நட்புக்காகத் தியாகம் செய்வது தப்பா?

By ஆனந்த் கிருஷ்ணா

நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையை வாழும் விதம் விசித்திரமானது. பலர் வாழ்க்கையை நேரடியாக, அனுபவப்பூர்வமாக வாழ்வதைவிட மனத்தினுள்ளே கற்பனை உலகில் வாழ்கிறார்கள். இதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன.

ஒன்று வெறும் பகற்கனவில் வாழ்வது. மனக்கோட்டை கட்டுவது. இன்னொன்று நட்பு, காதல், போன்ற உறவுகள் பற்றி ஏற்கனவே கதைகளிலும், சினிமாவிலும் சித்தரிக்கப்பட்டிருக்கும் பொய்யான கருத்துக்களின்படி வாழ முயல்வது. இவை இரண்டுமே வாழ்க்கையை உண்மையாக அனுபவித்து வாழாமல் கற்பனையில் வாழ்வதுதான்.

சமூகமும் கலாசாரமும் முன்னிறுத்தும் மாதிரி வாழ்க்கை, உண்மையான வாழ்க்கையை விட முக்கியமானதாக ஆகிவிட்டிருக்கிறது. அந்த மாதிரி வாழ்க்கையின் சட்டகத்தினுள் தன்னைப் பொருத்திக்கொள்ளும் முயற்சியில் தன் தனித்துவத்தின் மதிப்பை அறிந்துகொள்ளும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிடுகிறோம். வாழ்க்கை அனுபவத்தைத் தன் சுய ஒளியில் காணும் தரிசனத்தை, ஒப்பில்லாத அந்த அனுபவத்தை, நாம் இழந்துகொண்டிருக்கிறோம்.

இதுபோல் வாழ்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுதான். இதில் நேரடி வாழ்க்கையின் அர்ப்பணிப்பு தேவையில்லை. மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கமும் அவர்களிடமிருந்து நல்ல பெயர் வாங்கும் எதிர்பார்ப்பும் இதன் பின்னணியில் இழைந்திருக்கின்றன.

இதில் உண்மையான வாழ்க்கை அனுபவமும், உண்மையான சந்தோஷம், நேரடி வாழ்க்கையின் சவால்களைச் சந்திப்பதில் ஏற்படும் அக வளர்ச்சி, இவையெல்லாம் பலியாகின்றன. இது பற்றிய புரிதல் இல்லாத வரைக்கும் வாழ்க்கையை நாம் வீணாக்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக அவள்தான் என் நெருங்கிய தோழி. படிப்பு முடித்துவிட்டு இருவரும் வேலை தேட ஆரம்பித்தோம். முதலில் அவளுக்கு வேலை கிடைத்தது. ஆனால் என்னை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என்பதால் இரண்டு மாதங்களில் வேலையை விட்டு நின்றுவிட்டாள். பிறகு எனக்கும் அதே கம்பெனியில் வேலை கிடைத்தது. ஆனால் அவள் வேலைக்குப் போக வேண்டாம் எனச் சொன்னதால் வாய்ப்பை நழுவவிட்டேன். இப்பொழுது நாங்கள் இருவரும் இணைந்தேதான் இருக்கிறோம்.

நாம் இருவரும் சேர்ந்து முதுகலை பட்டப் படிப்பு படிக்கலாம் என்கிறாள் என் தோழி. ஆனால் என் குடும்பச் சூழ்நிலையில் நான் இப்பொழுதே வேலைக்குச் சென்றாக வேண்டும். என் பெற்றோர், மற்ற நண்பர்கள் அனைவரும் அவள் நட்பைத் துண்டித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். ஆனால் என்னால் என் தோழியை விட்டுத்தர முடியவில்லை. ஆனால் அவளும் என் குடும்பச் சூழலைப் புரிந்துகொள்ள மறுக்கிறாள்.

நல்ல ஒரு நட்பு சில பொய்யான எதிர்பார்ப்புகளினால் பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பது தெரிகிறது. உறவுகளிலேயே நட்புதான் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ள அமைப்பு. அவரவர் தனித்துவம் குறித்த அங்கீகரிப்பு, தன்னியல்பான சுதந்திரம் அனைத்தும் பொதுவாக நட்பில்தான் அதிகம்.

இந்தத் தன்மைகள் காதல், மண வாழ்க்கை போன்ற உறவுகளில் பெருமளவுக்கு மறுக்கப்படுகின்றன. ஆனால், இங்கே உங்கள் நட்பில் இந்தத் தன்மைகள் தம் முக்கியத்துவத்தை இழந்திருக்கின்றன. நீங்கள் இருவரும் தத்தம் வாழ்க்கையை வாழாமல் மற்றவருடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

உங்களை விட்டு இருக்கமுடியாமல் உங்கள் தோழி வேலையை விடுவதும், தோழி சொன்னாள் என்பதற்காக நீங்கள் உங்கள் வேலை வாய்ப்பை நழுவவிடுவதும், அதேபோல் இப்போது உங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக நீங்கள் வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது உங்கள் தோழி வேண்டாம் என்று சொல்வதும் உங்கள் இருவரிடையே உள்ள உறவில் எந்த அளவுக்கு மற்றவரின் தனித்துவத்தைக் குறித்த அங்கீகரிப்பு இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், நட்புக்காக நம் சந்தோஷத்தைக்கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்பது போன்ற பொய்யான எதிர்பார்ப்புகள் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இது உங்கள் நட்புக்கே நல்லதல்ல.

இப்போது நடக்கும் விஷயங்களால் எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் அளவுக்குப் போய்விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மேலோட்டமாக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களைத் தவிர, உங்கள் உறவில் இன்னும் ஆழமான சிக்கல்கள் இருக்கக்கூடும் என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பது நட்பு வெகுகாலம் நீடிக்க உதவும். மற்ற நண்பர்களையும் உடன் வைத்துக்கொண்டு உங்கள் தோழியுடன் பேசுங்கள். எல்லோருக்கும் சாதகமான நல்ல முடிவை எடுங்கள்.

நான் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவரிடம் சென்று என் காதலை வெளிப்படுத்தும் தைரியம் எனக்கு இல்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. என் படிப்பும் முடிந்துவிட்டது. ஆனால் இன்றுவரை நான் அவரிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. என் வீட்டில் எனக்குக் கல்யாணம் செய்துவைக்க முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் வீட்டிலும் என் காதலைச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், நான்தான் இதுவரை அவரிடமே சொல்லவில்லையே? இப்பொழுது நான் என்ன செய்ய?

எதனால் உங்கள் உணர்வைக் காதல் என்று சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வதிலிருந்து நீங்கள் ஒரு கற்பனை உலகில் இருந்துகொண்டிருக்கிறீர்கள் என்றுதான் தெரிகிறது. ஏன் உங்களுக்கு உங்கள் காதலை அவரிடம் சொல்ல தைரியம் இல்லை? அவர் உங்களையும் உங்கள் காதலையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற பயமா? நீங்கள் உங்களையும் உங்கள் காதலையும் எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள்? அப்படி மதித்தீர்களேயானால் உங்களுக்கு இந்த அச்சம் தேவையில்லை.

உங்கள் காதலை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரது விருப்பம். ஆனால், நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்? ஒன்று அவரிடம் போய் இப்போதாவது உங்கள் உணர்வைச் சொல்லுங்கள். அல்லது இந்த விஷயத்தை உங்களுக்குள்ளேயே முடிவுக்குக் கொண்டுவந்து விடுங்கள். உங்கள் மன மேடையில் மட்டுமே நடப்பது, வாழ்க்கை என்னும் தகுதியைப் பெறுமா என்று யோசியுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்