தன்னுடைய மதிப்பெண் பட்டியலை ஏமாற்றத் துடன் பார்த்தான் ஷாருக். ஆங்கிலப் பாடத்துக்கு எதிரில் குறிப்பிடப்பட்டிருந்த மதிப்பெண்கள் அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிப்பதுபோலிருந்தது.
‘இவ்வளவுதானா?’ அந்த எண்களை நம்ப முடியாமல் இன்னொருமுறை பார்த்தான் அவன். ‘என்னுடைய ஆங்கிலத் திறமை திடீரென்று இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதா?’
அவர்களுடைய வகுப்பிலேயே ஆங்கிலத்தில் மிகச் சிறந்த மாணவன் ஷாருக்தான். மற்ற மாணவர்களெல்லாம்கூட அவனிடம்தான் கற்றுக் கொள்வார்கள். அவன் எழுதிவைத்த குறிப்புகளைப் பார்த்துதான் தேர்வுக்குப் படிப்பார்கள்.
அப்படி அவனிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள்கூட இந்தமுறை அவனைவிட அதிக மதிப்பெண் வாங்கி விட்டார்கள். ஷாருக்கின் மதிப்பெண்தான் மிகவும் குறைந்துவிட்டது.
இத்தனைக்கும் அவன் ஆங்கிலத் தேர்வு நன்றாக எழுதியிருப்ப தாகத்தான் நினைத்தான். ஆனால், மதிப்பெண்கள் வரவில்லை, என்ன செய்வது?
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மிகப் பெரிய கல்லூரி ஒன்றில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், இந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு பெரிய கல்லூரிகளுக்குள் எட்டிப்பார்க்கக்கூட முடியாது.
‘அதனால் என்ன? ஒரு தேர்வில் மதிப்பெண் குறைந்தால் நான் முட்டாளாகிவிடுவேனா? இதற்கு முன் எத்தனையோ தேர்வுகளில் இதே ஆங்கிலத்தில் மிகச் சிறப்பான மதிப்பெண்களை வாங்கியிருக்கிறேன், அதையெல்லாம் எடுத்துச் சொல்லிப் பழைய சான்றிதழ் களைக் காட்டினால் ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதா?’
அவன் நம்பிக்கையோடு ஒரு பெரிய கல்லூரிக்குச் சென்றான். கல்லூரி முதல்வருடைய அறைக்குள் நுழைந்தான். அந்தக் கல்லூரி முதல்வர் அவனைப் பொருட்படுத்தவில்லை. இதுபோல் எத்தனையோ பேர் அவருடைய கல்லூரியில் இடம் கேட்டுக் கெஞ்சியிருப்பார்கள். அவர்களைப் பார்க்கிற அதே அலட்சியப் பார்வையோடு அவனைப் பார்த்தார்.
‘என்ன வேணும்?’ என்றார்.
ஷாருக் பணிவோடு தன்னிடமிருந்த சான்றிதழ்களை அவரிடம் நீட்டினான். அவர் அக்கறையில்லாமல் அவற்றை வாங்க, எல்லாச் சான்றிதழ்களும் கீழே விழுந்து சிதறின.
அவன் நம்ப முடியாமல் தரையைப் பார்த்தான். அங்கே கிடப்பவை வெறும் காகிதங்களா? அவனுடைய பல ஆண்டு உழைப்பில்லையா? படிப்பிலும் விளையாட்டிலும் அவனுடைய திறமைக்குச் சான்றாக எத்தனையோ ஆசிரியர்கள், நிறுவனங்கள் கொடுத்த வெகுமதியில்லையா? அவற்றை வாங்கிப் பார்க்கக்கூட இந்தக் கல்லூரி முதல்வருக்கு மனமில்லையா?
அவரைப்பொறுத்தவரை, அவன் யாரோ ஒரு மாணவன். போதுமான அளவு மதிப்பெண் எடுக்காமல் பரிந்துரைக்காக அவரைத் தேடி வந்திருக்கிறான். ஆகவே, அவனை அவர் எந்தவிதத்திலும் மதிக்கவில்லை.
ஷாருக்குக்கும் அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்க விருப்பமில்லை. என்னை இந்த அளவு அவமானப்படுத்துகிற ஒருவருடைய கல்லூரியில் தான் படிக்கத்தான் வேண்டுமா என்று யோசித்தான்.
கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களாக இருந்தால், இந்தப் பிரச்சினையைச் சற்றே பொறுமையுடன் கையாண்டி ருப்பார்கள். ‘நமக்குக் கல்லூரியில் இடம் வேண்டும்; முதல்வர் கொஞ்சம் முரண்டு பிடிக்கிறார் என்றால் நாம்தான் பணிந்துபோக வேண்டும்’ என்று சொல்லியிருப்பார்கள்.
ஆனால், ஷாருக் இளரத்தம். அதுவும் திறமையுள்ள இளரத்தம் அப்படிப் பணிய விரும்பவில்லை. என்னை மதிக்காத இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்றது. அதற்கு மேல் எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்.
‘இந்தக் கல்லூரியில் என்னால் படிக்க முடியாது!’ என்று உறுதியுடன் சொன்ன ஷாருக்கின் மனநிலையை அவன் குடும்பம் புரிந்துகொண்டது. வற்புறுத்தாமல், ‘உன் விருப்பம்போல் செய்’ என்று ஆதரித்தது.
அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் இன்னொரு கல்லூரி இருந்தது. அங்கு தனக்கு இடம் கிடைக்குமா என்று விசாரிக்க நினைத்தான் ஷாருக்.
அந்தக் கல்லூரியின் முதல்வர் ஷாருக்கின் சான்றிதழ்களைக் கவனமாகப் பார்த்தார், திகைத்துப்போனார்.
ஏனெனில், அவருடைய கல்லூரி அப்படியொன்றும் பெரியதில்லை. பொதுவாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மாணவர்கள்தான் அங்கு படிக்க வருவார்கள். ஷாருக்போல் நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களுடைய விருப்பப் பட்டியலில் இந்தக் கல்லூரி இருக்காது.
ஆகவே, அவர் ஷாருக்கை ஐயத்துடன் பார்த்தார். “நிஜமா நீ இந்தக் கல்லூரியில சேர விரும்பறியா?” என்று திரும்பத்திரும்பக் கேட்டார்.
“ஆமாம் சார்” என்று உறுதியுடன் சொன்னான் ஷாருக்.
அப்போதும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ‘வேறு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தால் இந்தக் கல்லூரியை விட்டுச் சென்றுவிடுவானோ’ என்று யோசித்தார். ஷாருக்கின் சான்றிதழ்களையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டுதான் அவனுக்கு இடம் கொடுத்தார்.
அவர் நினைத்ததைப் போல, ஷாருக்குக்கு இன்னொரு கல்லூரிக்குத் தாவும் எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால், தனக்கு இடம் கொடுக்காமல் அவமானப்படுத்திய ‘பெரிய’ கல்லூரியில் சேர்ந்து படிப்பதைவிட, இந்தச் சாதாரணக் கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய திறமையை நிரூபிக்கத்தான் அவன் விரும்பினான்.
ஷாருக் விரும்பிச் சேர்ந்த அந்த ‘சாதாரண’க் கல்லூரி, அந்த ஆண்டு ‘பெரிய’ கல்லூரிகளின் பட்டியலில் சேர்ந்தது; காரணம், டெல்லியிலிருக்கும் ‘பெரிய’ கல்லூரிகளின் மாணவர்களையெல்லாம்விட அதிக மதிப்பெண்களை ஷாருக் அள்ளியிருந்தான்.
படிப்போ வேலையோ, நாம் நினைத்ததைச் செய்வதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன: ஏற்கெனவே அந்தத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஓர் அமைப்பில் இணைந்துகொள்ளலாம், அதன் வளங்களைப் பயன்படுத்தி முன்னேறலாம் அல்லது கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நம்முடைய திறமையால் அதை முன்னேற்றலாம், நாமும் வளரலாம்.
இதில் முதல் வாய்ப்பைப் பயன்படுத்தத் திறமை போதும்; இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தத் துணிவும் வேண்டும். தன் மீது நம்பிக்கையுள்ளவர்கள்தான் இதைச் செய்வார்கள், மற்றவர்கள் ‘எதுக்கு வீண் ஆபத்து’ என்று ஏற்கெனவே பிரபலமான அமைப்புகளில் சென்று ஒட்டிக்கொள்வார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய திரைநட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக் கானின் இளம் வயதில் நடந்த இந்த நிகழ்வு, ‘படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்’ என்ற உண்மையையும் உணர்த்துகிறது. தன்னம்பிக்கையுள்ள ஒருவரால் தன்னையும் தான் சார்ந்திருக்கும் குழுவையும் மேலே கொண்டுவர முடியும் என்பதையும் புரிய வைக்கிறது.
தன்னிடம் பரிந்துரைக்கு வந்த யாரோ ஒரு மாணவர்தானே என்று ஷாருக்கை அலட்சியப்படுத்திய அந்தப் பள்ளி முதல்வருடைய கோணத்திலிருந்து இதைப் பார்த்தால், யாரையும் ஒரு நிகழ்வைக்கொண்டு எடைபோடக் கூடாது என்பதை அறியலாம். தோல்வி என்றும் நிரந்தரமானதல்ல என்றும் புரிந்துகொள்ளலாம்.
ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவதோ தேர்வில் தோல்வியடைவதோ தொழிலில் நட்டமோ பணிநீக்கம் செய்யப்படுவதோ காதல் தோல்வியோ… எத்தனை சறுக்கல்கள் வந்தாலும், அவை நம்மை வரையறுப்பதில்லை. அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம், அதிலிருந்து எப்படி மீள்கிறோம் என்பதுதான் நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்கும்.
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago