உள்நோக்கிய பயணம் வேண்டும் - சத்குரு நேர்காணல்

By மகராசன் மோகன்

சுவிட்சர்லாந்த் தேசத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆலோசகராகவும் இருக்கிறார். ‘ஆதியோகி’ ஆலயம் எழுப்பி யோகா பயிற்றுவிக்கும் யோகியாகவும் வலம் வருகிறார். கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் மாலைப்பொழுதில் மாட்டு வண்டி பூட்டிக்கொண்டு சுற்றித் திரியும் சாமானியனாகவும் பிரவேசிக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். அவரிடம் பேசும் ஒவ்வொரு நிமிடமும் ஆனந்த அலை பூக்கவே செய்கிறது. சுற்றிலும் மரங்களும், அவை தரும் நிழலும் குவிந்திருந்த ஒரு நண்மதிய வேளையில் கோவையிலுள்ள அவரது ஈஷா யோகா மையத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து…

ஒரு யோகி, நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

ஆன்மிகம் என்றால் ஊனம் என்ற தப்பான கருத்தைப் பரப்பியிருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இருந்தால் நீங்கள், எதைச் செய்ய முடியாது என்று கேட்கிறார்கள். ஆன்மிகப் பணியைத் தொடர்கிறோம் என்றால் நீங்க லெளகீகத்தில் எந்த அளவுக்குத் திறமையாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் மேல் திறமையாக இருந்தால்தான் இன்னொரு பரிமாணம் கிட்டும். ஒரு மகத்தான புது சக்தி, புது வாய்ப்பு, புதுப் பரிமாணத்தை உருவாக்குகிற ஆன்மீகத்தை இப்போது நாம் ஊனமாக வைத்திருக்கிறோம். சரியாகச் சாப்பிட மாட்டீர்கள், தூங்க மாட்டீர்கள், சரியான ஆடைகள் அணிந்துகொள்ள மாட்டீர்கள், சரியாக வாழ மாட்டீர்கள் என்றால் உடனே அதுதான் ஆன்மிகம் என்று ஆகிவிட்டது. இந்த அடிப்படையை மாற்ற வேண்டும் என்பதுதான் ஈஷாவின் முக்கிய நோக்கம். நம் கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டால், ஆன்மீக வழியில் இருந்தவர்கள்தான் ஒரு பெரிய வைத்தியர், மேத்மேடிக்ஸ் ஆய்வாளர், ஒரு சயின்டிஸ்ட் எல்லாருமே. இந்தக் கலாச்சாரத்தில் முக்கியச் செயலை செய்தது அவர்கள்தான். இருக்கும் திறமையை விட்டுவிட்டு எதுவும் செய்யாமல் இருப்பது ஆன்மிகம் அல்ல. நம்ம திறமை இன்னொரு பரிமாணத்துக்குப் போனால்தானே அதுக்கு மதிப்பு. ஊனமாகப் போகும் யோகா தேவையில்லையே. இங்கே அந்த மாதிரி யோகா இல்லை.

இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் ஏன் இந்தியாவில் வேர் விட்டு வளராமல் போனது?

ஒரு மதத்தை உருவாக்கும் நோக்கம் புத்தருக்கு அப்போது இல்லை. இந்தியாவில் பௌத்தம் வளராமல் வெளிநாட்டில் போய் இருக்கிறது என்றால், அதற்குப் புத்தர் செய்த வேலைதான் அடிப்படைக் காரணம். இந்த நாட்டில், இந்த கலாச்சாரத்தில் அவர் சொன்னது ஒன்றும் புதிதல்ல. முதலில் இருந்தே இருந்த ஒன்றுதான். ஆரம்பத்தில் சிலர் ரொம்ப முக்கியான படிநிலையாக ஆன்மிகம் என்பது வெரும் சமஸ்கிருத பாஷையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இந்த சமஸ்கிருத பாஷை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும்தான் வாய்ப்பாக இருந்தது. அப்போ சாமானிய மக்களுக்கு இந்த ஆன்மீகத்தின் வழியை அடைய வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. புத்தர் வந்தபோது முக்கியமான வேலை என்ன செய்தார் என்றால், சாமானிய பாஷையில் பேச ஆரம்பித்தார். அதுவே ஒரு பெரிய புரட்சியாக நடந்தது. சாமானிய மக்கள் அதையெல்லாம் காதில் கேட்டதே இல்லை. ஆனால், மேற்கத்திய வெளிநாடுகளின் பக்கம் போனால், அவர்கள் இதையெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை.மனிதன் உள்நோக்கிச் செல்லும் நிலையே அவர்களுக்குத் தெரியாது. எல்லாவற்றிற்கும் கடவுளைக் கூப்பிட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மதமில்லாத ஆன்மிகம் இங்கேதான் பிறந்து வளர்ந்திருக்கிறது.

புத்தர் சொன்ன முக்கியமான புரட்சி என்னவென்றால், இந்துக் கலாச்சாரம் அந்தக் காலத்தில் சடங்குகளால் சிக்கிக் கிடந்தது. அதனால் தியான நிலையில் அதுக்கு மேல ஒரு விஷயத்தைச் செதுக்க முடியும் என்று இந்தத் தியான வழியைக் காட்டினார். ஆனால் இப்போ இருக்கும் புத்தம் இந்த இந்துக் கலாச்சாரத்தில் என்ன சடங்குகள் இருக்கோ, அதற்கும் மேலே சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டில் இப்போது அது செல்லாது.

இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சுலபமாகிவிட்டது. அந்த வேலை நிம்மதியைக் கொடுக்கவில்லை என்ற கணிப்பு நிலவுகிறதே?

ரொம்ப வேகமாக ஓடினால் கொஞ்ச தூரம் போனதும் எல்லாம் போதும் என்று ஆகிவிடும். இப்போது எல்லாம் 35 வயதுக்குள் வாழ்க்கை போதும் என்று ஆகிவிடுகிறது. இதை நான் தவறாகச் சொல்லவில்லை. வாழ்க்கையின் பிழைப்புக்காக 30, 35 வயது வரைக்கும் ஓடுகிறோம். அதற்குப் பின் மனிதனுக்கு எதில் விருப்பமோ அதில் ஈடுபாடு ஒன்றை உருவாக்கத் திட்டமிட வேண்டும். பிழைப்புக்காகச் செய்யும் செயல்களை 30, 35 வயதுக்குள் முடித்துவிட வேண்டும். இந்தத் தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது.

வெற்றிகரமாக வாழ்க்கையின் முதல் படியை நடத்திவிட்டீர்கள். அதன்பின் உள்நோக்கிப் போக வேண்டும். மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற ஆர்வம் வர வேண்டும். அந்த ஆர்வம் முறைப்படி இருக்க ஈஷா ஒரு பெரிய புரட்சி மாதிரி செயல்பட்டுவருகிறது.

சிலர் பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்களே? இது இயற்கைக்கு முரணான விஷயம் இல்லையா?

உங்கள் சொல்படி பார்த்தால் மக்கள்தொகை இன்னும் 10 ஆண்டுகளில் 200 கோடி ஆகிவிடுமே. பிரம்மச்சர்யம் இயற்கைக்கு எதிர்மறை என்றால், ஃபேமிலி பிளானிங் இயற்கைக்கு எதிர்மறை இல்லையா? இப்போது இங்கே இருக்கும் தொழில்முறைகள் எல்லாமே இயற்கைக்கு எதிர்மறையாகத்தானே இருக்கிறது.

இயற்கை என்பது பல நிலைகளில் செயல்படுகிறது. உங்களுக்குள் பார்த்தாலே புரியும். ஒரு நிலை வெறும் பிழைப்பு. அதுக்கு என்ன தெரியும்? சாப்பாடு, தூக்கம், இனப்பெருக்கம், இறப்பு இவ்வளவுதான். இது பொருள் நிலையில் இருக்கும் இயற்கை. உங்களுக்குள் இருக்கும் சூட்சம இயற்கைக்குச் சக்தி கொடுப்பீர்களா? இல்லை ஸ்தூலமாக இருக்கும் இயற்கைக்குச் சக்தி கொடுப்பீர்களா? கல்யாணம் செய்தாலும், பிரம்மச்சாரியாக இருந்தாலும் கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு தனி மனிதனுக்கு எப்படித் தேவையோ, அப்படிப் பண்ணிக்க வேண்டியதுதானே.

தனிமையில் இருக்கும் பெண்கள்தான் அதிகம் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆட்படுகிறார்கள் என்கிற கருத்து உள்ளது. ஆண்களின் மனநிலைதான் என்ன?

ஒரு புலி காட்டில் உட்கார்ந்திருக்கிறது. 10 காட்டெருமைகள் இருந்தால் அவற்றிடம் நெருங்காது. தனியாக ஒன்று இருந்தால் நெருங்கும். ஏனென்றால் அது பலவீனமாக இருக்கும்போது சுலபமாக வேலை நடக்கிறது. பெண் என்றால் கடவுள் என்றும் சொல்லிக் கொடுத்தோம். கிராமத்தில் அம்மனுக்குப் பூஜை செய்கிறார்கள். இருந்தும் எப்படித் தவறாக நடந்துகொள்கிறார்கள்? பெண்ணைத் தெய்வமாகப் பார்த்தால் இப்படி உணர்வுகள் வராதே. காமம் என்பது மனிதனுக்குள் இருக்கிறது.

கலாச்சாரம் வழியே இந்தக் காமம், ஆவேசம் எல்லாமே ஒரு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். கட்டுப்பாடு இல்லாமல் இப்படிப் போவதற்கு முக்கியக் காரணம் இப்போது ஆல்கஹால் அதிகமாகப் பயன்படுத்தும் சூழல் வந்ததுதான். சாமானியன் குடிக்க ஆரம்பித்ததும் இந்தத் தலைமுறையில்தான். இயல்பான நிலையில் இருக்கும் மனிதன் ஒரு துளி ஆல்கஹால் விழுந்தால் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடுகிறான்.

ஆன்மீகத்தைப் போதிக்கும் சிலர், கொலை வழக்குகளிலும், பாலியல் பிரச்சினைகளிலும் சிக்குகிறார்களே?

சமூகத்திற்கு நல்லதைச் செய்யும் ஆட்களும் இருக்கிறார்களே... ஆன்மிகம் போதிக்கும் எவ்வளவோ பேர் மகத்தான வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுங்களேன்.

கடவுள் மறுப்பாளர்கள் சிலர், பண்டிகைகள், விழாக்களை மட்டும் கொண்டாடுகிறார்களே?

ஏன் கொண்டாடக் கூடாது? கடவுளுக்கு எதுவும் தேவையில்லையே. மனிதனுத்தானே தேவை. சிலர் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். சிலர் இல்லை என்கிறார்கள். உண்மையை உணரணும் என்கிற ஆசையை விட்டுவிட்டு இவர்கள் தனக்கென்று ஒரு தீர்வை முடிவாக வைக்கிறார்கள்.

தெரியாது என்பதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். எனக்குத் தெரியவில்லையே என்றால் ஒரு தேடுதல் வரும். தேடுதல் வந்தால் புரிந்துகொள்கிற வாய்ப்பு அமையும். சிலர் இப்படி, சிலர் அப்படி. ரெண்டு பேருமே ஒன்றுதான். அதனால்தான் ரெண்டு பேரும் ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள். எப்படியோ கொண்டாடினால் நல்லதுதானே.

பசுமை, கல்வி, மன அமைதி, பொருளாதார ஆலோசனை இப்படித் தொடரும் உங்கள் சமூகப் பணிகளில், அடுத்து புதிதாக ஏதேனும் திட்டம்?

ஒரு முக்கியமான பணி ரொம்ப நாளாகவே மனதில் உள்ளது. ஒரு லீடர்ஷிப் அகடமி தொடங்க வேண்டும். அதற்கான முயற்சியில் இருக்கிறோம். நம் நாட்டில் ஒரு நல்ல தலைவன் வந்தால் அவரை எல்லோரும் கும்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதேபோல அந்தத் தலைவன் மேலே இருக்க வேண்டும் என்றால் கீழே பல அடுக்குகள் இருக்கும். அவற்றில் உள்ள சிறு தலைவர்கள் நல்லவர்களாக இருந்தால்தான் தலைவனும் நல்லபடியாக இயங்கும் வாய்ப்பு அமையும். இந்த லீடர்ஷிப் திட்டத்தை 11 அடுக்காகப் பிரித்து வைத்திருக்கேன். இந்த 11 அடுக்குகளிலும் எல்லோரும் பொருந்துவார்கள்.

மேலும் ‘சயின்ஸ் எக்ஸ்ப்லோரேட்டிரியம்’ ஒன்று உருவாக்க திட்டமிட்டிருக்கோம். ஒரு பூ மலர்கிறது என்றால் அதற்குள் இருக்கும் பிசிக்ஸ், பையாலஜி என்ன என்று புரிந்துகொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வேலையைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். அதுக்கு அரசின் உதவியும் தேவை. இதைச் செய்தால் விஞ்ஞானபூர்வமான சமூகம் மலரும்.

சிவராத்திரி போன்ற நாட்களில் உங்கள் நடனம் தெருவையே அலங்கரிக்கும் வண்ணத்தில் இருக்கிறதே?

மனிதனுக்குள்ளே ஒரு பேரானந்தம் என்பது இருந்தால் அது சிரிப்பாக வெளிப்படும் அல்லது ஒரு நல்ல வார்த்தையாக வெளிப்படும் அல்லது பாடலாக வெளிப்படும். வாய்ப்பிருந்தால் அது நல்ல நடனமாக வெளிப்படும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்.

சுத்தமில்லாத நீர், சுகாதாரமில்லாத காற்று, ஒலி மாசுபாடு இப்படி ஐம்பூதங்களும் வருத்தப்படக் கூடிய நிகழ்வுகள் அதிகரித்துவருகின்றன...

இதெல்லாம் மனிதன் நன்றாக வாழ வேண்டும் என்கிற முயற்சியில் நடந்த விஷயம். இப்போது பரவலாக நவீன விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில் பார்க்கும் எல்லாவற்றையும் எப்படி உபயோகப்படுத்துவது என்று நினைக்கிறோம். ஒரு பூவைப் பார்த்தால் எப்படி உபயோகப் படுத்துவது, எறும்பு, இலை, யானை, சிறு அணுவைக்கூடப் பார்த்தால் எப்படி உபயோகப் படுத்துவது என்றாகி அதை விட மாட்டேன் என்கிறோம்.

இப்போது எல்லாவற்றையும் உப யோகப்படுத்துவதைக் கற்றுக்கொண்டோம். ஆனால் நன்மையாக இருப்பது எப்படி என்று புரியவில்லை. அப்படி என்றால் இந்த விஞ்ஞானம், தொழில்நுட்பம் தேவையில்லையா என்றால் தேவைதான். ஆனால் மனிதனே நன்மை என்கிற நிலைக்கு வந்து, அதன் பின் செய்தால் நல்லது.

பூமி, சூரிய மண்டலம், இப்போ புதிதாக தண்ணீர் இருக்கும் 5 கிரகணங்கள் எல்லாம் சொல் கிறார்கள். அதெல்லாம் முடிக்கிற வரைக்கும் நம்மால் சும்மா இருக்க முடியாது. அதையெல்லாம் முடித் தாலும் நமக்கு நன்மை வராது. சுக சௌகரியம் வரும். நன்மை தேடு தலில் மனிதன் இருக்கும் வரைக்கும் எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஆபத்துதான். பஞ்ச பூதங்களுக்கும் ஆபத்துதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்