இசை யமைப்பாளர் ஆவேன் என எட்டு வயதில் அம்மாவிடம் கூறினேன்” என்கிறார்.
முன்பின் இசையே அறிமுகமாகாத குடும்பம் என்பதால் ஏதோ மகன் உளறுகிறான் என வீட்டில் யாருமே கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீதர் மனத்தில் இளையராஜவின் இசை விஷம்போல ஏறியது. “பத்தாவது முடித்தவுடன் பியானோ கத்துகிட்டு இளையராஜாவிடம் கீபோர்டிஸ்ட் ஆகணும் என முடிவெடுத்தேன்” என்கிறார். மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூசிக்கில் பியானோ வாசிக்கவும் மேற்கத்திய இசையின் நுணுக்கங்களையும் தீவிரமாகக் கற்றார். அப்போதுதான் ‘ரோஜா’ படம் வெளியாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை புயலாகத் தாக்கியது. “அதுவரை இசை என்றால் இளையராஜாதான் என வெறித்தனமாக நம்பிய எனக்குள் ஏ.ஆர்.ரஹமானின் இசை புதிய ரத்தம் பாய்ச்சியது” என்கிறார்.
முதல் நண்பர்
பியானோ படிக்கும்போது கூடவே கித்தார் கற்ற பெண்ணோடு காதல் மலர 19 வயதில் கல்யாணம்; 20 வயதில் முதல் குழந்தை என வாழ்க்கையின் போக்கு மாறியது. இரண்டாண்டு படிப்பு முடிந்ததும் நேரடியாக இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு முன்னால் போய் நின்றார். பல மாதங்கள் நின்றும் பிரயோஜனமில்லை. அதுவரை ஸ்ரீதராக இருந்தவர் கல்யாணத்துக்குப் பிறகு கிறிஸ்தவராக மாறி ஜோஷ்வா ஸ்ரீதர் ஆனார். இதனை அடுத்து, காஸ்பெல் இசை ஆல்பங்கள் இசையமைக்கும் வாய்ப்பு தேவாலயம் மூலமாகக் கிடைத்தது.
எதேச்சையாக இந்தப் பாடல்களைக் கேட்ட பிரபலத் திரைப்படப் புல்லாங்குழல் கலைஞர் நவீன் ஒரு நாள் ஜோஷ்வாவைத் தேடி வந்து தன்னுடைய ஆல்பங்களுக்குக் கீபோர்ட் வாசிக்கும் வாய்ப்பு கொடுத்தார். நவீன்தான் திரைத் துறையில் தனக்குக் கிடைத்த முதல் நண்பர் என நெகிழ்கிறார் ஜோஷ்வா. ஏதோ கிடைத்ததைச் செய்வோம் எனத் தொடங்கியது சினிமாவுக்கான கதவைத் திறந்துவைத்தது. தெலுங்குத் திரை இசையமைப்பாளர் கீரவாணி், அடுத்து, இசையமைப்பாளர் மணிஷர்மாவின் முதல் படம் தொடங்கித் தொடர்ந்து மூன்றாண்டுகள் அவருடைய படங்களில் கீபோர்டு வாசித்தார். அதை அடுத்து இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு இசையமைத்துவந்த சந்தீப் சவுதாவிடம் கீபோர்டிஸ்ட் ஆனார். இவர்களோடு நட்பும் மலர்ந்தது. ஏற்கெனவே ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ‘தவுத்’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்ததால் அவருடைய அறிமுகம் கிடைத்தது.
‘காதல்’ கிடைத்தது
எப்படியாவது இளையராஜாவிடம் கீபோர்ட் வாசித்துவிட வேண்டும் என்கிற கனவு நிறைவேறாவிட்டாலும் தன்னுடைய இரண்டாவது கனவு நிறைவேறியது என்கிறார் ஜோஷ்வா. பார்த்தாலே பரவசம்’, ‘லகான்’ ‘காதல் வைரஸ்’, ‘பாய்ஸ்’ எனத் தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் ரஹ்மானின் 15 படங்களில் அற்புதமான பல பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கீபோர்ட் வாசித்தார். இதே நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களோடும் இசையால் இணைந்தார்.
‘பாய்ஸ்’ படத்தில் ஜோஷ்வாவின் திறமையைக் கவனித்த இயக்குநர் ஷங்கர் அப்போது முதல் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்த பாலாஜி சக்திவேலுக்கு அறிமுகம் செய்தார். முதல் சந்திப்பில் ஜோஷ்வாவின் சொந்த இசையமைப்பின் டெமோவை பாலாஜி சக்திவேல் கேட்க ஜோஷ்வாவிடம் ஏதும் இல்லை. உடனடியாகச் சில மணித்துளிகளில் மூன்று பாடல் மெட்டுகளைப் போட்டுக் கொடுத்தார். அவை உடனடியாகப் பிடித்துப்போக, ‘காதல் இசை’ அங்கே தொடங்கியது.
திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் கொண்டாடப்பட்டது ‘காதல்’. ஆனால் ஜோஷ்வாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த எதிர்பாராத சம்பவங்கள் அவருடைய வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. பெரிய பட வாய்ப்புகள் பல கை நழுவிப் போக, மனம் தளர்ந்தாலும் இடைவிடாது தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்துவந்தார். ஒரு பக்கம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்றால் மறுபக்கம் சமூக அக்கறை அற்ற படங்களுக்கு இசையமைக்கத் தொடர்ந்து மறுத்திருக்கிறார் ஜோஷ்வா. 2007-ல் ‘கல்லூரி’, 2011-ல் ‘வெப்பம்’ போன்றவை சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவலாகப் பேசப்பட்டன.
இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் இசையமைப்பின் நிலை குறித்தும் கடும் கோபம் கொண்டிருக்கிறார். அது அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலிக்கிறது. இன்று பெரும்பாலான பாடல்கள் மனதில் நிற்காமல்போகக் காரணம் தற்போது உள்ளவர்களில் பலர் இசையமைப்பாளர்களே அல்ல; ஓசையமைப்பாளர்கள் எனக் கடுமையாக விமர்சிக்கிறார். ஒருபோதும் ஓசையமைப்பாளர் ஆக மாட்டேன் எனவும் முழங்குகிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago