இளைஞன் ஒருவன் பதினான்கு வயதில் பொறியியல் கல்லூரியில் சேர்கிறான். அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
பொதுவாக இந்தியக் குழந்தைகள் ஐந்து, ஆறு வயதில் பள்ளியில் சேர்வார்கள். பதினேழு, பதினெட்டு வயதில் பன்னிரண்டாம் வகுப்பை நிறைவுசெய்வார்கள். ஆனால், அதற்குச் சில ஆண்டுகள் முன்பாகவே இவன் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்து கல்லூரிக்குச் சென்றுவிட்டான். அப்படியென்றால், இவன் நிச்சயம் பெரிய படிப்பாளியாக, அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இளைஞன் கல்லூரிக்கு ஒழுங்காகச் செல்வதில்லை. கேட்டால், 'எனக்குப் பாடங்கள் புரியவில்லை; மிகவும் கஷ்டமாக இருக்கின்றன. நான் கல்லூரிக்குச் செல்ல விரும்பவில்லை' என்கிறான். இப்போது அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
பொறியியல் பாடங்களெல்லாம் கொஞ்சம் கடினம்தான். அதற்காகக் கல்லூரிக்குச் செல்லாமலிருப்பதா? இவன் நிச்சயம் பெரிய முட்டாள்தான்.
ஒரே இளைஞன் சில ஆண்டுகளுக்குள் அறிவாளியிலிருந்து முட்டாளாக மாறிவிட்டானா? நடுவில் என்ன நடந்தது?
ஆங்கிலம் நடந்தது! இந்தியாவில் பல கிராமப்புற, சிறுநகர மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு வில்லனைப் போல் நுழைந்து பயமுறுத்துகிற ஆங்கில மொழிதான் அந்த அறிவாளி மாணவனைக் கல்லூரியிலிருந்து துரத்தியது.
அந்த மாணவன் பெயர், விஜய் சேகர் ஷர்மா. அலிகருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவன். பள்ளி நாட்களில் பிரமாதமாகப் படித்து எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் வாங்கியவன்.
பள்ளிப் படிப்பை முடித்த விஜய்க்கு டெல்லியிலிருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. பல கனவுகளுடன் அங்கே சேர்ந்தான்.
ஆனால், வகுப்புகள் தொடங்கிய சில நாட்களுக்குள், அந்தக் கனவுகள் ஒவ்வொன்றாக உடைந்தன. ‘ஏன்தான் இங்கு வந்தோமோ' என்று வேதனைப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டான். ‘பேசாம திரும்பவும் ஊருக்கே போய்டலாமா?' என்று நினைக்கத் தொடங்கிவிட்டான்.
காரணம், அந்தக் கல்லூரி யில் ஒரே பயிற்றுமொழி, ஆங்கிலம்தான். எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் ஆங்கிலத்திலேயே அனைத்தையும் விளக்கினார்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டார்கள். மாணவர்களும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்கள்.
பன்னிரண்டாம் வகுப்புவரை இந்தியைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்திருந்த விஜய்க்கு, அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. தொழில் நுட்பச் சொற்கள் அனைத்தையும் அவன் இந்தியில்தான் அறிந்திருந்தான். ஆனால், இங்கே அவை ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டதால், எந்தப் பாடத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை.
சில நேரம், ஆசிரியர்கள் விஜயிடம் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதே விஜய்க்குப் புரியாதபோது, எப்படிப் பதில் சொல்வான்? திருதிருவென்று விழிப்பான்.
அந்த வகுப்பிலேயே இளையவன் விஜய்தான். பள்ளி நாட்களில் மிகச் சிறந்த மாணவன் என்று பெயர்வாங்கிய ஒருவனுக்கு, ஆசிரியர் எந்தக் கேள்வி கேட்டாலும் முதல் ஆளாகக் கையைத் தூக்கிச் சட்டென்று பதில் சொல்லிப் பழகிய ஒருவனுக்கு, இங்குள்ள ஆசிரியர்களுடைய கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் நிற்பது பெரிய அவமானமாக இருந்தது.
ஆகவே, எப்போதும் வகுப்பில் முதல் வரிசையில் அமர்ந்து பழக்கப்பட்ட விஜய், மெதுவாகப் பின்வரிசைகளுக்கு நகர்ந்தான். ஆசிரியர் தன்னைக் கேள்வி ஏதும் கேட்டுவிடக் கூடாதே என்று அஞ்சத் தொடங்கினான். அந்த உணர்வு அழுத்தத்தால் வகுப்புகளுக்குச் செல்லாமல் 'கட்’ அடிக்கவும் ஆரம்பித்தான்.
இதற்கு இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா? மற்ற மாணவர்களிடம் உதவி கேட்கலாமே!
யாரைக் கேட்பது? எல்லாரும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறார்களே! அவர்களிடம் சென்று, “ஆசிரியர் என்ன சொல்கிறார் என எனக்குப் புரியவில்லை, இதைக் கொஞ்சம் இந்தியில் விளக்க முடியுமா?” என்று கேட்பதற்கு விஜய்க்குத் தயக்கமாக இருந்தது.
விஜயைப்போல் உத்தரப்பிரதேசத்திலிருந்து வந்த இன்னொரு மாணவனும் அதே வகுப்பில் இருந்தான். ஆனால், அவன் ஆங்கிலத்தில் பயின்றவன். ஆகவே, விஜய்க்கு உதவக்கூடிய வகையில் அங்கு யாருமே இல்லை.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான் விஜய். தான் தொடர்ந்து பொறியியல் படிக்க வேண்டுமென்றால், முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும். அப்போதுதான் தன்னால் வகுப்புகளை, பாடங்களைப் புரிந்துகொள்ள இயலும் என்பதை உணர்ந்தான். இதற்காக, தன்னைப் போலவே இந்திவழிக் கல்வியில் பயின்ற சிலரைச் சந்தித்தான் விஜய். “நீங்க எப்படி இங்கிலீஷ் கத்துக்கிட்டீங்க?” என்று விசாரித்தான்.
“முதல்ல நீ உன்னோட வக்காபுலரியை (சொல்வளத்தை) வளர்த்துக்கணும்” என்றார்கள் அவர்கள்.
“அதை எப்படி வளர்க்கறது?”
“ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்க ஆரம்பிக்கணும்!”
“அதுல வர்ற பெரும்பாலான சொற்கள் எனக்குப் புரியாதே!”
“பரவாயில்லை. பக்கத்துல அகராதியை வெச்சுக்கோ, எந்தச் சொல்லுக்கெல்லாம் பொருள் தெரியலையோ அதையெல்லாம் அகராதியில தேடிப் பார்த்துத் தெரிஞ்சுக்கோ. இப்படியே கொஞ்சம்கொஞ்சமா ஆங்கிலச் சொற்களைக் கத்துக்கிட்டாப் போதும், படிப்படியா மேலே வந்துடலாம்!”
அவர்கள் சொன்னபடி விஜய் ஆங்கில செய்தித்தாள்களை வாசிக்கத் தொடங்கினான். பக்கத்தில் ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டான். எந்தெந்தச் சொற்கள் புரியவில்லையோ அவற்றையெல்லாம் அந்த நோட்டில் எழுதிக்கொண்டான். அகராதியில் அவற்றுக்குப் பொருளைக் கண்டுபிடித்துப் பக்கத்தில் எழுதிக்கொண்டான், அப்படி எழுதிவைத்த சொற்களையெல்லாம் மொத்தமாகப் புரட்டிப் பார்த்துக் கற்றுக்கொண்டான்.
சில நேரம், ஒரே புத்தகத்தை இந்தியில் ஒரு பிரதி, ஆங்கிலத்தில் ஒரு பிரதி வாங்கிக்கொள்வான் விஜய். முதலில் ஆங்கிலத்தில் ஒரு வரி படிப்பான், அதே வரி ஹிந்தியில் எப்படி மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்று படிப்பான். எந்த ஆங்கிலச் சொல்லுக்கு எந்த இந்திச் சொல் பொருந்துகிறது என்பதைக் கவனித்துப் புரிந்துகொள்வான். இப்படிப் பலவழிகளில் அவன் தன்னுடைய ஆங்கிலச் சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டான்.
இன்றைக்கு விஜய் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். பல உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கிறார். அவர் பேசுவதைக் கேட்கிற யாரும், ஒரு காலத்தில் அவர் ஆங்கிலம் பேசத் தெரியாமல் தடுமாறியவர் என்பதை நம்ப மாட்டார்கள். அவர் ஆங்கிலத்தைத் தானே முயன்று கற்றுக்கொண்டார் என்பதைக் கேள்விப்பட்டால் வியந்துபோவார்கள்.
விஜய்யின் தொழில்முயற்சிகளில் ஒன்று, அநேகமாக உங்கள் சட்டைப்பையிலோ கைப்பையிலோ இருக்கலாம். ‘Paytm’ என்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியாவின் 'ரொக்கப் பொருளாதாரத்தை' எலக்ட்ரானிக்மயமாக்கியதில் பெரும்பங்காற்றியிருக்கிறார் அவர்.
மிகுந்த ஆர்வத்துடன் ஒருவர் முன்னேறிக்கொண்டிருக்கும்போது வழியில் பெரிய தடைகளைச் சந்தித்தால், சிறிது நேரம் அவற்றோடு மோதுவார்கள், கொஞ்சம் களைத்துப்போகும்போது, 'திரும்பிச்சென்றுவிடலாமா' என்ற எண்ணம் தோன்றும், 'பேசாமல் சொந்த ஊருக்கே திரும்பிச்சென்று இந்தியில் பாடம் சொல்லித் தருகிற உள்ளூர்க் கல்லூரியொன்றில் சேர்ந்துவிடலாமா' என்று விஜய் நினைத்ததைப் போல.
அப்படியொரு சூழ்நிலையில் விஜய் தொடர்ந்து டெல்லியில் போராடியதற்குக் காரணம், அவரே தட்டுத் தடுமாறி ஆங்கிலம் கற்றுக்கொண்டு முன்னேறியதற்குக் காரணம், 'நான் இந்தச் சவாலைக் கண்டு அஞ்ச மாட்டேன், இதற்குத் தோற்றுப்போய்த் திரும்பிச் செல்ல மாட்டேன்' என்று அவர் தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டதுதான்.
முன்னேறுவது என்று தீர்மானித்து வந்தபிறகு, அச்சப்பட்டுத் திரும்பிச் செல்வது என்ற எண்ணமே நமக்குள் இருக்கக் கூடாது, அப்படியொரு வழியே இல்லை என்று நினைத்துக்கொண்டால், நமக்கு முன்னால் இருக்கும் தடைகளை உடைத்துத்தான் நாம் முன்னேறியாக வேண்டும் என்பது புரியும், அதற்கான மன உறுதியும் வேகமும் கிடைக்கும், நம் வளர்ச்சிக்கான வழிகளை நாமே உருவாக்கிக்கொள்வோம்!
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago