நீங்கள் ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கிறீர்கள், பேசத் தொடங்குகிறீர்கள். சிறிது நேரத்துக்குள், உங்கள் இருவருக்கும் பயங்கரமான சண்டை. நீங்கள் எதைப் பேசினாலும் அவர் எதிர்க்கிறார். அவர் எதைப் பேசினாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்வீர்கள்?
பொதுவாக, புதிதாகச் சந்தித்துக்கொள்கிற யாரும் சண்டையிட விரும்புவதில்லை. எப்படியாவது நட்பை வளர்க்கலாம் என்றுதான் விரும்புவார்கள். சண்டையை வளர்க்கக்கூடிய அரசியல் போன்ற தலைப்புகளைப் பேசாமல், இயன்றவரை பொதுவான விஷயங்களைப் பேசுவார்கள். ஒரு வேளை சிறிய உரசல்கள் வந்தாலும், இருவரில் யாரோ ஒருவர் விட்டுக்கொடுத்து நட்பைத் தொடர முனைவார்.
மாறாக, நன்கு பழகியவர்களிடம் நாம் உரிமையோடு சண்டையிடலாம்; ஒருவேளை நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனால் நட்பு பாதிக்கப்படாது என்பது நமக்குத் தெரியும். புதியவர்களிடம் அப்படிப்பட்ட புரிந்துகொள்ளலை நம்மால் எதிர்பார்க்க இயலாது. அதனால்தான் விட்டுக்கொடுத்துப் போக நினைக்கிறோம்.
ஆனால், இதெல்லாம் நம்மைப் போன்றவர்ளுக்குதான். அறிவாளிகள், எதைப் பற்றியும் அழுத்தமான கருத்துகளைக் கொண்டிருக்கிறவர்கள் சந்தித்துக்கொண்டால், அவர்களுக்குள் சட்டென்று வாக்குவாதம் ஏற்படுவது சகஜம். ‘ஓர் உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாது’ என்ற பழமொழி இதைத்தான் சொல்கிறது.
23 ஆண்டுகளுக்கு முன்னால் லாரி, செர்கே என்ற இளைஞர்கள் சான்ஃபிரான்சிஸ்கோவில் சந்தித்தார்கள். அதற்குமுன் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், சந்தித்த சிறிது நேரத்துக்குள் தீவிரமான வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார்கள்.
செர்கே அப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கணினித் துறை மாணவர். லாரியும் அதே பல்கலைக்கழகத்தில் சேர எண்ணியிருந்தார்.
அமெரிக்காவில் மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்குமுன், நேரில் வந்து அதைச் சுற்றிப் பார்க்கிற வழக்கம் உண்டு. இதன்மூலம் வகுப்புகள் எப்படி, மற்ற வசதிகள் எப்படி, மாணவர்கள் எப்படி, பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன, எங்கே தங்கலாம், எங்கே சாப்பிடலாம், எப்படி வகுப்புகளுக்குச் சென்று வரலாம், பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டா என்றெல்லாம் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதன் அடிப்படையில் ஒரு பல்கலைக்கழகத்தில் சேரத் தீர்மானிப்பார்கள்.
லாரியும் அந்த நோக்கத்துடன்தான் ஸ்டான்ஃபோர்டுக்கு வந்திருந்தார். அவருக்கும் மற்ற சில மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தையும் பக்கத்திலிருக்கும் இடங்களையும் சுற்றிக் காட்டும் பொறுப்பு செர்கேவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
செர்கே எல்லாரிடமும் கலகலப்பாகப் பழகுபவர். புதியவர்களைச் சந்திப்பதில் அவருக்கு ஆர்வமுண்டு. ஆனால், லாரியோ யாரிடமும் சட்டென்று பேசிவிடமாட்டார்.
ஆனால், இன்னும் இருபத்தைந்து வயதைத் தாண்டியிராத அவர்கள் இருவருமே பெரிய அறிவாளிகள். தங்களுக்குப் பிடித்த கணினித் துறை பற்றியும் அதன் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றியும் வருங்காலத்தில் வர வேண்டிய மாற்றங்களைப் பற்றியும் தெளிவான சிந்தனையோடு இருந்தார்கள். ஏற்கெனவே சில திட்டங்களை முன்னின்று நிறைவேற்றியிருந்தார்கள். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார்கள். இப்படிப்பட்ட இருவர் முதன்முறை சந்திக்கும்போது, உரசிக்கொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம்!
அன்று முழுக்க லாரியும் செர்கேயும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அநேகமாக எந்த விஷயத்திலும் இருவரும் ஒத்துப்போகவில்லை. இவர் எதைச் சொன்னாலும் அவர் மறுப்பது; அவர் சொல்வதை இவர் குறுக்கிட்டுக் கேள்வி கேட்பது என்று ஒரே கலாட்டா!
‘We found each other Obnoxious’ என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் செர்கே. Obnoxious என்பது சாதாரணச் சொல்லல்ல; வெறுப்பு, அருவருப்பு போன்ற மிகத் தீவிரமான உணர்ச்சிகளைக் குறிப்பிடுவது.
ஒருவரைச் சந்தித்த சிறிது நேரத்துக்குள் அவரை வெறுக்கத் தொடங்குவது எப்படிச் சாத்தியம்? அப்படியானால் இவர்கள் இருவரும் எந்த அளவுக்கு மற்றவரை வெறுப்பேற்றியிருக்க வேண்டும்!
இப்படி யாராவது முதல் சந்திப்பிலேயே நம்மைக் கடுப்பேற்றினால், நாம் இயன்றவரை அவர்களைவிட்டு விலகப் பார்ப்போம்; அவர்களை இன்னொரு முறை சந்திக்க மாட்டோம். அப்படியே சந்தித்தாலும் மேலோட்டமாக ஏதாவது பேசிவிட்டு நகர்ந்துவிடுவோம்.
ஆனால் லாரி, செர்கே அப்படிச் செய்யவில்லை. விரைவில் லாரி அதே கல்லூரியில் சேர்ந்தார், செர்கேயும் அவரும் நண்பர்களானார்கள். சேர்ந்து பணிபுரிந்தார்கள். இருவரும் இணைந்து ‘கூகுள்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். அதை உலகின் முன்னணி நிறுவனமாக வளர்த்தார்கள்.
இன்று லாரி, செர்கே இருவரையும் ஒரேமாதிரி சிந்திக்கும் இரட்டையர்கள் என்றுதான் உலகம் நினைக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் சந்தித்த முதல் நாளிலேயே சண்டையிட்டுக்கொண்டவர்கள். பின்னர் நண்பர்களானார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்? நாயகனும் நாயகியும் முதல் காட்சியில் கன்னாபின்னாவென்று சண்டையிட்டுவிட்டுச் சிறிது நேரம் கழித்து டூயட் பாட இதென்ன திரைப்படமா?
வாழ்க்கையில் திரைப்படத்தைவிட விநோதமான சிக்கலான திருப்பங்கள் நிகழ்கின்றன. லாரியும் செர்கேயும் இணைந்து பணியாற்றத் தொடங்கியது அப்படிப்பட்ட ஒரு திருப்பம்தான்!
முக்கியமான விஷயம், அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சகித்துக்கொண்டு நண்பர்களாகவில்லை. முதல் நாளில் தங்களுக்கிடையில் நேர்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொண்டு நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் மதிக்கத் தொடங்கினார்கள். அதனால்தான் அந்த நட்பு இன்றும் நிலைத்திருக்கிறது.
அதாவது, ஒரு விஷயத்தில் லாரிக்கு நேரெதிரான கருத்தை செர்கே கொண்டிருக்கலாம். ஆனால், அதற்காக லாரி அவரை எதிரியாக நினைக்கவில்லை. அவர் தன்னைப் போல்தான் நினைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. செர்கேயின் சிந்திக்கும் ஆற்றலை அவர் மதித்தார். மாற்றுக் கருத்துக்கு இடமளித்தார். இதேபோல் செர்கேயும் நடந்துகொண்டதால், அவர்கள் ஆரோக்கியமாக இணைந்து பணியாற்ற முடிந்தது.
‘என்னுடன் ஒத்துப்போகிறவர்களோடு மட்டும்தான் நான் பழகுவேன்’ என்று நினைக்கிறவர்கள் மாற்றுச்சிந்தனைகளை அறிவதே இல்லை. திரும்பத் திரும்ப அவர்களைப் போலவே சிந்திக்கிறவர்களுடன் பழகுகிறார்கள். அவ்வகைச் சிந்தனையைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க, அது ஒன்றுதான் சரி என்ற எண்ணம் வலுப்படுகிறது. இதனால் மாற்றுச்சிந்தனைகள் அனைத்தும் தவறு என்று நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இது தங்களுடைய வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
மாறாக, திறந்த மனத்துடன் வாழ்க்கையை அணுகுகிறவர்களும் பிறருடைய சிந்தனைகளைக் கூர்ந்து கவனிக்கிறவர்களும் பன்முகத்தன்மையோடு வளர்கிறார்கள். அந்த மாற்றுச் சிந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மறுக்கலாம், சண்டையிடலாம், இரண்டுக்கும் பொதுவான இன்னொரு சிந்தனையை உருவாக்கலாம் அல்லது இருவரும் அவரவர் சிந்தனையைத் தக்கவைத்துக்கொள்ளலாம். கருத்து வேறுபாடுகளை நிரந்தர மோதல்களாகக் கருதி நட்பையோ உறவையோ இழக்க வேண்டியதில்லை.
அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு லாரி, செர்கே நண்பர்களாகிவிட்டார்கள் என்றால், கருத்து வேறுபாடுகளை விட்டு ஒரே மாதிரி சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பொருளல்ல. அதன்பிறகும் அவர்களுக்குள் பல கருத்து வேறுபாடுகள் வந்திருக்கும். ஆனால், அதை முன்புபோல் அருவருப்பாக அணுகாமல், ஆரோக்கியமாக அணுகியிருப்பார்கள். ‘அவர் அப்படி நினைக்கிறார்ன்னா அதுக்கு என்ன காரணமா இருக்கும்?' என்று யோசித்து, அல்லது கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டிருப்பார்கள். இருவகைக் கருத்துகளையும் வாதிடுகிற ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருப்பார்கள்.
மனத்தைத் திறந்து வையுங்கள். சுற்றியிருக்கிற எல்லாரும் ஏதோ ஒரு விஷயத்தில் நிபுணர்கள் என்பதை உணருங்கள். உங்கள் நட்பு வட்டம் பெருகும். அறிவுப் பரப்பும் விரியும்.
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago