இணையத்தின் முதல் தேடு இயந்திரம் கூகுள் அல்ல. ஆலன் எம்டேஜ் என்பவர் இணையத்தில் கோப்புகளைத் தேடித்தர உருவாக்கிய ’ஆர்ச்சி’தான் (Archie) முதல் தேடு இயந்திரம். இதை கூகுளும் ஒப்புக்கொள்கிறது. கூகுளில் முதல் தேடு இயந்திரம் என தேடிப்பார்த்தால், ‘ஆர்ச்சி’ தொடர்பான தகவல்களே முன்வைக்கப்படுகின்றன.
சரி, ஆன்லைன் தேடலைக் கண்டுபிடித்தவர் யார்? இந்தக் கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால், ஆலன் எம்டேஜ் என்பவரின் தகவல்களே கிடைக் கின்றன. முதல் தேடு இயந்திரத்தை உருவாக்கியது ஆலன் எம்டேஜ் என்றால், ஆன்லைன் தேடலை கண்டிபிடித்ததும் அவராகத்தானே இருக்க முடியும். எனவே, அவரது பெயரைக் காண்பிப்பதில் என்ன தவறு எனக் கேட்கலாம்.
முதல் வலை
ஆம், தவறுதான்! ஏனெனில் இணைய வரலாற்றைத் தேடிப் பார்த்தால், ‘ஆர்ச்சி’ தேடு இயந்திரத்துக்கு முன்னதாகவே ஆன்லைன் தேடல் ஆரம்பித்துவிட்டது. இணையம் உருவாவதற்கு முன்பாகவே ஆன்லைன் தேடல் அறிமுகமாகியது எனும் ஆச்சரியமான தகவலையும் தெரிந்துகொள்ளலாம்.
1969-ல் ‘ஆர்பாநெட்’ எனும் பெயரில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கணினிகளின் இணைப்புதான் பின்னாளில் இணையமாக உருவானது. உலகம் முழுவதும் பரந்துவிரிந்த கணினிகளின் வலைப்பின்னல் எனப் புரிந்துகொள்ளப்படும் இணையத்தின் மீதான சேவையாக ‘வலை’ என அறியப்படும் ‘வைய விரிவு வலை’ (world wide web ) 1991-ல் அறிமுகமானது. அதன் பிறகே கூகுள் அறிமுகமானது. பொதுவாக, வலை என்பது இணையமாகக் கருதப்பட்டாலும் இரண்டும் வேறுவேறானது. மாபெரும் வலைப்பின்னலான இணையம் மூலம் உருவாக்கப்பட்ட மகத்தான சேவையே ‘வலை’.
ஆனால், கணினிகளின் பயன்பாடு இணையத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. 1940-50-களில் கணினிகள் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, ராணுவப் பணிகள், ஆய்வுத்துறையில் அதிகம் பயன்பட்டன. இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் ராணுவத் தேவையே கணினிப் பயன்பாட்டில் புதிய சேவைகளுக்கு வித்திட்டன.
கூகுளுக்கு முன்னோடி
இந்தப் பின்னணியில்தான், 1962-ல் அமெரிக்க ராணுவம் தொலைதூரத் தேடலின் அவசியத்தை உணர்ந்தது. அதாவது ஒரு மையக் கணினியில் இருக்கும் தகவல்களிலிருந்து வேறு ஒரு கணினி மூலம் கேள்வி கேட்டு அதற்கான பதிலைப் பெறும் வசதியை உருவாக்க விரும்பியது. சோவியத் யூனியனுடனான பனிப்போரின் விளைவாக இப்படி ஒரு வசதியை உருவாக்கும் தேவை உணரப்பட்டது.
கலிஃபோர்னியாவின் மெலேனே பார்க்கில் அமைந்திருந்த, ஸ்டான்போர்டு ஆய்வு மைத்தில், இதற்கான பணியை ஆய்வு மாணவரான சார்லஸ் பவுர்னே என்பவர் லியோனர்ட் சாய்ட்டின் எனும் சக ஆய்வாளர் உதவியுடன் மேற்கொண்டார். இதற்காக அவர்கள் காந்தப் பட்டையில் உருவாக்கிய தரவுகளின் பட்டியல் 350 மைல் தொலைவில் அமைந்திருந்த சாண்டா மோனிகாவில் வீற்றிருந்த ராட்சத ராணுவக் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டது.
அதன் பிறகு, இங்கிருந்த கணினியில் ஒரு கேள்வியை டைப் செய்து அனுப்பினர். அந்தக் கேள்வி கணினியுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலம் மையக் கணினியைச் சென்றடைந்து. அதில் தகவல்களைத் தேடி எடுத்துப் பொருத்தமான பதில், இங்குள்ள கணினித் திரையில் மின்னியது. ஏறக்குறைய இன்றைய கூகுளும் இப்படித்தான் செயல்படுகிறது.
தேடு இயந்திரம் வந்த வழி
தொலைபேசி வழியே இணைக்கப்பட்டு, கணினிகளுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டதே ஆன்லைன் உலகுக்கான முதல் விதை. ஆன்லைன் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிந்தது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் தொலைதூரத் தேடல் சாத்தியம் என்பதை 1963-ல் சார்லஸ் பவுர்னே மற்றும் லியோனாட் முதன்முதலில் நிகழ்த்திக்காட்டினர். இதுவே உலகின் முதல் ஆன்லைன் தேடல் எனக் கருதப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இது தேடல் எனக் குறிப்பிடப்படாமல், ஆன்லைன் தகவல் மீட்டெடுத்தல் என்றே குறிப்பிடப்பட்டது.
பரவலாக அறியப்படாத இந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிதான் அண்மையில், ஸ்மித்சோனியன் இணையதளம், முதல் இணையத் தேடல் எது எனும் கேள்வியை எழுப்பியது. தேடு இயந்திரமான கூகுள் இதற்குச் சரியான பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டு, இந்த வரலாற்றுக் கதையை விவரித்துள்ளது. https://bit.ly/2MBgYps
கூகுள் மட்டுமல்ல, போட்டித் தேடு இயந்திரமான பிங் மற்றும் ஐரோப்பிய தேடு இயந்திரமான குவாண்ட் ஆகிய தேடு இயந்திரங்களும் ஆன்லைன் தேடலைக் கண்டுபிடித்தவர் ஆலன் எம்டேஜ் என்றே பதில் அளிக்கின்றன. ஆதிகால ஆன்லைன் தேடல் வரலாறு பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், சார்லஸ் பவுர்னே எழுதிய ‘இணையத் தகவல் சேவைகளின் வரலாறு’ (A History of Online Information Services) எனும் புத்தகத்தை நாடலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago