உங்கள் முடிவுகளுக்கு நீங்களே பொறுப்பு

By ஆனந்த் கிருஷ்ணா

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகும் சிக்கல்கள் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு அடிப்படை ‘நான் யார்’என்னும் அடையாளச் சிக்கல்தான். நான் யார் என்பதை சாதி, மதம், நாடு, மொழி, ஆகிய இவற்றைக் கொண்டுதான் நாம் நிர்ணயிக்கிறோம். நம்முடைய அடையாளம் நமக்கு வெளியில் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது.

நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நமக்கு வெளியில் உள்ளவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, மரபு என்ற பெயரில் தொடர்ந்து நடந்துகொண்டுவரும் ஓட்டம்தான் இதை நிர்ணயிக்கிறது. இந்த ஓட்டத்தைப் பொறுத்தவரையில் தன்னுடைய தொடர்ச்சி மட்டும்தான் இதற்கு முக்கியம். யாரையும் இது கணக்கில் கொள்வதில்லை.

பெற்றோர்களும் இந்த ஓட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். இது பெற்றோர்களின் வழியாகத்தான் செயல்படுகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பிரச்சினை வராதவரை, இந்த அடையாளம் பற்றிய கேள்வியே எழுவதில்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் வரும்போதுதான் இந்தப் பிரச்சினை தலையெடுக்கிறது.

‘நீ என் மகனே/மகளே அல்ல’ என்ற ரீதியில் பேச்சு எழுகிறது. ‘மகன் அல்லது மகள்’ என்னும் அடையாளத்தை, உரிமையை நிராகரித்துவிடுவோம் என்று பயமுறுத்தும் அளவுக்குப் பெற்றோர் போய்விடுகிறார்கள். ‘சொத்து கிடையாது’ என்று சொல்லப்படுகிறது.

இந்த அச்சுறுத்தலும் அச்சமும் ஏன் ஏற்படுகின்றன? நம் அடையாளம் என்ன என்பது நமக்குத் தெரியாது. குடும்பம், சாதி, நாடு போன்றவற்றின் அடிப்படையில்தான் நாம் நம் அடையாளத்தை வைத்திருக்கிறோம்.

முன்னோர், வாரிசு என்று தொடரும் இந்த ஓட்டம் நம் தனித்துவத்தை அங்கீகரிப்பதில்லை. ஏனெனில், தனித்துவம் இந்த ஓட்டத்தின் கண்மூடித்தனத்தை மறுக்கிறது. நம் அடையாளம் என்ன என்பதை நாம் அறியும்வரை, நாம் எல்லோரும் இந்த ஓட்டத்தின் கைதிகள்தான். நம் உண்மையான சுய அடையாளத்தை நாம் அறிந்துகொள்ளத் தொடங்கினால்தான் இந்த ஓட்டம் இல்லாது போகும்.

பெற்றோருக்கு நாம் மகன் அல்லது மகள். கூடப் பிறந்தவர்களுக்கு சகோதரன் அல்லது சகோதரி. மணம் செய்துகொண்டவருக்குக் கணவன் அல்லது மனைவி. குழந்தைகளுக்குத் தந்தை அல்லது தாய். நமக்கு நாம் யார்? எனக்கு நான் யார்? இந்தக் கேள்விக்கு விடை காணும்போதுதான் மரபின் ஆட்சியிலிருந்து நாம் விடுபட வழி பிறக்கும்.

இந்தக் கேள்விக்கு சொல்லளவில், ‘இதுதான்’ என்று எந்த பதிலும் கிடையாது. ஆனால் இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போதுதான், நமக்குள் புதியதொரு சுயநிர்ணயம் பிறக்கும். அதன்பின் வாழ்க்கை வேறு ஒரு புதிய வெளிச்சத்தில், புதிய கோணத்தில் நடக்கத் தொடங்கும். அப்போதுதான் அன்பின் வழி திறக்கும்.

கேள்வி:எனக்கு 20 வயது ஆகிறது. நான் எட்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். ஆனால், அந்த பெண்ணுக்கு என் அண்ணனை மணமுடிக்கப் பெரியோர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அந்தப் பெண் என்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிறாள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் காலகட்டம் புதியது. இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் இதுவரையில் நடக்காதவை. இதுவரையில் பெற்றோரின் ஆதிக்கத்தில்தான் நாம் இருந்துவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை நாம் அறிந்திராத விஷயங்கள் பரலாக வெளிப்பட்டிருக்கின்றன. புதிய அறிவு அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது. பெற்றோரைவிட மக்களுக்கு அதிக அறிவு கிடைத்திருக்கிறது. பெற்றோரிடம் மக்களுக்கு முன்பு இருந்த பயம் இப்போது இல்லை. ஆனால் பெற்றோர் அன்பு என்னும் பெயரில் இன்னும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார்கள். பெற்றோரின் மனம் புண்படுமே என்ற குழந்தைகளின் நினைப்பை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களுக்கும், இது சரி, இது தவறு,’ என்பது குறித்துப் பெருமளவுக்குக் குழப்பமும் இருக்கிறது. தன் முடிவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதை வைத்துத்தான் நாம் நம்முடைய முடிவுகளை எடுக்க வேண்டும். ‘இதுதான் சரியான முடிவு,’ என்று யாராலும் சொல்ல முடியாது. நன்கு சிந்தித்துச் செயல்படுங்கள்.

கேள்வி:நான் 2009ல் கல்லூரியை முடித்தேன். கல்லூரியின் கடைசி ஆண்டில் என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் என்னிடம் காதலைத் தெரிவித்தான். என் பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அப்போது அவன் காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பிறகு கல்லூரி முடித்தவுடன் அவன் பேசிப் பேசி என்னைச் சம்மத்திக்க வைத்தான். நாங்கள் காதலிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் என் பெற்றோரிடம் காதலைச் சொன்னேன். எதிர்பார்த்தபடியே அவர்கள் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை

என் பெற்றோருடைய பிரச்சினை சாதிதான் என்று புரிகிறது. எனக்கு வேறு சாதியில் திருமணம் செய்துவைத்தால் அவர்களை உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்கிறார்கள். எனக்கு எந்த நியாயமான காரணங்களையும் சொல்லாமல், காதல் திருமணம் செய்துகொண்டால் உன் வாழ்க்கை நன்றாக இருக்காது என்று சொல்கிறார்கள். என் பெற்றோர் என் மகிழ்ச்சியைவிட உறவினர்களின் கருத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கே திருமணங்களில் சாதி ஏன் இவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது? நான் என் பெற்றோருடைய சொல்படி திருமணம் செய்துகொண்டால் என்னால் நிம்மதியாக வாழ முடியாது. என் காதலனை ஏமாற்ற நான் விரும்பவில்லை. நான் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும்?

உங்களுக்கு என்ன வேண்டும்? பெற்றோரின் ஆதரவா? காதலரின் துணையா? உங்களை நீங்கள் மதித்து முடிவெடுக்கும் திருப்தியா? யார் உங்களுக்கு முக்கியம்? நீங்களா மற்றவர்களா? உங்கள் வாழ்க்கையில் அதி முக்கியமான நபர் யார்? நீங்களா மற்ற யாருமா? இந்தக் கேள்விக்கான விடைகளை வைத்துத்தான் உங்கள் முடிவு அமைய முடியும். இதை வைத்துத்தான் உங்கள் வாழ்க்கையும் உங்கள் எதிர்காலமும் அமையும். உங்கள் வாழ்க்கைப் பாதை எந்தத் திசையில் நகரப் போகிறது, நகர வேண்டும் என்பதை நீங்கள் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்