ஹைதராபாத், லால்பகதூர் சாஸ்திரி மைதானம்.
அந்த அதிகாலை நேரத்தில் ஹர்விர் சிங்கும் அவருடைய எட்டு வயது மகள் சாய்னாவும் மைதானத்துக்குள் நுழைந்தார்கள். சற்றுத் தொலைவிலிருந்த பயிற்சி யாளர்களை நெருங்கினார்கள்.
நானி பிரசாத், கோவர்தன் ரெட்டி இருவரும் மூத்த பயிற்சியாளர்கள். பல இளம் வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கியவர்கள். அவர்கள் நடத்துகிற கோடைக்கால பாட்மிண்டன் பயிற்சி முகாமில் தன்னுடைய மகளைச் சேர்ப்பதற்காக ஹர்விர் சிங் வந்திருந்தார்.
அவர் விஷயத்தைச் சொன்னதும் பயிற்சியாளர்கள் இருவரும் வருத்தத்துடன் உச்சுக்கொட்டினார்கள், 'அடடா, பயிற்சி முகாமில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான நாள் முடிந்துவிட்டதே' என்றார்கள், 'இனிமேல் நாங்கள் யாரையும் புதிதாகச் சேர்க்க முடியாதே.'
ஹர்விர் சிங் ஏமாந்துபோனார். அதேநேரம், அவர் நம்பிக்கை இழக்கவில்லை. 'ஐயா என் மகள் நன்றாக பாட்மிண்டன் விளையாடுவாள், அவள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார். 'ஒரே ஒருமுறை அவள் விளையாடுவதைப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்திருந்தால் முகாமில் சேர்த்துக்கொள்ளுங்கள்.'
பயிற்சியாளர்கள் இருவரும் அவருடைய மகளைப் பார்த்தார்கள். 'சரி, விளையாடட்டும்' என்றார்கள்.
சாய்னாவுக்கு நடப்பதெல்லாம் திகைப்பாக இருந்தது; அவள் அதற்குமுன் பாட்மிண்டன் விளையாடியதுண்டு. ஆனால், அதில் அவளுக்குப் பெரிய திறமையெல்லாம் கிடையாது. எந்த நம்பிக்கையில் இவ்வளவு பெரிய பயிற்சியாளர்கள் முன்னால் சென்று விளையாடுவது?
குழப்பத்துடன் மைதானத்தில் நுழைந்து விளையாடத் தொடங்கினாள்.
அவளுடைய இயல்பான விளையாட்டு அந்தப் பயிற்சியாளர்களுக்குப் பிடித்துபோனது. 'இவளும் முகாமில் சேர்ந்துகொள்ளட்டும்' என்றார்கள்.
ஹர்விர் சிங்குக்கு மகிழ்ச்சி. அவரும் அவருடைய மனைவியும் நன்கு பாட்மிண்டன் விளையாடுவார்கள். தங்கள் மகளுக்கும் அதை முறைப்படி கற்றுத்தர விரும்பினார்கள். அதற்கு இந்த முகாம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.
ஆனால், மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சாய்னாவுக்கு இந்தப் பயிற்சி முகாம் ஒரு மிகப்பெரிய சுமை. அதிகாலையில் தூக்கத்தைத் தியாகம் செய்து எழ வேண்டும். தாயுடன் மைதானத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு ஓட்டப் பயிற்சி, குதிக்கும் பயிற்சி, படிகளில் ஏறி இறங்கும் பயிற்சி, இன்னும் பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும், இவற்றுக்கிடையே பாட்மிண்டன் கற்றுக்கொள்ள வேண்டும்.
காலை முழுக்க வியர்க்க விறுவிறுக்கப் பயிற்சியெடுத்துவிட்டு வீடு திரும்பினால், சாய்னாவின் அம்மா உஷா மட்டையைக் கையிலெடுத்துக்கொள்வார். 'மதியம் சும்மாதானே இருக்கே, கொஞ்ச நேரம் விளையாடுவோம்!' என்பார்.
ஏன்? பயிற்சி முகாமில் கற்றுக்கொள்வது போதாதா?
'ம்ஹூம், போதாது' என்றார் உஷா. 'விளையாட்டில் சிறந்து விளங்கவேண்டுமென்றால், நீ இன்னும் அதிகப் பயிற்சி எடுக்க வேண்டும்!'
காலை, மாலை என்று பல நாட்கள் பயிற்சி தொடர்ந்தது. என்னதான் சிரமங்கள் இருந்தாலும், சாய்னாவுக்கு இந்த விளையாட்டு பிடித்திருந்தது. ஆகவே ஆர்வத்துடன் கற்றுக்கொண்டாள்.
அந்தப் பயிற்சி முகாமின் நிறைவில், அதில் பங்கேற்ற எல்லாருக்கும் ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு இன்னும் தீவிரமான பாட்மிண்டன் பயிற்சி வழங்கப்படும்.
சாய்னா அந்தப் போட்டியில் கலந்துகொண்டாள். இறுதிச் சுற்றுவரை முன்னேறினாள். ஆனால், இறுதிப்போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தீத்தி என்ற சிறுமியிடம் தோற்றுவிட்டாள்.
ஆனால், தீத்தியால் தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்க இயலாத சூழ்நிலை. அவள் ஊருக்குத் திரும்பிவிட்டதால், அந்த அரிய வாய்ப்பு சாய்னாவுக்குக் கிடைத்தது.
அதேநேரம், இதனால் சாய்னாவின் வேலைப்பளு இன்னும் அதிகமானது. அதற்குள் கோடை விடுமுறை முடிந்து அவளுடைய பள்ளியும் திறந்துவிட்டதால், பள்ளி நேரத்தையும் பயிற்சி நேரத்தையும் அவள் சேர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. தினமும் காலை 4 மணிக்கு விழித்தால், 25 கிலோ மீட்டர் தூரம் சென்று காலை நேர பாட்மிண்டன் பயிற்சியை முடித்துவிட்டுப் பள்ளிக்குச் சென்று, திரும்ப மாலை நேர பாட்மிண்டன் பயிற்சியையும் முடித்துவிட்டு அவள் வீட்டுக்கு வருவதற்குள் இரவு ஒன்பது மணியாகிவிடும்.
சாய்னா சிறுமிதானே! ஒவ்வொரு நாளும் இத்தனை மணி நேர ஓட்டத்தை அவளால் தாங்க முடியுமா? சில நேரம் ‘கால் வலிக்கிறது’ என்று அழுவாள். தாய் அவளுக்கு மருந்து தடவிவிட்டு ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் சொல்லிப் பயிற்சிக்கு அனுப்பிவைப்பார்.
இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியிலும் சாய்னா தொடர்ந்து பயிற்சிக்குச் சென்ற காரணம், அவளுக்கு பாட்மிண்டன் விளையாட்டு மிகவும் பிடித்திருந்தது. மைதானத்தில் இறங்கி விளையாடுகிற ஒவ்வொரு கணத்தையும் அவள் ரசித்தாள். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவது அவளுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது.
விளையாட்டின் மீதிருந்த அந்தக் காதலும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் சாய்னா நேவாலை உலகின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையாக ஆக்கின. அவரைப் பார்த்து பல இந்தியச் சிறுவர் சிறுமியர்களும் பாட்மிண்டன் விளையாடவந்தார்கள். இளம் வயதில் ஒரு தலைமுறையையே வழிநடத்திச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.
ஆனால் சிலர், இதை எதிர்மறையாகப் பார்க்கிறார்கள். "மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய வயதில் உங்களுடைய பெற்றோர் உங்கள் மீது அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றிவிட்டார்களோ?" என்று சாய்னாவிடமே கேட்கிறார்கள்.
"யோசித்துப் பார்த்தால் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தோன்றுகிறது" என்கிறார் சாய்னா, "எனக்கு இந்த விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருப்பதையும், நான் கடினமாக உழைக்கத் தயாராக இருப்பதையும் என் பெற்றோர் கவனித்தார்கள், என்னை ஊக்கப்படுத்தினார்கள், சரியான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்கள்."
"அது மட்டுமில்லை, இதற்காக நான் எந்த அளவு சிரமப்பட்டேனோ அதே அளவு என் பெற்றோரும் சிரமப்பட்டார்கள்; தினமும் தூக்கத்தைத் துறந்து, பலமணி நேரம் மைதானத்துக்கும் பள்ளிக்கும் வீட்டுக்கும் ஓடிக் கஷ்டப்பட்டார்கள். அவர்களும் என்னைப்போல் களைத்துப் போயிருப்பார்கள். ஆனால், ஒருநாளும் அதை அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் சாய்னா. "அவர்களுடைய அர்ப்பணிப்பாலும் உறுதியாலும்தான் என்னால் இந்த அளவுக்கு உயர முடிந்தது."
‘இளமையில் கல்' என்கிறது ஆத்திசூடி. இங்கே சொல்லப்படும் ‘கல்வி', வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல. கோடைக் காலத்தில் வீட்டிலேயே இருந்தால் பிள்ளைகளுக்குச் சலிப்பாக இருக்கும் என்பதற்காகக் குழந்தைகளைப் பயிற்சி முகாமுக்கு அனுப்புவார்கள். அப்படி விளையாட்டாக இந்த விளையாட்டில் நுழைந்த சாய்னா, அந்த வயதுக்குரிய ஆற்றல் முழுவதையும் அதில் கொட்டினார். தான் ரசித்து அனுபவிக்கும் ஒரு பொழுதுபோக்கைக் கண்டுகொண்டார். அதையே முழுநேர வாழ்க்கையாக ஆக்கிக்கொண்டார். அதற்கு அவருடைய குடும்பம் துணை நின்றது.
நமக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும், சில விஷயங்களை நாம் மட்டும் தன்னந்தனியாகச் செய்துவிட முடியாது. குடும்பம், நண்பர்கள், வழிகாட்டிகள் போன்றோரின் ஆதரவும் தேவை. அன்பும் அக்கறையும் நிறைந்த அந்த வலைப்பின்னலைப் பயன்படுத்திக்கொண்டால் பெரிய உயரங்களை எளிதில் தொடலாம்.
(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago