தனிமையுடன் கைக்குலுக்குவோம்

By ஆனந்த் கிருஷ்ணா

நாம் ஒவ்வொருவரும் தனியாகத்தான் இருக்கிறோம். அந்தத் தனிமையை நாம் புரிந்து கொள்ளாத வரையில் அது நம்மை அச்சுறுத்துகிறது. தனிமை நமக்குள் வெறுமையுணர்வை உண்டாக்குகிறது. மனம் இந்த நிலையை எதிர்கொள்ள முடியாமல், கையாள முடியாமல் தவிக்கிறது. யாராவது ஒருவரை வைத்து அந்த வெறுமையை நிரப்ப முயல்கிறோம்.

உறவு என்பது வெறுமையை நிரப்பும் சாதனமாகப் போய்விடுகிறது. அந்த ஒருவர் என்ன செய்துவிடுவாரோ, வேறெங்காவது சென்றுவிடுவாரோ, வேறு யாராவது அவரைத் தம் வலையில் இழுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற அச்சம் மனத்தை வாட்டுகிறது.

மனம் அந்த நபரைப் பிடித்துக்கொண்டு தவிக்கிறது. தொடக்கத்தில் மகிழ்ச்சியைத் தந்த உறவு இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது. இந்த நிலைக்குக் காதல் என்ற பெயர் தந்து இன்னும் சிக்கலை அதிகமாக்கிக் கொள்கிறோம்.

மனத்துக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. என்ன இருக்கிறது என்பதை விட, இல்லாதது என்ன என்பதே மனத்துக்கு முக்கியமாக இருக்கிறது. இருப்பதைக் கொண்டாடி மகிழ்வதை விட, இல்லாததை நினைத்து நினைத்து ஏங்குவது மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

உள்ளதை உள்ளபடி பார்ப்பது அறிவுணர்வின் தன்மை. இல்லாததை நினைவில் இருந்து கொண்டு வருவது மனதின் தன்மை. அறிவுணர்வு அமைதியை அளிக்கிறது. மனம் வேதனையைத் தருகிறது. இல்லாததை நினைவில் கொண்டுவந்து மனம் ஏங்குவதையும் காதல் என்று நினைத்துக்கொள்கிறோம்.

1. நான் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. என் அப்பா இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. எனக்கு ஒரு அண்ணன். அவர் திருமணத்துக்குப் பிறகு என்னையும் அம்மாவையும் அடியோடு மறந்துவிட்டார். எனக்கு அன்பு காட்டவோ, அக்கறை செலுத்தவோ யாரும் இல்லை.

என் வீட்டில் அன்பு காட்ட யாரும் இல்லாததால், கல்லூரித் தோழிகளிடம் நான் மிகுந்த அன்புடன் பழகுவேன். ஆனால், அவர்களால் என் அன்பைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள். அதனால் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன். படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

தோழிகளிடம் அன்புடன் பழகுகிறேன் என்று நீங்கள் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் உங்கள் அன்பை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்லும்போது நீங்கள் அன்பு காட்டுவது என்பதை அவர்களிடமிருந்து நீங்கள் அன்பைப் பெறுவதற்கான வழியாகப் பயன்படுத்துகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நீங்கள் எதிர்பார்ப்பது அன்பு அல்ல. அங்கீகாரம். நீங்கள் வேதனை அடைவதற்குக் காரணம், உங்களை நீங்களே இன்னும் முழுமையாக அங்கீகரிக்காததுதான் என்று படுகிறது.

அப்பா இறந்துவிட்டார். அம்மா நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அண்ணன் கவனிக்காமல் போய்விட்டார். தோழிகள் உதாசீனப்படுத்துகிறார்கள். உங்களிடம் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும்படியான விஷயம் எதுவும் இல்லையா? அப்படி இருக்க சாத்தியம் இல்லை. உங்களிடமும் உங்கள் வாழ்விலும் நீங்கள் கொண்டாடும்படியான விஷயங்கள் சில இருக்கத்தான் செய்யும்.

அவற்றைக் கண்டுபிடியுங்கள். கொண்டாடத் தொடங்குங்கள். மற்றவர்களிடத்திலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை முதலில் நீங்கள் உங்களுக்கு அளிக்கத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை திசைமாறுவதை நீங்களே பார்ப்பீர்கள். உங்கள் கவனம் உங்கள் மீது திரும்பும்போது உங்கள் படிப்பிலும் கவனம் ஏற்படும். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.

2. நான் வேலையில் சேர்ந்த முதல் நாள் அவரைக் கண்டேன். கண்டதும் காதலில் விழுந்தேன். அவரைப் பார்த்தபோது நான் உணர்ந்தது காதல்தான் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது. அடுத்த நாள் நேரடியாக அவரிடம் சென்று என் மன உணர்வை வெளிப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே என்னை கடந்துச் சென்றார். காலப்போக்கில் என்னிடம் நட்புடன் பழக ஆரம்பித்தார். நேரம்காலம் தெரியாமல் பேச ஆரம்பித்தோம்.

“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. ஆனால், காதல் இன்னும் வரவில்லை” என்றார். நானும் என்றாவது ஒரு நாள் என் மீது அவருக்கு காதல் வரும் என்ற நம்பிக்கையில் என் காதலை வளர்த்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது, “அம்மா எனக்கு திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள். எனக்கு யாரோ ஒரு பெண்ணோடு திருமணம் நடந்தாலும் நம் உறவில் எந்த மாற்றமும் இருக்காது” என்றார். என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அடுத்த மாதம் அவருக்கு யாரோ ஒரு பெண்ணோடு திருமணம். ஆனால் இப்பொழுதும் நாங்கள் முன்பு இருந்ததைப் போலவே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். என்னால் அவரை விட்டு விலக முடியவில்லை. என்ன செய்வது?

நீங்கள் உங்களைக் கொஞ்சமாவது மதிக்கிறீர்களா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்றே எனக்குத் தெரியவில்லை. உங்களை நீங்கள் யாராகப் பார்க்கிறீர்கள்? மற்றவர்களை என்னவாகப் பார்க்கிறீர்கள்? குறிப்பாக அந்த மனிதரை? அவர் உங்களை என்னவாகப் பார்க்கிறார் என்பது பற்றி எப்போதேனும் சிந்தித்திருக்கிறீர்களா? இந்தக் கேள்விகள் எதுவும்

உங்களுக்கு முக்கியமாகப் படவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கேள்விகளை நீங்கள் ஆழமான தீவிரத்துடன் கேட்டுக்கொள்ளாத வரை உங்கள் வாழ்வில் எந்தவிதமான அர்த்தமும் இருக்க வாய்ப்பில்லை என்றுதான் படுகிறது.

சற்று கவனம் செலுத்தி உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களுக்கு அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். எந்த விதத்திலும் இந்த உறவு உங்களை மேன்மைப்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உளவியல் ஆலோசகர் ஒருவரை நீங்கள் சந்திப்பது அவசியம். உங்கள் மதிப்பை நீங்கள் உணர்ந்துகொள்வதற்கும் உங்களை ஒரு பொருட்டாக நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கும் அந்தச் சந்திப்பு வழிவகுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்