நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலையும் அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும் தட்டிக்கேட்கும் இளைஞர்களை, ‘Angry young man’ என்று காட்டியது 1970-களின் இந்தி சினிமா. 1970-களிலிருந்து காலத்தால் ரொம்ப தூரம் இந்தியாவும் இந்தியர்களும் வந்துவிட்டாலும் இன்றும் நம் இளைஞர்கள் கோபப்பட ஏகப்பட்ட காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதைத்தான் பல கோணங்களில் அலசி ஆராய்ந்திருக்கிறது ‘Dreamers: How Young Indians are Changing the World’ என்ற நூல்.
டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்நிக்தா பூனம், வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல இளைஞர்களின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து இந்த நூலை எழுதியுள்ளார். கனவுகளை மெய்ப்பிக்கத் துடிக்கும் இளம் தொழிலதிபர்கள், தலைவர்கள், தொண்டர்கள், ரவுடிகள், ஊழல்வாதிகள் என இந்தப் புத்தகத்தின் கதாநாயகர்கள் பலதரப்பட்டவர்கள்.
புதிய இந்தியாவின் முகம்
இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கு உட்பட்டவர்களே. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இரு துருவங்களுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் டிஜிட்டல் யுகத்தில் அவர்களின் உலகம் விரிந்துகொண்டே போகிறது. உலகத்தோடு எந்நேரமும் தொடர்பில் இருக்கிறார்கள்.
மறுபுறம் இந்தியர் என்ற அடையாளத்துக்குள் தங்களைச் சுருக்கிக்கொள்கிறார்கள். அதேபோல ஒரு புறம் முந்தைய தலைமுறையினரின் கலாச்சார விழுமியங்களின்படி வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். மறுபுறம் அமெரிக்க இளைஞர்களின் கனவுகளை இவர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். புதிய இந்தியாவின் முகங்கள் இவர்கள்தாம்.
உலகமயமாக்கத்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டோம், இந்தியாவின் பழைய அரசியல் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டுவிட்டோம் என்ற கோபத்தோடும் விரக்தியடைந்த மனநிலையிலும் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். இதன் நீட்சியாக வெறுப்பரசியலில், கண்மூடித்தனமான தேசியவாதத்தில் நம்பிக்கைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று மற்றவர்களைச் சுரண்ட வேண்டும் அல்லது தாங்கள் சுரண்டலுக்கு உள்ளாக வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் நிதர்சனம் என்ற மனநிலையைப் பெரும்பாலோர் எட்டியிருக்கிறார்கள் என்பதன் சாட்சியே இப்புத்தகம்.
பித்தலாட்டமும் போராட்டமும்
தங்களுடைய திறமையால் அல்லாமல் மற்றவர்களின் அறியாமையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு வெற்றியை எட்டிப் பிடித்த சில இளைஞர்களை முதல் பகுதியான, ‘தேர் இஸ் நோ பிளான் பி’ (‘There Is No Plan B’) அறிமுகப்படுத்துகிறது. சிறு நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் அப்பாவித்தனத்தை மூலதனமாக வைத்து ஊக்குவிப்புப் பேச்சாளராக மாறியவர், அரசாங்கத்தின் இலவசத் திட்டங்களைப் பாமர மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறேன் என்னும் போர்வையில் கட்டணம் வசூலிக்கும் ‘கிராமத்துத் தொழிலதிபர்’ போன்ற பித்தலாட்டக்காரர்களே இந்தப் பகுதியில் வருகிறார்கள்.
இளம் தலைவர்களை, புதிய பாதையை உண்டாக்கப் போராடுபவர்களை இரண்டாம் பகுதியான, ‘ஐ ஆம் ரெடி ஃபார் ஏ ஃபைட்’ (I Am Ready For A Fight) காட்சிப்படுத்துகிறது. அதற்காக இந்தப் பகுதியில் இடம்பெறும் நபர்கள் எல்லோருமே நம்பிக்கைக் கீற்று என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.
ஏனென்றால், இந்தியாவின் பழமையான அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் மாணவர் சங்கத் தலைவரைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது, ‘காதல்களை வெறுக்கிறேன்’ என்று கொக்கரித்தபடி இரும்புக் கம்பியோடு மீரட் நகரில் தன்னுடைய மோட்டர் பைக்கில் வெறித்தனமாகச் சுற்றிவரும் விடலைப் பையனின் வாழ்க்கையும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் துருவங்களானாலும் இருவருமே மாற்றம் கொண்டுவர முயல்பவர்கள்தானே!
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு எங்கே செல்வது, என்ன செய்வது என்பது அறியாமல் வேலை வாங்கித் தருகிறேன் என்பவரிடம் பணத்தைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் இளைஞர்கள்தாம் மூன்றாவது பகுதியான ‘Nothing Is What It Looks Like’-ன் பரிதாப முகங்கள்.
மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் உலகம் எப்படிப்பட்டது என்பதைப் பூசிமெழுகாமல் அதிலுள்ள கசப்பான உண்மைகளை விறுவிறுப்பான எழுத்து நடையில் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிறது இளம் கனவுலகவாசிகளின் வாழ்க்கை குறித்த இந்தப் புத்தகம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago