என்னைச் சந்திக்க வரும் இளைய தலைமுறையினர் பலர், 63 வயது முடிந்த என்னை மிகவும் இயல்பாகப் பெயர் சொல்லி அழைக்கும் லாவகம் என்னை ஆச்சரியமும் சந்தோஷமும் கொள்ளவைக்கிறது. அதில் சற்றும் அவமரியாதை இல்லை.
பொய்யான, சடங்கான மரியாதைக்குப் பதிலாக, வயது வித்தியாசத்தைக் கடந்த உண்மையான நட்புணர்வு அதில் நிறைந்திருப்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டு நான் மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். மரியாதை என்பதும் தன் பழைய உருவத்தை விடுத்துப் புதிய வடிவங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. உறவின் இலக்கணம், அடிப்படையிலேயே மாறிவருகிறது. அதன் வரையறைகள் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இது சரி, இது தவறு என்று பல்லாண்டுக் காலமாக நடைமுறையில் இருந்துவந்திருக்கும் பட்டியல் இப்போது தூக்கி எறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இளைய தலைமுறையினரிடையே பெரும் நிச்சயமின்மையும் குழப்பமும் நிலவிவருகிறது.
ஒருபுறம் புதிதாகக் கிடைத்திருக்கும் சுதந்திரம், மற்றொரு புறம் அதைப் பயன்படுத்துவதில் உள்ள தெளிவின்மை, இதன் காரணமாக ஆழ்மனத்தில் எழும் அச்சம் என்ற இந்த நிலையில் இளம் மனங்கள் அலைபாய்ந்து தவிக்கின்றன. மறுபுறத்தில் பெற்றோர் மனதில் இந்த நிலையின் விளைவாக எழுந்துள்ள அச்சம், கோபம், வருத்தம் என்று குழப்பத்தின் அனைத்து அம்சங்களும் கூத்தாடுகின்றன.
தம் மக்கள் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை ஒரு புறம். மறுபுறம் இது சரிதானோ என்ற சந்தேகம். இன்று நடப்பதுதான் சரி என்றால், இதுவரை தாம் வாழ்ந்து வந்த வாழ்க்கை பொய்யென்று ஆகிவிடும் நிலை அவர்கள் மனதை அலைக்கழிக்கிறது.
இளம் மனங்களின் தெளிவின்மை காரணமாக இந்தப் புதிய சுதந்திரம் ஆபத்தில் கொண்டுபோய்விடக்கூடிய சாத்தியமும் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. இந்த நிலை நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இந்தச் சுதந்திரம் திறந்து வைத்துள்ள புதிய வெளியில் பரிசோதனைகள் நடந்துகொண்டிருப்பது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.
இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் இளையவர்கள் பலர் அச்சத்துடனும், அதைவிட அதிகமாகக் குற்ற உணர்ச்சியுடனும் அரையிருளில் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை சமூக அமைப்பே ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இளைய தலைமுறையினர் பழைய மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறார்கள். புதிய மதிப்பீடுகளைச் சமைத்துக் கொண்டி ருக்கிறார்கள். புதிய நியதிகளை உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
குடும்பம் என்னும் அமைப்பு மறு பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டு வருகிறது. ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்னும் அவ்வையின் வாக்கின்படி அவர்கள் தெய்வங் களாக நடக்கவில்லை என்னும் உண்மையின் வெளிச்சத்தில் பெற்றோரின் பாரம்பரியமான உரிமையும் ஆதிக்கமும் சவாலுக்குள்ளாகியிருக்கின்றன.
அவ்வைப் பாட்டி இந்த வாக்கியத்தைக் குழந்தைகளுக்காக எழுதவில்லை; பெற்றோர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதலாக எழுதியிருக்கிறாள் என்ற கோணத்தில் இளையவர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
தன் வாழ்க்கை பற்றிச் சிந்திப்பது தன் பெற்றோரின் உரிமை, கடமை என்னும் வழக்கத்தை மாற்றித் தன் வாழ்க்கை பற்றித் தானே சிந்தித்து முடிவெடுக்கும் உரிமையை இளையவர்கள் தம் கையில் எடுத்துக்கொண்டு விட்டிருக்கிறார்கள். பழைய நம்பிக்கைகள், பழைய பயங்கள், பழைய கலாசாரக் குறியீடுகள், இவை அனைத்தும் இன்றைய புதிய வெளிச்சத்தில் வண்ணமிழந்து, ஒளியிழந்து வெளிறிப் போய்விட்டிருக்கின்றன.
வாழ்க்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்போது, பின்னோக்கிப் பார்த்து, சம்பிரதாயமான நம்பிக்கைகளைக் கணக்கில் கொள்ளாமல் முன்னோக்கிப் பார்த்து, விரிவானதொரு கண்ணோட்டத்தின் பின்னணியில் முடிவெடுக்கும் முதிர்ச்சியை அவர்கள் தேடிக் கண்டுகொண்டிருக்கிறார்கள்.
புதிய கோணங்களையும் புதிய உண்மைகளையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் ததும்ப, விரிந்த கண்களுடன் இளைஞர்கள் கேள்வி கேட்பது பலமுறை என்னைப் புதிய கோணங்களில் சிந்திக்க வைத்திருக்கிறது. இந்த இளைய தலைமுறையினர் நேர்மையுடன் என்னை அணுகும் விதத்தில் ஆட்பட்டு, என் இளமையை நான் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தக் கேள்விகளின் வழியாக மேலும் பல இளையவர் களுடன் என் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பைப் பெரும் பேறாக நான் கருதுகிறேன்.
- ஆனந்த் கிருஷ்ணா,
உளவியல் ஆலோசகர்
தொடர்புக்கு: anandh51ad@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago