வெகுளி வெள்ளைச்சாமி: தேசமணியின் தலையில் விழுந்த சுத்தி!

By ரோஹின்

நடைபெற்று முடிந்த நகராட்சித் தேர்தலில் வீராப்பூரில் தாய்மண் கட்சி சார்பில் போட்டியிட்ட வெள்ளைச்சாமி மட்டுமே வென்றிருந்தான். மீதி எல்லா நகர்மன்ற உறுப்பினர்களையும் வென்றிருந்தது சமோசா பார்ட்டி. அதன் தலைவர் பொறுப்பிலிருந்த இயந்திர பாடியார் பதவியேற்க நினைத்திருந்த அன்றுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

வீராப்பூரின் மண்ணின் மைந்தன் தேசமணியாரின் தலையில் சுத்தியல் விழுந்து, அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதைக் கேள்விப்பட்ட வெள்ளைச்சாமி, இயந்திர பாடியார் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துவிட்டு தேசமணியாரைப் பார்க்கக் கிளம்பினார். 

கேட்டைத் திறந்து வெளியே வரவும் செய்தியாளர்கள் அவர் வாயில் மைக்கை நுழைக்காத குறையாக தேசமணியின் வரலாற்றைக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு நிமிஷம் வெள்ளைச்சாமிக்குத் தலையே சுத்திவிட்டது. வெள்ளைச்சாமியின் தலைக்கு உள்ளேயும் சுத்தம்;  வெளியேயும் சுத்தம்.

அதில் பளீரென்று  வெயில் தாக்கிய நேரத்தில் ஒருவழியாகச் செய்தியாளர்களைச் சமாளித்துவிட்டு வந்துவிட்டார். தேசமணி சேர்க்கப்பட்டிருந்த மருத்துவமனையின் பெயரை எழுதிவைத்திருந்த துண்டுச் சீட்டை மட்டும் இந்தச் செய்தியாளர் களேபரத்தில் தொலைத்துவிட்டார்.

எப்படியோ மருத்துவமனையைக் கண்டுபிடித்து வந்தவர், தேசமணியாரின் படுக்கையருகே வந்தார். அப்போது தேசமணியார் ஒரு மாம்பழத்தை உறிஞ்சி சுவைத்துக்கொண்டிருந்தார்.  “எப்படியிருக்கீங்க தேசமணி” என்றார் வெள்ளைச்சாமி.

அதற்கு தேசமணி, “நீங்க யாரு?” என்று கேட்கவும் பதறிவிட்டார் வெள்ளைச்சாமி. ஈரேழு பதினான்கு லோகத்துக்கும் தன்னை யாரெனத் தெரியும் என்று நினைத்திருந்த வெள்ளைக்குத் தேசமணியார் தன்னை இப்படிச் சேதப்படுத்துகிறாரே என்று எரிச்சல். ஆனால், சமாளித்துக்கொண்டார்.

அருகிலிருந்து டாக்டர் தெலுங்கிசையிடம் கேட்டபோதுதான், அவர் தேசமணி இல்லை என்பது தெரிந்தது. அவரது பெயர் குண்டுகனி என்றும் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் அவர் படுகாயமடைந்தவர் என்றும் தெரியவந்தது. தனது வழக்கமான அசமந்தத்தனத்தால் மருத்துவமனை மாறிவிட்டதை அறிந்து வெளியேறினார் வெள்ளை.

தேசமணியைப் பார்ப்பதற்குள், அவரது சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதால் அருகிலிருந்த புத்தகக் கடைக்குச் சென்றார். எழுத்தாளர் பயபோகன் எழுதிய ‘முன்விழும் தேசமணியாரின் நிழல்’ என்ற நூல் கண்ணில் பட்டது. உடனே வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்.

ஒரு கோடீஸ்வரத் தாய்க்கு மகனாகப் பிறந்தவர் தேசமணியார். செல்வச் செழிப்பு மிக்க வாழ்க்கை பிடிக்காமல் ஓர் ஏழைத் தாயைத் தத்து எடுத்து அவருடனேயே வாழ்ந்துவந்திருக்கிறார். ஒரு ரயில்கூட வராத வீராப்பூர் ரயில் நிலையத்தில் சிறுவயதில் சுக்கு காபி விற்றிருக்கிறார்.

இப்போதுகூட தேசமணியாரின் கையில் சுக்கு காபி கேனைத் தூக்கித் திரிந்த அடையாளமாக ஒரு தழும்பு காணப்படும் என்பதை வாசித்தபோது வெள்ளையின் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அதைத் தடவிப் பார்த்தவர் கண்ணீர் ஏன் சிவப்பு நிறத்திலிருக்கிறது யோசித்தபோதுதான் அது ரத்தம் என்பது உறைத்தது. நூலை வாசித்து முடிக்கவும், சப்பலோ மருத்துவமனை வரவும் சரியாக இருந்தது.

உள்ளே சென்ற வெள்ளைச்சாமிக்குப் பலத்த அதிர்ச்சி. தேசமணியார் டிவியில் நண்பர்கள் படத்தின் வெடிவேலு காமெடிகளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவரது உடல்நிலை குறித்த செய்தி இயந்திர பாடியாரின் செட்டப் என்று தெரிந்தது.

தேர்தலில் ஏதோ உள்ளடி செய்துதான் சமோசா பார்ட்டி வென்றிருக்கிறது. அது வெளியே தெரியாமல் மறைக்கவே தேசமணியாரின் உடல்நிலை பற்றிய செய்தியைப் பரப்பியிருக்கிறது என்பதை அரசல் புரசலாகப் புரிந்துகொண்ட வெள்ளைக்குத் தன் மடத்தனத்தை நினைத்து சிரிக்கவா அழவா என்றே தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்