‘பொய்ச் செய்திகளை உருவாக்கிப் பார்க்கலாம் வாங்க’ என்று அழைப்புவிடுத்து, அதற்கான இணைய விளையாட்டையும் உருவாக்கியிருக்கிறார் பேராசிரியர் ஒருவர். ‘ஃபேக் நியூஸ்’ என சொல்லப்படும்பொய்ச் செய்திகள் பிரச்சினையால் ஏற்கெனவே இணையம் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, பொய்ச் செய்திகளை உருவாக்க ஒரு விளையாட்டா என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த விளையாட்டு விபரீதமானதோ வில்லங்கமானதோ அல்ல. உண்மையில், பொய்ச் செய்தியால் ஏற்படக்கூடிய விபரீதத்தைப் புரியவைக்கிறது இது.
முள்ளை முள்ளால் எடுப்பது என்பதுபோல் பொய்ச் செய்திகளின் பாதிப்பை உணர்த்தவே இந்தப் பொய்ச்செய்தி விளையாட்டு. இதை பிரிட்டிஷ் பேராசிரியர் சாண்டர் வான் டெர் லிண்டன் உருவாக்கியிருக்கிறார். உளவியல் துறைப் பேராசிரியரான இவர், நண்பர்களுடன் சேர்ந்து ‘பேட் நியூஸ்’ எனும் பெயரில் இந்த விளையாட்டை வடிவமைத்திருக்கிறார்.
இதற்கான இணையதளத்தில் நுழைந்து விளையாடலாம். அதாவது, பொய்ச் செய்திகளைப் பரப்பலாம். ஏதேனும் பொய்ச் செய்தியை ட்விட்டர் குறும்பதிவுகளாக வெளியிட்டு அதன் மூலம் அதிக ஃபாலோயர்களைப் பெற வேண்டும். பாலோயர்களைப் பெறும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படக் கூடாது. எனவே, வெளியிடும் செய்தியின் பொய்யான தன்மை அம்பலமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே அவற்றைப் பரப்பவும் வேண்டும். இவையே விளையாட்டின் அம்சங்கள்.
எப்படி விளையாடுவது?
இணைய உலகில் பெரும்பாலான தவறான தகவல்கள் இப்படித்தான் பரவுகின்றன என்ற புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்த விளையாட்டின் நோக்கம். பொய்ச் செய்திகளை உருவாக்கி உலவவிடுபவர்கள் எப்படிச் செயல்படுகின்றனரோ, என்ன உத்திகளைப் பயன்படுத்துகின்றனரோ அத்தகைய உத்திகளைக் கையாளும் வகையில் விளையாட்டு அமைந்துள்ளது. இந்த உத்திகளைச் செயல்படுத்தி விளையாட்டில் முன்னேறும்போது, ‘தவறான செய்திகளை உண்மையான செய்திபோல உலவ விடுகிறார்களே’ எனும் அதிர்ச்சி உண்டாகிறது. இந்த அதிர்ச்சி பொய்ச் செய்திகள் பரவும் விதத்தை புரியவைப்பதோடு, இத்தகைய ஏமாற்று உத்திகளைக் கண்டு ஏமாறாமல் இருக்கும் வகையிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
shutterstock_779212762100
உதாரணத்துக்கு, விளையாட்டை ஆடத் தொடங்கியதும், ‘எங்கள் நோக்கமே, பொய்ச் செய்திகளை உருவாக்கிப் பரப்புவதில் உதவி உங்களைப் பொய்ச் செய்தி அதிபராக்குவதுதான்’ எனக் குறிப்பிடப்படுகிறது. அதற்கான முதல் வழியாக, ‘உங்களுக்கு மனத்தில் ஏதோ கோபம் இருக்கிறது, நம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை ட்விட்டரில் வெளிப்படுத்தலாம், வாருங்கள்’ என அழைக்கிறார்கள்.
இப்படித் தோன்றும் ஒவ்வொரு வழிக்கும் இரண்டுவிதமான வாய்ப்புகள் உண்டு. முதல் வாய்ப்பு, உடனே சம்மதித்து முன்னேறலாம். இரண்டாம் வாய்ப்பில், ‘இல்லை, சந்தேகமாக இருக்கிறது’ என அரைமனத்துடன் சம்மதிக்கலாம். எந்த வாய்ப்பைத் தேர்வு செய்தாலும் அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கை அமைகிறது. கோபத்தை வெளிப்படுத்தும் குறும்பதிவை வெளியிடவும் எனும் வாய்ப்பைத் தேர்வு செய்தால், ‘இந்த அரசு முற்றிலும் தோற்றுவிட்டது, தோல்வியாளர்களே ராஜினாமா செய்யுங்கள்’ எனும் குறும்பதிவு திரையில் தோன்றுகிறது. இந்தக் குறும்பதிவை வெளியிட்டதுமே 8 ஃபாலோயர்கள் கிடைக்கின்றனர். பாருங்கள் உங்கள் ஆக்கப்பூர்வ விமர்சனத்துக்கு சில ஃபாலோயர்கள் கிடைத்தள்ளனர். இனி, மேலும் ஃபாலோயர்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவோம் என வழிகாட்டப்படுகிறது.
பரவும் பொய்
என்ன இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரு சந்தேகம் இருக்கும் அல்லவா? அந்தச் சந்தேகத்தை வென்று, நம்ப வைத்து, தவறான தகவல்களை ஏற்க வைப்பதுதானே பொய்ச் செய்திகளைப் பரப்புகிறவர்களின் நோக்கம். அதைத்தான் இதிலும் செய்யச்சொல்கின்றனர். எப்படி என்றால், வேறு ஒருவர்போல நடித்து பொய்த் தகவலை வெளியிடுங்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது. உதாரணத்துக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல நடித்து, ஒரு குறும்பதிவை வெளியிட வழிகாட்டப்படுகிறது. ‘நிறைய யோசித்த பிறகு வடகொரியா மீது, போர் தொடுக்கத் தீர்மானித்துவிட்டேன்” என அவர் சொல்வதுபோல அமையும் குறும்பதிவு பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குறும்பதிவை வெளியிட்டதுமே ஃபாலோயர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.
அடுத்த கட்டமாக, ‘பார்த்தீர்களா, நீங்கள் சில ட்விட்டர் பயனாளிகளை ஏமாற்றி நம்ப வைத்துவீட்டீர்கள், இப்போது அவர்கள் என்ன சொல்கின்றனர் எனப் பார்க்கலாம்’ என்று அவர்களின் குறும்பதிவுகள் காட்டப்படுகின்றன. “அடக்கடவுளே, அவர் உண்மையாகவா சொல்கிறார். டிரம்புக்கு என்ன ஆச்சு. #நொமோர்வார்ஸ்” என்பதுபோன்ற குறும்பதிவுகள் மூலம் அந்தப் பொய்ச் செய்தியைத் தெரியாமல் ஆதரிக்கிறார்கள். ஆக, அதிபர் ட்ரம்ப் தெரிவிக்காத ஒரு கருத்து, அவரது பெயரில் போலியாக உருவாகி இணையத்தில் விவாதத்தையும் உருவாக்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கட்டத்தில், முன்னேறுவது, தார்மீகத் தயக்கம் கொள்வது என இரண்டு வித வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்வு செய்யும் வாய்ப்புக்கு ஏற்ப பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் முன்னேறலாம்.
இனி நம்புவீர்கள்?
அடுத்ததாக, பொய்யான செய்தித் தளத்தை உருவாக்குவது, வலைப்பதிவை உருவாக்கி மேலும் பொய்ச் செய்தியைப் பரப்புவது என அடுத்த கட்டங்கள் அமைகின்றன. ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச்செல்லும்போது, காண்பிக்கப்படும் குறும்பதிவுகள், கருத்துகள், பொய்ச் செய்திகள் எப்படி எல்லாம் பரவுகின்றன எனும் புரிதலை ஏற்படுத்துகின்றன. அப்படியே, இது போன்ற உத்திகளுக்கு நாம் ஏமாந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.
குறிப்பாக, இணையத்தில் வெளியாகும் தகவல்களை உண்மை என நம்பி அதை அப்படியே ஃபார்வேர்டு செய்து, தங்களை அறியாமல் பொய்ச் செய்திகள் பரவ வழி செய்யும் அப்பாவிகள், விழித்துக்கொள்ள இந்த விளையாட்டு கைகொடுக்கிறது.
இணையத்தின் நம்பகத்தன்மைக்குப் பெரும் கேடாக அமைந்திருக்கும் பொய்ச் செய்தி பிரச்சினையைச் சமாளிக்க ஒவ்வொரு தரப்பினரும் ஒரு வழியில் முயல்கின்றனர். பேராசிரியர் லிண்டென், இணையவாசிகளுக்கு நன்கு பரிச்சயமான விளையாட்டு வடிவத்தைத் தேர்வு செய்து, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். பொய்ச் செய்திகளை வேகமாக அடையாளம் காண இந்த விளையாட்டு உதவும் என்றும் அவர் நம்புகிறார்.
இனி, பொய்ச் செய்திகள் விஷயத்தில் கவனமாக இருப்பீர்கள் அல்லவா?
பொய்ச் செய்தி விளையாட்டு இணையதளம்: https://www.getbadnews.com/#intro
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
33 mins ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago