அனுபவம் புதுமை 16: இக்கட்டில் நிறுத்தும் ஒப்பீடு!

By கா.கார்த்திகேயன்

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு விஷயத்திலும் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துச் சந்தோஷப்படுவார்கள் அல்லது வருத்தப்படுவார்கள். மனிதனுடைய பிறப்பதிலிருந்தே ஒப்பிடலும் தொடங்கிவிடுகிறது. 'இரண்டரை வயதிலேயே பக்கத்து வீட்டு பையனுக்குப் பேச்சு வந்துவிட்டது.

நம் பையன் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை', 'உன்னோட வயசுதான் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு, அவள் எடுக்கிற மார்க்கை உன்னால் ஏன் எடுக்க முடியல'. இப்படியான விமர்சனத்தை யாரும் கடக்காமல் வந்திருக்க மாட்டார்கள். இந்த ஒப்பிடல் மனோபாவம் வளர்ந்து பதின்ம வயதினர் மீது இன்னும் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது.

ஒப்பிடல் சரியா, இல்லையா என்று கேட்கிறீர்களா? ஒப்பிடல் தவிர்க்க முடியாதுதான். ஆனால், ஒவ்வொருவருடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால், நமக்கான தனித்தன்மையை இழக்கிற ஆபத்து உண்டு. தன்னோட தனித்தன்மையும் இலக்கையும் புரிந்துகொள்ளாமல் ஒப்பிடலில் சிக்கிக்கொள்பவர்கள்தாம் ஏமாற்றத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

சின்ன வயதில் பிள்ளைகளிடம் டாக்டராக வேண்டும், இன்ஜினீயராக வேண்டும் என்று சொல்லி ஊக்குவிக்கிற பெற்றோர்கள், அதைத் தாண்டி பல பாடப் பிரிவுகள், வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்வதில்லை.

பதின் பருவத்தினர் தங்களுடைய வட்டத்துக்குள் ஒப்பிடும் வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சுய ஆய்வுகள் மூலமாக இலக்கைத் தீர்மானித்துவிட்டால், பின்னர் வரும் ஏமாற்றத்தை முன்கூட்டியே தவிர்க்கலாம். என் வீட்டருகே இருக்கிற கவுதம், கதிர் என்ற இளைஞர்களைப் பற்றி இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும். இருவரும் ஒரே வீதி, ஒரே பள்ளி என்பதால், அவர்களுடைய நட்பு பெவிகால் போட்டு ஒட்டாத குறையாகப் பலமானது.  பள்ளிப் படிப்பை முடித்த பிறகு கவுதம் தெளிவாக ஒரு முடிவை எடுத்தான்.

“குறும்படங்கள் எடுக்கிறதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம். அதனால, விஷுவல் கம்யூனிகேஷன் எடுத்துப் படிக்கப் போறேன். பிடிச்ச வழியில என்னைப் போகவிடுங்க, கண்டிப்பா நல்லா வருவேன்” எனப் பெற்றோரைச் சம்மதிக்கவைத்து பிடித்த பாடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

கவுதமைப் போல கதிரும் அதே பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க விரும்பியபோது, அவனுடைய தந்தை இடைமறித்தார். “ஏம்பா, விளையாட்டுத் துறையிலதானே உனக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில படிக்கிறப்பவே நிறையப் போட்டியில கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கே. எதுக்கு சம்பந்தம் இல்லாம வேற படிக்க விரும்புற” என்றார்.

“இல்லப்பா, மீடியாவுக்குப் போனா ஒரே நாள்ல புகழ் கிடைக்கும். விளையாட்டு துறையைவிட விஷுவல் கம்யூனிகேஷன் எனக்குச் சரிப்பட்டு வரும்னு தோணுது” என்று தந்தையின் யோசனையை நிராகரித்தான் கதிர்.

ஆனா, ஒரே ஆண்டில் தான் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர்ந்தான் கதிர். அந்தப் படிப்பின் மீது ஈடுபாடு இல்லாமல் கல்லூரிக்குச் செல்வதையே குறைத்துக்கொண்டான். ஒரு கட்டத்தில் இந்தப் படிப்பு வேண்டாம் என்று சொல்லி வீட்டில் எல்லோரையும் கவலையில் மூழ்கடித்தான். கவுதமுடன் தன்னை ஒப்பிட்டுக்கொண்டு அவனைப் போலவே தானும் வர வேண்டும் என்று நினைத்தது, தேர்ந்தெடுக்கப் போகிற தொழில் மீதான கவர்ச்சி, புகழில் மயங்கியது போன்றவை கதிரின் மிகப் பெரிய பிழையாகிப் போனது.

மனிதனின் இயற்கையான குணமே ஒப்பிட்டுப் பார்ப்பது. ஆனா அந்த ஒப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றால் தன்னுடைய விருப்பு, வெறுப்பு, பலம், பலவீனம் என ஆராய்ந்து, அதன்படி செயல்படும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக, யுவன் யுவதிகள் தங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப முடிவை எடுக்க வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு எதையும் முடிவுசெய்தால் கதிரின் முடிவுதான் ஏற்படும். படிப்போ வேலையோ அதைத் தேர்ந்தெடுத்த பிறகு அதில் சிறந்து விளங்கும் நபர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் சரியாக இருக்க முடியும்.

ஒன்றாகப் பள்ளியில் படிப்பதால், ஒரே பைக்கில் சேர்ந்து பயணிப்பதால், நண்பனுக்குப் பொருத்தமான படிப்பு தனக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை கதிர் தெளிவாக உணர்ந்தான். ஓராண்டு வீணாகிப் போனாலும், தன்னை சுயமதிப்பீடு செய்து இனியும் பிடிக்காத படிப்பைத் தொடர்ந்து படிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தான் கதிர். தனக்கு விருப்பமான விளையாட்டுக் கல்வியைத் தேர்ந்தெடுத்தான். இப்போது கவுதம் படிப்பை நிறைவு செய்து முன்னணித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குநராக  இருக்கிறான். கதிர் விளையாட்டுக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

ஒப்பிடல், போட்டி ஆகியவற்றைத் தவிர்க்க முடியாது. ஒரு வகையில் இது ஆரோக்கியமானதும்கூட. ஆனால், ஒரே துறையில் உள்ளவர்களுத்தான் இது சாத்தியம். எப்போதும் ஒப்பீடு செய்வது எனும் கெட்ட பழக்கம் இல்லாமல் இருந்தால், வாழ்க்கையில்  ஒவ்வொருவரையும் அரவணைக்க வெற்றி காத்துக்கொண்டிருக்கும்!

கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்