பொதுவாக யாராவது தப்பு செய்தால் அவர்கள் உடனே வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால், இதையே மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்த்தால், நமக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல நடந்துகொள்வோம். அரைமணி நேரம் காக்க வைத்ததற்காக, “ஏன் லேட்” என்று கோபப்படுபவர்கள், அதே தவறைச் செய்யும்போது, “வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமப்பா” என கமெண்ட் அடித்து வெறுப்பேற்றுவார்கள்.
நம் தவறுகளை ஒப்புக்கொண்டு சரி செய்துகொள்வதைவிட, நேரத்தை விரயம் செய்து அதற்காகச் சப்பைக்கட்டுவது சாமர்த்தியம் என்ற நினைப்பு பலரிடம் இருக்கிறது. நம்முடைய தவறுகள் நமக்கே மிகப் பெரிய எதிரியாய் மாறிவிடும் என்ற உண்மையை ஏற்கத் தவறினால் முதல் பாதிப்பு நமக்குத்தான்.
ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய தவறுகளை நாம் உணராதவர்கள் அல்ல. சாலையில் வாகனத்தை நிறுத்தாதீர்கள் என்ற அறிவிப்புப் பலகை அருகிலேயே வண்டியை நிறுத்துவதைப் போல பல தவறுகளைத் தெரிந்தேதான் செய்கிறோம். திட்டமிட்ட தவறு, திட்டமிடாத தவறு எதுவாக இருந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து யாரும் எளிதில் விடுபட முடியாது என்பதே நிதர்சனம். என்னுடைய முன்னாள் மாணவர் ரமேஷின் அனுபவம் இதுதொடர்பானதுதான்.
கல்லூரியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் ரமேஷும் ஒருவன். படிப்பு முடிந்தவுடனே சொந்த ஊரில் ரசாயன ஆலையை நிறுவுவதில் உறுதியாக இருந்தான். ரமேஷை வாழ்த்திவிட்டு, “இந்தத் தொழிலைத் தொடங்க நிறைய நடைமுறைகள் இருக்குமே. எல்லாம் முடிஞ்சதா?” என்றேன்.
“முறைப்படி போனா ஒப்புதல் கிடைக்க ரொம்ப நாள் ஆகலாம். அதான் எனக்குத் தெரிஞ்ச ஆளுங்க மூலமா முயற்சி செய்றேன். அதுக்குத்தான் பணம் ரொம்ப செலவாகுது” என்று சலிப்புடன் சொன்னான்.
“ஏம்பா, நீ செய்யப்போறது அரசு அனுமதிபெற்ற தொழில்தானே. ஆவணங்கள் எல்லாம் சரியா இருந்துச்சுன்னா ஏன் குறுக்கு வழியில போகணும். தெரிஞ்சே தப்பு செய்யலாமா” என்று ரமேஷிடம் கேட்டேன்.
ஆனால், ரமேஷோ சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமல், “சார் தொழிலைச் சீக்கிரம் ஆரம்பிக்க, இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு” என்று என் அறிவுரையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமலே விடைபெற்றான்.
ஓராண்டு கழித்து என் பிறந்தநாளுக்கு வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்த ரமேஷை செல்போனில் அழைத்துப் பேசினேன். “எப்படி இருக்க, தொழில் எப்படிப் போகுது” என்று கேட்டதுதான் தாமதம், புலம்பித் தள்ளிவிட்டான்.
“என்னுடைய அவசரத்துக்குப் பணத்தைக் கொடுத்து வேலையை முடிக்கலாம்ணு நினைச்சேன். ஆனா, பணம் வாங்கிய ஆபீசர் திடீர்னு வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார். இன்னும் தொழில் ஆரம்பிக்க ஒப்புதல் கிடைக்கல. கொடுத்த பணமும் கிடைக்கல. பணமும் போச்சு, என்னுடைய காரியமும் நடக்கல. நான் ஏமாந்ததுதான் மிச்சம்” என்று தெரிந்தே செய்த தன் தவறை நியாயப்படுத்தவும் முயன்றான்.
ரமேஷ் போன்றவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்தே தவறு செய்துவிட்டு, அதன்பிறகு வருத்தப்பட்டு என்ன பயன்? சிகரெட் உடல் நலத்துக்குக் கேடானது என்று தெரிந்தே அந்தப் பழக்கத்துக்கு உள்ளானால் யாருக்குப் பலன்? பின்விளைவுகளைப் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய பல தவறுகளைச் செய்கிறோம். இதைப் புரிந்துகொள்ளாதவரையில், வளர்ச்சியின் பாதையில் தடைக்கற்களை நாமே போட்டுக்கொள்கிறோம் என்பதே யதார்த்தம்.
போட்டி நிறைந்த உலகில் தெரியாமல் செய்கிற தவறுகளே நம்மைப் பாதிக்கும்போது, தெரிந்தே தவறைச் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை ஒரு அலராமாக வைத்துக்கொள்வது அவசியமே. ஏனென்றால், விதிமீறல்களின் விளைவு எப்போதும் நமக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் காத்துக்கொண்டு நிற்கிறது. பிறர் மீது பழிபோடக் காத்திருப்பதும், தன் தவறுகளுக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் மாற்றிக்கொள்ள வேண்டிய மனப்பான்மையே. நம்முடைய இலக்கை அடைய சரியான வழிமுறைகளே முக்கியம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
(நிறைந்தது)
கட்டுரையாளர்: நிதி மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago