வெல்லுவதோ இளமை 25: அவன் பெயர் துணிச்சல்காரன்!

By என்.சொக்கன்

ஏராளமான கனவுகளுடன் கொல்கத்தாவுக்கு வந்திறங்கினார் அமிதாப். சில மாதங்களுக்கு முன்புதான் அவர் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார். அதன்பிறகு, வேலை தேடி வெவ்வேறு நிறுவனங்களில் ஏறி, இறங்கினார். வரிசையாக நிராகரிப்புகளைச் சந்தித்தார். தனக்கு வேலையே கிடைக்காதா என அவர் ஏங்கத் தொடங்கியிருந்த நேரத்தில்தான் யாரோ கொல்கத்தாவைப் பற்றி அவரிடம் சொன்னார்கள்.

“உன்னை மாதிரி திறமைசாலிப் பசங்களுக்கு அங்கே நல்ல வேலைகள் காத்திருக்கு.”

கொல்கத்தா அவரை ஏமாற்ற வில்லை. எதிர்பார்த்தது போலவே ஒரு நல்ல நிறுவனத்தில் அருமையான சம்பளத்தில் வேலை கிடைத்தது. அமிதாப்பின் பணி வாழ்க்கை இனிமையாகத் தொடங்கியது.

ஆனாலும் ஏனோ, அவர் மனத்தில் நிம்மதியில்லை, மகிழ்ச்சியில்லை. சொந்த ஊரை விட்டு நெடுந்தொலைவு வந்து வேலைபார்ப்பதுதான் காரணமா? பெற்றோரைப் பிரிந்து தனியே இருப்பதுதான் காரணமா? அவருக்குச் சொல்லத் தெரியவில்லை.

அந்த நேரத்தில்தான், அவருக்குத் திரைப்படங்களில் நடிக்கிற ஆர்வம் வந்தது. வேலையை விட்டுவிட்டுத் திரைத்துறையில் நுழைந்துவிடலாமா என்று யோசிக்கத் தொடங்கினார்.

அப்போது மாதம் 1,500 ரூபாய்க்குமேல் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அமிதாப். அன்றைய சூழலில் அது ஒரு கணிசமான தொகை. இன்னும் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிடலாம்.

இதோடு ஒப்பிடும்போது சினிமாத்துறை நிச்சயமற்றது. அங்கு யாருக்கும் அமிதாப்பைத் தெரியாது. அவர்கள் யாரும் அமிதாப்பை நடிக்க அழைக்கவில்லை. இவராகத்தான் ஆசைப்படுகிறார். ஆகவே, ஒவ்வொரு தயாரிப்பாளராகத் தேடி, ஒவ்வோர் இயக்குநராகத் தேடிச் சென்று கதவைத் தட்ட வேண்டும். வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வேண்டும். நிராகரிப்புகளை, தோல்விகளைத் தாங்க வேண்டும். இத்தனையையும் தாண்டினால்தான் வெற்றி.

என்றைக்கோ கிடைக்கக்கூடிய வெற்றியை நம்பிக்கையிலிருக்கும் பாதுகாப்பான வேலை, நல்ல சம்பளத்தை விடுவதா? இது முட்டாள்தனமில்லையா?

அமிதாப் அப்படி நினைக்க வில்லை. என்னதான் நல்ல வேலையில் இருந்தாலும், மனத்தில் நிம்மதியில்லாத உணர்வோடு எப்படிப் பணியாற்ற முடியும்? விருப்பமில்லாத வேலையில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட, மும்பைக்குச் சென்று பாலிவுட்டில் நுழைய முயன்றால்தான் என்ன?

உடனடியாக, தன்னுடைய நண்பர் கள் சிலரைத் தொடர்புகொண்டார். அவர்களுக்குத் தன் ஒளிப்படங்களை அனுப்பிவைத்தார்.

“உங்களுக்குத் தெரிந்த யாராவது திரைப்படத் துறையில் இருந்தால், அவர்களிடம் இந்த ஒளிப்படங்களைக் காட்டுங்கள், என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்!”

அப்படி அமிதாப்பின் ஒளிப்படத் தைப் பார்த்த நண்பர்களில் ஒருவர், நீனா சிங். அவர் அப்போது ‘சாத் ஹிந்துஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்துக்கு இன்னும் சில நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதில் ஒரு வாய்ப்பு அமிதாப்புக்குக் கிடைக்குமா என்று விசாரித்தார் நீனா.

 ‘சாத் ஹிந்துஸ்தானி’யின் இயக்குநர், புகழ்பெற்ற எழுத்தாளர், பத்திரிகையாளரான கே. ஏ. அப்பாஸ். அவரிடம் அமிதாப்பின் ஒளிப்படம் சென்றது. அதைப் பார்த்துவிட்டு, “நான் இந்தப் பையனை நேர்ல சந்திக்கணுமே” என்றார் அவர்.

அமிதாப் கொல்கத்தாவில் இருப் பது அப்பாஸுக்குத் தெரியாது. யாரோ உள்ளூர்ப் பையன் என்று நினைத்து, “உடனே புறப்பட்டு வரச்சொல்லுங்க” என்று கட்டளையிட்டுவிட்டார்.

கே. ஏ. அப்பாஸ் படத்தில் நடிக்கிற வாய்ப்பு என்றால் சும்மாவா? சட்டென்று கொல்கத்தாவிலிருது கிளம்பிவந்துவிட்டார் அமிதாப்.

தன்முன் நின்ற அந்த உயரமான இளைஞரை ஆர்வத்துடன் பார்த்தார் அப்பாஸ்.

“உன் பேர் என்ன?”

“அமிதாப்”

“அப்படீன்னா என்ன அர்த்தம்?”

“சூரியன்னு அர்த்தம். கௌதம புத்தருக்கும் இப்படி ஒரு பேர் உண்டு.” என்றார்.

“என்ன படிச்சிருக்கே?”

“டெல்லி பல்கலைக்கழகத்துல பி.ஏ.”

“இதுக்கு முன்னாடி சினிமாவுல நடிச்சிருக்கியா?”

“முயற்சி செஞ்சேன். ஆனா, வாய்ப்பு கிடைக்கலை.”

“ஏன் கிடைக்கலை?”

“நான் ரொம்ப உயரமா இருக்கேனாம். கதாநாயகிகளோட ஆடிப்பாடும்போது இடைஞ்சலா இருக்குமாம்.”

அப்பாஸ் சிரித்தார். “கவலைப் படாதே, நம்ம படத்துல கதாநாயகியே கிடையாது. ஒருவேளை இருந்தாலும், உன்னோட உயரத்தைக் காரணமாச் சொல்லி நான் உன்னை நிராகரிக்க மாட்டேன்.” என்றார்

அமிதாப் ஆர்வத்துடன் கேட்டார். “அப்படீன்னா எனக்கு இந்தப் படத்துல வாய்ப்பு உண்டா?”

“முதல்ல கதையைக் கேளு. நான் சொல்ற கதாபாத்திரம் உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாரு. அப்புறமா, நாங்க கொடுக்கற சம்பளம் உனக்குப் போதுமான்னு சொல்லு. இதெல்லாம் ஒத்துவந்தா ஒப்பந்தம் போட்டுக்கலாம்” என்றார் அப்பாஸ். ‘சாத் ஹிந்துஸ்தானி’யின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

அவர் சொன்ன கதையும் அதில் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திர மும் அமிதாப்புக்கு மிகவும் பிடித்துவிட்டன. ஒரே பிரச்சினை, சம்பளம்தான்.

அமிதாப்பின் தயக்கத்தை அப்பாஸ் புரிந்துகொண்டார். “நீ இப்ப இருக்கிற வேலையில இதைவிட அதிகச் சம்பளம் வருதோ?” என்று விசாரித்தார்.

“இப்ப நான் எந்த வேலையிலும் இல்லை” என்றார் அமிதாப். “நீங்க கூப்பிட்டீங்கன்னதும் கொல்கத்தாவுல என்னோட வேலையை ராஜினாமா செஞ்சுட்டு வந்துட்டேன்”.

அப்பாஸ் அதிர்ந்துபோனார். “நல்ல சம்பளத்துல அருமையான வேலை. அதை விட்டுட்டு ஓடிவந்திருக்கியே, இப்ப நான் உனக்கு வாய்ப்பு தரலைன்னா என்ன செய்வே?”

“கஷ்டம்தான். ஆனா, இந்த மாதிரி நேரத்துல துணிச்சலா இறங்க லைன்னா எப்படி?” என்றார் அமிதாப்.

மறு நிமிடம். “நீ என்னோட படத்துல நடிக்கறே, இது உறுதி” என்றார் அப்பாஸ்.

அந்த முதல் வாய்ப்பில் அமிதாப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், அவர் உடனடியாகப் பெரிய நட்சத்திரமாகி விடவில்லை. வெவ்வேறு படங்களில் கிடைத்த கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்தார். அவற்றில் சில படங்கள் வென்றன; பல படங்கள் தோற்றன. அவருக்கென ஒரு தனி அடையாளம் அமைந்தபிறகுதான் அவருடைய படங்களை மக்களும் இயக்குநர்களும் கவனிக்கத் தொடங்கினார்கள்; பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமானார்.

ஒருவர் 'மகிழ்ச்சியாக வாழ்கிறார்' என்பதற்குச் சமூகம் வைத்திருக்கும் வரையறை இதுதான்: பள்ளியில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும், சிறந்த கல்லூரியில் சேர வேண்டும், எதிர்காலத்தில் வேலைக்கு உத்தரவாதம் தருகிற ஒரு பட்டத்தைப் பெற வேண்டும், பெரிய நிறுவனத்தில் பாதுகாப்பான வேலையில் சேர வேண்டும், அதன்பிறகு, நல்ல சம்பளம், ஆண்டுதோறும் சம்பள உயர்வு, வெளிநாட்டுப் பயணங்கள், வீடு, கார், திருமணம், குழந்தைகள், மக்களிடையே நல்ல பெயர். இவற்றையெல்லாம் அந்தந்த வயதில் பெறுகிறவர்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

யாராவது இந்த வரையறையை மீறிப் புதிதாக எதையேனும் செய்ய நினைத்தால், தங்கள் கனவுகளைத் துரத்த விரும்பினால், சமூகம் அவர்களைப் பின்னோக்கி இழுக்கிறது. ‘எல்லாரும் இதைத் தான் செய்கிறார்கள். நீ மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறாய்?’ என்று அவர்களுக்குள் நம்பிக்கை இன்மையைத் தூண்டுகிறது.

ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயம் எல்லாருக்கும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தாங்களே வரையறுப்பதும், தாங்களே கண்டடைவதும்தான் மன நிறைவு தரும். அந்த முயற்சியில் அவர்கள் சமூகத்தின் வரையறைகள் சிலவற்றை உடைக்க வேண்டியிருக்கலாம். ‘இது முட்டாள்தனம்’ என்று சுற்றியிருக்கிற எல்லாரும் சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தாங்கள் அமைத்த மகிழ்ச்சிப் பாதையில் நடக்க வேண்டியிருக்கலாம்.

அதற்கு மிகுந்த துணிவு தேவை. ஆனால், அதுதான் உண்மையான மகிழ்ச்சியைத் தரும். கனவுகளும் துடிப்புகளும் வேகமும் உழைப்பும் நிறைந்த இளமைப் பருவம், உலகின் மிகப் பெரிய ஆற்றல். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் தாங்களும் முன்னேறுகிறார்கள், இந்த உலகையும் முன்னேற்றுகிறார்கள். தயக்கத்தை உடைத்துத் துணிந்து முன்னே சென்று எப்போதும் வெல்லுவதே இளமை!

முன்னேறுங்கள், வெல்லுங்கள். வாழ்த்துகள்!

(நிறைந்தது)
கட்டுரையாளர்
தொடர்புக்கு: nchokkan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்