இதற்கு பெயர்தான் கட்டிப்பிடி வைத்தியம்!

By ரிஷி

வெகுளி வெள்ளைச்சாமி தலைவராக இருந்த ஆணவபுரம் நகரசபைக்குத் தலைவராக ஆசைப்பட்டவன் சின்னதம்பி.  அவனுடைய அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா என அவனது பரம்பரையே அந்த நகராட்சிக்குத் தலைவராக இருந்திருக்கிறது. அவர்கள் சம்பாதித்த கெட்ட பெயரை எல்லாம் சின்னதம்பியால் போக்க முடியவில்லை. ஆனாலும் வெள்ளைச்சாமியை விரட்டாமல் ஓயப்போவதில்லை என சின்னதம்பி சபதம் எடுத்ததுபோல் செயல்படுகிறான்.

இதையெல்லாம் சமாளிக்கும் திறன் பெற்றவன் வெள்ளைச்சாமி. நன்றாக உடம்பை வளர்த்துவைத்திருந்தான்.   ஆஜானுபாகுவான வெள்ளையின் தோற்றம் கம்பீரமாக இருக்கும். அந்த உடம்பு அவனுக்குப் பெரிய வரப்பிரசாதம். அவன் பெரிய நடிகன் என்று பலரும் சொல்வார்கள். திடீரென அழுவான்; அடுத்த கணமே பெருங்குரலெடுத்து சிரிப்பான். எதுக்குன்னே தெரியாது. நமக்கு மட்டுமல்ல; அவனுக்கும்கூடத் தெரியாது.

அவனுடன் இருப்பவர்களே குழம்பிப்போவார்கள். அதுக்காகப் பெரிய பயிற்சிகளை எல்லாம் எடுத்திருக்கிறான். வெற்றி மட்டும்தான் வெள்ளையின் குறிக்கோள். அதற்காக எந்தக் கீழான நிலைக்கும் அவன் செல்வான். அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்வின் அடிநிலையிலிருந்து மேலெழுந்து வந்தவன். பொய் சொல்லக் கூசவே மாட்டான் வெள்ளை. மிகத் தைரியமாகப் பொய் சொல்வான்.

வெள்ளைச்சாமியின் தாய் மிகவும் ஏழை. வரிசையில் நின்று ரேஷன் பொருட்கள் வாங்குவார். அதை போட்டோ எடுத்துப் பரப்புவான் வெள்ளை. தன் தாய் எவ்வளவு எளிமையாக வாழ்கிறாள் எனப் பிரபலப்படுத்துவான். அவ்வப்போது தான் வாழ்ந்த பழைய வாழ்க்கையை எண்ணி மூக்கைச் சிந்துவான். இப்போது விலை உயர்ந்த கார், பங்களா இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தான் எப்படி இந்தப்  பதவிக்கு வந்தோமோ அப்படி வேறு யாராவது இந்தப் பதவிக்கு வந்துவிடுவார்களோ எனப் பயம். சில வேளைகளில் அழுகை அழுகையாக வரும். அப்போதெல்லாம், ‘டேய் நீ ஒரு டான்; அழக் கூடாது’ என்று கண்ணாடியைப் பார்த்துச் சொல்வது போல் தன்னைத் தேற்றிக்கொள்வான்.

மொத்தம் பத்தாயிரம் பேர் உள்ள அந்த ஆணவபுரத்தில் 15 ஆயிரம் பேரோட ஆதரவால்தான் நகராட்சித் தலைவராக ஆனதாகப் பெருமைப்பட்டுக்கொள்வான். திடீரென வெள்ளைச்சாமியின் பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது. அந்த ஊரின் வணிகர்களுக்கும் வியாபாரிகளுக்கும் மட்டுமே வெள்ளைச்சாமி ஆதரவு தருவதாகவும் ஏழை எளியோரை வஞ்சிப்பதாகவும் சின்னத்தம்பி வெள்ளைக்கு எதிராக நகராட்சி உறுப்பினர்களைத் திரட்டினான்.

பொதுவாக, பொதுக்கூட்ட மேடைகளில் கையை அசைத்தும் தலையை ஆட்டியும் உற்சாக உரை எழுப்பும் வெள்ளைச்சாமிக்கு நகராட்சிக் கூட்டத்தில் பேச வேண்டுமென்றால் கைகால் உதறும். கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாது வெள்ளைச்சாமிக்கு.  அதனாலாயே செய்தியாளர்களைச் சந்திக்கவோ நகராட்சியில் விவாதத்தை எதிர்கொள்ளவோ திணறுவான். அப்படியே விவாதத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுவான்.

ஆனால், அதைப் பெரிய சாதனை போல் சொல்வான். இதை எதுக்குச் சொல்றான் என யோசிக்கும்முன்பே அவன்தான் நினைத்ததை எல்லாம் உளறி முடித்துவிடுவான். எப்படியோ ஒவ்வொரு நிகழ்வையும் அவன் சமாளித்துவருகிறான். சில நேரம் இந்தப் பொழப்பு தனக்குத் தேவையா எனத் தனியாக இருக்கும்போது நினைத்துக்கொள்வான்.

வெள்ளை பயந்த நாள் வந்தது. நகராட்சியில் சின்னதம்பி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டான். வெள்ளைக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான். சின்னதம்பி பேசியதைப் பார்த்த வெள்ளை திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை. வேகமாக எழுந்துசென்று சின்னதம்பியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான். மிகப் பிரமாதமான பேச்சு எனப் பாராட்டினான் வெள்ளை. வெள்ளை தன்னை ஏன் கட்டிப் பிடித்தான் எனக் குழம்பிப்போனான் சின்னத்தம்பி.

சின்னதம்பி கேட்ட எந்தக் கேள்விக்கும் வெள்ளை பதிலே சொல்லவில்லை. அதற்கு வெள்ளை பதில் சொன்னால் மாட்டிக்கொள்வான். அது அவனுக்குத் தெரியும். அதனால்தான் சின்னதம்பியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அதைப் பெரிதாக்கினான்.  அப்பாவிகள் வெள்ளையைப் புகழ்ந்தனர். எதிரியையும் சமமாக நடத்தும் வெள்ளையின் புகழ் ஊரெங்கும் பரவியது. சின்னதம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இப்படியொரு மனிதனா என சின்னத்தம்பி திணறினான். ஆனாலும் எப்படியும் வெள்ளையை வென்றாக வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டான் சின்னதம்பி.ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்