வெல்லுவதோ இளமை 18: அந்தச் சில நாட்கள்!

By என்.சொக்கன்

அந்த டென்னிஸ் பத்திரிகையில் ரோஜருடைய பேட்டி வெளியாகியிருந்தது.

அப்போது ரோஜருக்கு வயது பதினான்குதான். அதற்குள் சுவிட்சர்லாந்து முழுக்க நன்கு அறியப்பட்ட இளம் டென்னிஸ் வீரராகியிருந்தார். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆகவே, பத்திரிகைச் செய்திகள், பேட்டிகளில் ரோஜர் அவ்வப்போது தென்பட்டுக்கொண்டிருந்தார்.

ரோஜருடைய தந்தை ராபர்ட்டுக்கும் தாய் லினெட்டுக்கும் மகனுடைய சாதனைகளை எண்ணிப் பெருமை. அவருடைய பேட்டியை ஆவலுடன் படித்தார்கள். ஆனால், அதில் ஒரு கேள்விக்கு ரோஜர் சொல்லியிருந்த பதில் அவர்களுக்குப் பெரும் திகைப்பூட்டியது.

`எகுப்ளானிலிருக்கும் சுவிஸ் தேசிய டென்னிஸ் மையத்தில் சேர்ந்து பயிற்சிபெற உங்களுக்கு ஆர்வமுண்டா?'

`ஓ, நிச்சயம் ஆர்வமுண்டு!'

இந்தப் பதில் ரோஜரின் பெற்றோருக்குத் திகைப்பளிக்கக் காரணம், அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் இதே கேள்வியை ரோஜரிடம் கேட்டிருந்தார்கள். அப்போது ரோஜர் சொன்ன பதில், 'ம்ஹூம், எனக்கு அதில் சுத்தமாக ஆர்வமில்லை, நான் இங்கே நம் ஊரிலேயே என்னுடைய டென்னிஸ் பயிற்சியைத் தொடரத்தான் விரும்புகிறேன்.'

ரோஜருடைய சொந்த ஊர் பாசல். அங்கு அவருக்கு ஒரு நல்ல டென்னிஸ் பயிற்சியாளர் கிடைத்திருந்தார். அவரோடு விளையாடுவதற்குப் பல நண்பர்கள் இருந்தார்கள், பள்ளிச்சூழலும் நன்றாக அமைந்திருந்தது. இதை விட்டுவிட்டு வேறு எங்கும் போகவேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

குறிப்பாக, எகுப்ளான் செல்ல அவர் சிறிதும் விரும்பவில்லை. காரணம், அந்த இடம் அவருடைய சொந்த ஊரிலிருந்து நெடுந்தொலைவில் இருந்தது. ஒரு வேளை ரோஜர் அங்கு டென்னிஸ் கற்றுக்கொள்ள விரும்பினால், அங்கேயே தங்கிதான் பயிற்சிபெற வேண்டும். அதாவது, பெற்றோர், நண்பர்களைப் பிரிந்து தனியே தங்க வேண்டும். இதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை.

இன்னொரு காரணம், எகுப்ளானில் ஃபிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் அதிகம்; ஜெர்மன் மொழி பேசும் ரோஜருக்கு ஃபிரெஞ்சில் ஒரு சொல்கூடத் தெரியாது. மொழி தெரியாத இடத்தில் யார் வீட்டிலோ தங்கிக்கொண்டு பயிற்சியெடுப்பது சிரமமில்லையா?

ரோஜரின் பெற்றோர் இதையெல்லாம் புரிந்துகொண்டார்கள். தங்கள் மகனுடைய தீர்மானத்தை மதித்தார்கள்.  ‘எகுப்ளானுக்குச் சென்றால், நீ இன்னும் நன்றாக டென்னிஸ் கற்றுக்கொள்ளலாமே’ என்றெல்லாம் அவரை வற்புறுத்தவில்லை.

ஆனால் இப்போது, அதே ரோஜர் தன்னுடைய பதிலை மாற்றிச் சொல்லியிருக்கிறார். ‘நான் எகுப்ளான் செல்லத் தயார், அங்கு முழுநேரமாகத் தங்கிப் பயிற்சிபெறத் தயார்’ என்கிறார். இதற்கு என்ன பொருள்?

ரோஜரின் பெற்றோர், தங்கள் மகனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். ‘‘நீ உண்மையில் எகுப்ளான் சென்று பயிற்சிபெற விரும்புகிறாயா?’’

“ஆமாம்’’ என்றார் ரோஜர்.

“அன்றைக்கு அது வேண்டாம் என்று சொன்னாயே? ’’

“உண்மைதான். ஆனால், இப்போது என் மனம் மாறிவிட்டது’ என்று விளக்கினார் ரோஜர். ‘எகுப்ளான் செல்வதில் சில நன்மைகள் இருக்கின்றன, சில தீமைகளும் இருக்கின்றன. அதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தேன். ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரராக வேண்டும் என்கிற என்னுடைய கனவு நிறைவேற வேண்டுமென்றால், நான் எகுப்ளான் செல்வதுதான் சரி. அங்குதான் எனக்குத் தேவையான தரத்தில் பயிற்சி கிடைக்கும், என்னால் வேகமாக முன்னேற முடியும்.”

“அப்படியானால், இங்கு உள்ளூரில் இருக்கும் நண்பர்கள், பள்ளிக்கூடம், அதெல்லாம்?”

“எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்வது சிரமம்தான்; ஆனால், நான் அதற்குத் தயாராகிவிட்டேன்” என்றார் ரோஜர்.

இம்முறையும், ரோஜரின் பெற்றோர் அவரை வற்புறுத்தவில்லை. “உன்னுடைய விருப்பம்போல் செய்” என்று அனுமதித்துவிட்டார்கள்.

“நான் எகுப்ளான் செல்கிறேன்” என்று ரோஜர் கம்பீரமாகச் சொல்லிவிட்டாலும், அதற்கான துணிச்சல் அவருக்கு  வரவில்லை. அதை நினைத்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் அச்சமாகவும் இருந்தது.

சில நாட்களில், அவர் புறப்படவேண்டிய கேரட் வந்தது. அச்சத்தை வெளி காட்டாமல் கிளம்பிவந்துவிட்டார்.

எகுப்ளானில் கார்னெலியா என்பவருடைய வீட்டில் தங்கினார். அவர் ரோஜரை நன்கு கவனித்துக்கொண்டார். அவருடைய மகன் வின்சென்ட்டும் ரோஜரும் நண்பர்களானார்கள்.

ஆனால், ரோஜர் பயந்ததுபோலவே எகுப்ளானில் அவர் மகிழ்ச்சியாக இல்லை. பயிற்சியெல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், பெற்றோர், நண்பர்களைப் பிரிந்து தனியாக வாழ்வது அவருக்குப் பிடிக்கவில்லை. பிரெஞ்சு மொழி தெரியாமலும் தடுமாறினார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் ரோஜர் எகுப்ளானில் தங்கவேண்டியிருந்தது. சனி, ஞாயிறில் ஊருக்கு வந்துவிடுவார்.  ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பிவிடவேண்டும்.

“எகுப்ளானில் முதல் ஆறு மாதங்கள் பெரும் கொடுமையாக இருந்தன” என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ரோஜர். “எகுப்ளான் திரும்பும் ரயிலில் நான் பலமுறை அழுதிருக்கிறேன்.”

இந்தக் காலகட்டத்தில் ரோஜர் தினமும் ஒரு மணி நேரம் தன் தாயுடன் தொலைபேசியில் பேசுவார். ஆனால், அதெல்லாம் அவருக்குப் போதவில்லை. சொந்த ஊர் திரும்ப ஏங்கினார். டென்னிஸ் பயிற்சி எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டுக் கிளம்பிவிடலாமா என்று தோன்றியது.

ஆனால், ரோஜர் திரும்பிச் செல்லவில்லை. எல்லா வருத்தங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு டென்னிஸ் பயிற்சியைத் தொடர்ந்தார்.

இதற்குக் காரணம், எகுப்ளான் செல்லவேண்டும் என்று யாரும் அவரை வற்புறுத்தவில்லை. அவரே சிந்தித்து எடுத்த தீர்மானம் அது. ஆகவே, அங்கிருந்து திரும்பிச்செல்ல அவர் விரும்பவில்லை. எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் சரி, முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒரு வேளை, ரோஜர் ஃபெடரர் அன்று எகுப்ளானுக்குச் சென்றிருக்காவிட்டாலும்கூட, உள்ளூரிலேயே டென்னிஸ் பயிற்சி பெற்று அவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கக்கூடும். ஆனால், எகுப்ளானில் அவருக்குக் கிடைத்த பயிற்சியின் தரம் அவரை அதிவேகமாக முன்னேற்றியது. தனக்கு முன் டென்னிஸ் உலகில் எந்த வீரரும் சாதிக்காதவற்றையெல்லாம் சாதித்து உலகின் முன்னணி வீரரானார்.

இதுவரை டென்னிஸ் விளையாடிய வீரர்களிலேயே மிகச்சிறந்தவர் இவர்தான் என்று  சொல்லுமளவு வளர்ந்தார். பெரும்பாலான வீரர்கள் ஓய்வுபெற்று வீட்டுக்குச் சென்றுவிடுகிற இந்த முப்பத்தேழு வயதிலும் இளைஞர்களுக்குச் சவாலாகத் தொடர்ந்து விளையாடுகிறார், கோப்பைகளை வெல்கிறார்.

இத்தனைக்கும் அடிப்படை, அன்று 14 வயதில் அவர் தன்னுடைய ‘Comfort Zone'லிருந்து வெளியில் வந்ததுதான்!

‘Comfort Zone’ என்பது, நமக்கு வசதியான ஒரு வட்டம். அதற்குள் நாம்தான் ராஜா. எந்தச் சிரமமும் இல்லை. மகிழ்ச்சியாகச் சுற்றிவரலாம். ஆனால், சில ஆண்டுகளில் அந்த வட்டமே நம் முன்னேற்றத்துக்குத் தடையாகிவிடும், ‘இது போதும்’ என்று அதற்குள் நிரந்தரமாகத் தங்கிவிடுவோம்.

அப்படியில்லாமல், அந்த ‘Comfort Zone’லிருந்து வெளியில் வருகிறவர்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். ஆனால், அவற்றுக்குப் பயந்து மீண்டும் அதே வட்டத்துக்குள் சென்றுவிடக் கூடாது. ரோஜரைப்போல், 'சரியோ, தவறோ, ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன்; அதன் விளைவுகளை சமாளித்துக்கொள்வேன்' என்று துணிந்து முன்னேற வேண்டும். அப்போது, எல்லாச் சவால்களும் பொடிப்பொடியாகும். பெரிய வெற்றிகள் வசமாகும்!

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்