வாழ்வு இனிது: தட்டு வடை செட்டு கடை

By ராஜலட்சுமி சிவலிங்கம்

லைப்பைப் படித்ததும் ரைமிங்காக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். இது ஒரு கடையின் பெயர். கடைகளுக்கு வித்தியாசமாக பெயர் வைப்பது இப்போது ஃபேஷனாகிவிட்டது. அப்படி வைக்கப்பட்ட பெயர்தான் இது. இந்தப் பெயரில் சென்னைப் பள்ளிக்கரணை, மேடவாக்கத்தில் கடைகள் இயங்கிவருகின்றன. கடையின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்தபடி கடையை எட்டிப் பார்த்தோம்.

கடைக்குள் பாரம்பரிய தானிய வகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தட்டு வடைகளை (தட்டை) விற்றுக்கொண்டிருந்தார்கள். ஸ்டாலின், பாசில் என்ற இரண்டு இளைஞர்கள்தான் இந்தக் கடைகளின் உரிமையாளர்கள். இவர்கள் ஐ.டி. ஊழியர்கள். அந்தப் பணி நேரம் போக மாலை வேளையில் இந்தக் கடையையும் நடத்திவருகிறார்கள். அதென்ன ‘தட்டு வடை செட்டு கடை’ என்று இருவரிடமும் கேட்டோம். “தட்டு வடைகள்தான் எங்கள் தயாரிப்பு என்பதாலும், பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பெயரை வைத்தோம்” என இருவரும் கோரஸாகச் சொன்னார்கள்.

thattu vadai 5 ஸ்டாலின் right

தட்டு வடை விற்க வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது என்று கேட்டதும், “ எங்கள் இருவருக்குமே தொழில் தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது உணவு அல்லது தின்பண்டக் கடையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். தற்போது மாறியுள்ள உணவு கலாச்சாரத்தால் நொறுக்குத் தீனியையும் சத்து இல்லாத உணவையும்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள். இதை மாற்றி ஆரோக்கியமான, நம் கலாச்சார உணவுகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதனால் பயறு, தானிய வகைகளில் விதவிதமான தட்டைகளை செய்து விற்க ஆரம்பித்தோம்” என்கிறார் கடையின் உரிமையாளர்களில் ஒருவரான ஸ்டாலின்.

குழந்தைகளுக்கு வைட்டமின் சார்ந்த உணவு தேவை என்பதால், தட்டையில் காய்கறிகளையும் சேர்த்து தருகிறார்கள். பீட்சா, பர்கர் போன்ற உணவை இளைஞர்கள் விரும்பி உண்ணும் இந்தக் காலத்தில், இரண்டு இளைஞர்கள் பாரம்பரிய தானியங்கள் மீது நம்பிக்கை வைத்து கடை திறந்திருப்பது நல்ல முயற்சிதானே!

தொடர்புக்கு: https://www.facebook.com/JsThattuVadaiSettuKadai/

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE