சுதந்திரம் என்றால் என்ன என்று குழந்தையைக் கேட்டால், கொடியேத்துவாங்க, மிட்டாய் கொடுப்பாங்க என்று அது சொல்லும். சிலருக்கு லீவ் கிடைக்கும் என்பதால் ஜாலியாக இருக்கும். இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சுதந்திரத்தை நினைப்பாங்க.
நாடெங்கும் சுதந்திர தினத்தை உற்சாகமாக எல்லோரும் இன்று கொண்டாடிவருகிறார்கள். இண்டிபெண்டன்ஸ் பற்றி இந்தியாவின் இளைஞர்கள் என்ன ஃபீல் பண்றாங்க என்று தெரிஞ்சுக்க இயல்பான ஓர் ஆர்வம் வந்தது. அரும்பாடுபட்டுப் பெறப்பட்ட சுதந்திரத்தைப் போற்றி இந்தியாவை வல்லரசாக உருவாக்க அவர்கள் சொல்லும் யோசனை என்ன என்பது போன்ற சீரியஸான கேள்வியோடு இளைஞர்கள் சிலரிடம் பேசினோம்…
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடிந்தவரை போக்குவரத்திற்கு சைக்கிளைப் பயன்படுத்துவது, படிப்பறிவில்லாதவர்களுக்கு அடிப்படைக் கல்வி புகட்டுவது, சாலைகளில் குப்பையை வீசாமல் இருப்பது, லஞ்சம் கொடுப்பதைத் தவிர்ப்பது எனப் பல கொள்கைகளை வைத்துள்ளார் சென்னை ஐ.ஐ.டி.யில் மெட்டலர்ஜி துறையில் ஆராய்ச்சியாளராக இருக்கும் நித்யா (25).
அடிமைகளாக இருந்தவர்களால்தான் சுதந்திர காற்றின் ஸ்பரிசத்தை உணர முடியும் என்றும், ஆண்டுதோறும், சம்பிரதாயத்திற்காகச் சட்டையில் கொடி குத்திக் கொண்டால் மட்டும் போதாது என்றும் அவர், வெடித்தார். வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் அவர்கள் செல்லும் நாட்டின் சட்டதிட்டத்தைப் பின்பற்றுகின்றனர் ஆனால் விடுமுறைக்காக இந்தியா வரும்போது, சாலைகளில் குப்பையை சர்வசாதாரணமாக வீசுகிறார்கள், போக்குவரத்து விதிகளை மீறுகிறார்கள், தாய்நாட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை என்பது வேதனையளிக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.
துப்புரவில் தொடங்கிச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்களுக்கு மரியாதை அளித்தல், ஜாதி, மத பாகுபாட்டைக் களைதல் போன்ற அனைத்திலும் படித்த இளைஞர்கள் களத்தில் இறங்கினால்தான் சுதந்திரத்துக்கு அர்த்தம் கிடைக்கும். உலக அரங்கில் இந்தியா ஏற்றமடையும் என்று அதிரடியாகக் கூறினார்.
இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் எனத் துடிப்போடு கூறும் சந்தியா, சிவகாசி எஸ்.டி.வி.பி. பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். சுதந்திர தினத்தில் மட்டும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும், தலைவர்களையும் நினைவுகூர்ந்தால் போதாது என்று ஆச்சரியப்படுத்தினார் அவர். சுதந்திரம் தந்த மிகப் பெரிய பரிசு பெண் கல்வி. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவது இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது என்றார்.
முழுமையான சுதந்திரம் இருக்கிறதா என்றால் என்னைப் பொறுத்தவரையில் இல்லை என்பேன் என்று படபடக்கிறார் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ரம்யா (24). பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதிலிருந்து விடுபட்டு இப்போதுதான் ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் கால் பதித்துள்ள போதும், பணியிடங்களிலும், பயணங்களின் போதும் அவர்களது பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பது குறித்து வருத்தப்படுகிறார் அவர்.
ஒற்றுமையால் சுதந்திரம் பெற்ற நாட்டில் இன்று மொழிப் பிரச்சினை, நதிநீர் பிரச்சினை, அணை பிரச்சினை, ஜாதிப் பிரச்சினை எனப் பிரிந்து கிடக்கிறோம் என்று சொல்லும் அவர் வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டிய தருணம் இது என்கிறார்.
எம்.பி.ஏ பட்டம் பெற்றபோதும், தகுந்த வேலை கிடைக்கும் வரை கிடைத்த வேலையைச் செய்வேன் எனத் திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார் சரண்ராஜ்.
வணிகத்திற்காக நுழைந்த ஆங்கிலேயர்கள் நம்மை படிப்படியாக அடிமைப் படுத்தினர் இன்று மீண்டும் அந்த நிலை திரும்புகிறதோ என்று கேள்வி எழுப்புகிறார் அவர். பாதுகாப்புத் துறையில் கூட அந்நிய முதலீட்டுக்கு அரசு அனுமதிப்பதையும் கேள்வி கேட்கும் சரண்ராஜ், நம் நாட்டை விற்பனைக் கூடாரமாகப் பயன்படுத்தி வெளிநாட்டுச் சந்தை களை கட்டுகிறது என்று வருந்துகிறார்.
“அரசியலில் இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினால் மட்டும் வல்லரசாகிவிட முடியாது ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும், சாதிகள் மறுக்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும், பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் பொரிந்து தள்ளிவிட்டார் அவர்.
சுதந்திரத்தைப் போற்றி சரித்திரம் படைக்க இளைஞர்கள் தயாராகவே இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவை ஊக்கம் மட்டுமே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago