பொ
றுப்பு என்பதைக் கேட்ட உடனே நிறையப் பேருக்குப் பச்சை மிளகாயைக் கடித்ததுபோல் இருக்கும். கல்லூரியில் நடைபெறுகிற நிகழ்ச்சியில் ஏதாவது பொறுப்பு எடுத்துக்கொள்ள வாருங்கள் என்று சொன்னால், சில மாணவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்கத் தெறித்து ஓடுவார்கள். இன்னும் சிலரோ இலவச ஆலோசனைகளை வாரி வழங்குகிற பார்ட்டிகளாகவும் இருப்பார்கள். ஆனால், அந்த ஆலோசனையை முன்னெடுத்துச் செய்யுங்கள் என்று சொன்னால் பட்டென்று மறைந்துவிடுவார்கள்.
‘இனி, பத்துப் பேருக்கு நீங்கதான் பொறுப்பு’ என்று கல்லூரியிலோ பணி புரியும் இடத்திலோ சொல்லும்போது பலரும் வானத்தில் பறக்கிற மாதிரி நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், ‘அந்தப் பத்துப் பேரும் சரியாகச் செயல்படவில்லை என்றால், உங்களைத்தான் கேள்வி கேட்போம்’ என்று சொன்னால், ‘ஆள விடுங்க சாமி’ என்று சொல்கிற கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.
உண்மையில சந்தோஷமும் சுதந்திரமும் நிலையாக இருக்க வேண்டுமென்றால், நம் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலமே அதை அடைய முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு ஒவ்வொரு பொறுப்பு இருக்கிறது. பிள்ளைகளாக, மாணவர்களாக, கணவன், மனைவியாக, பெற்றோராக, சமுதாயத்தின் பிரதி நிதியாக என நமக்கான பொறுப்புகள் விரிந்துகிடக்கின்றன. அந்தந்தக் காலகட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப இந்தப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க முடியாது.
‘நான் எந்த வேலை செஞ்சாலும் தப்பு பண்ண மாட்டேன். ஏன்னா, அப்படியொரு வேலையைச் செய்யவே மாட்டேன்’ எனச் சொல்லும் மனிதர்களும் உண்டு. ஆனால், நம் ஆற்றல் வெளிப்பட வேண்டுமென்றால், நமக்கான பொறுப்புகளை எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால், தோல்விக்குச் சொந்தக்காரனாவது நிச்சயம். பொறுப்புகளை வாய்ப்புகளாகவும்; இடையூறாகவும் பார்த்த இரண்டு பேருடைய அனுபவத்தையே அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
அண்மையில் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பை ஒரு பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் பலர் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். இரண்டு பேர் மீது எனது கவனம் சென்றது. தினேஷ், ராகுல் ஆகியோர்தான் அவர்கள். தினேஷ் பள்ளிப் படிப்பைத் தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர். படிப்பு சுமார்தான். ஆனால், படிக்கிறபோதே கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கம், கலைநிகழ்ச்சிகள் என எல்லா நிகழ்ச்சிகளிலும் பொறுப்பை எடுத்துக்கொள்ளத் தானாக முன்வருவார். ஒவ்வொரு பொறுப்பும் தன் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு என்று சொல்லி அந்த வேலையை உற்சாகமாகச் செய்வார்.
ராகுல் நல்ல படிப்பாளி. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், பொறுப்பு என்று சொன்னால் தூர ஓடிவிடுவார். கல்லூரி விட்டால் வீடு; வீடு விட்டால் படிப்பு என்று இருப்பவர். படிப்பைத் தாண்டி எதிலும் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியே நிற்பார். ஆனால், பல்கலைக்கழகத் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்று படிப்பில் அசத்தியவர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பார்த்தபோது, ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. கல்லூரியில் படித்த காலத்தில் அவர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்ட விதம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர முடிந்தது. தினேஷ் இப்போது ஒரு முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆனால், ராகுல் ஒரு சிறிய நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.
ராகுல் போன்றவர்கள் பொறுப்பு களால் கிடைக்கிற வாய்ப்புகளை எப்போதும் தன்னை நிரூபிப்பதற்கான ஒரு களமாகப் பார்ப்பதில்லை. அதில் எதிர்கொள்ளக்கூடிய சங்கடங்களை மட்டுமே பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் எதிலும் விலகி நிற்கிற போக்கையே கடைப்பிடிக்கிறார்கள். சிறு வயதிலிருந்து ஒதுங்கி நிற்கும் இந்தப் போக்கு, அவர்கள் வாழ்க்கை முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்தப் போக்கைப் பின்பற்றுவோர், அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. இளம் வயதிலே பொறுப்புணர்வு, தலைமைப் பண்பை ஏற்கிற மனப்பாங்கு தேவை. இவை இரண்டும் இருந்ததால்தான் படிப்பைத் தாண்டி தினேஷின் வெற்றிக்கு அது அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.
பொறுப்பை முன்னெடுத்துப் போக வேண்டிய திறன் இல்லாவிட்டால் ஓரிடத்திலேயே தேங்கிவிடுவோம். கிடைத்த வாய்ப்பையெல்லாம் வீணடித்துவிட்டோமே என்று நாளை எண்ணி வருந்தாமல் இருக்க வேண்டுமென்றால், பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும்போது அதை வீணடிக்காமல், அதில் சிறப்பாகச் செயல்பட்டு உங்கள் திறமைகளை நிரூபியுங்கள்.
பொறுப்போ ஆளுமையோ ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய ஓர் அம்சம். படிப்பும் வேறு திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பொறுப்பை எடுத்துக்கொள்ளக்கூடிய ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் வெற்றியாளர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் அது வேறுபடுத்துகிறது.
கட்டுரையாளர்: பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago