அனுபவம் புதுமை 15: வாழ்க்கையைச் செதுக்கும் வார்த்தைகள்

By கா.கார்த்திகேயன்

பொதுவாக, தெரிந்தவர்களையோ நண்பர்களையோ பார்க்கிறபோது நலம் விசாரிப்பது  நமது பண்பாடு. ஆனால், நன்றாகவே இருந்தாலும், ‘ஏதோ இருக்கேன்’ என்று சொல்பவர்களே நம்மிடம் அதிகமாக இருக்கிறார்கள். ஏன் என்று கேட்டால்,  ‘நல்லா இருக்கேன்னு சொன்னா, மத்தவங்க பொறமைப்படுவாங்க’ என்ற  பதிலை இவர்கள் தயாராக வைத்திருப்பார்கள். நம் பழக்க வட்டத்தில் அப்படியானவர்கள் இருந்தால், அவர்களைத்தான் தவிர்க்க வேண்டுமே தவிர, எதிர்மறைச் சொற்களுக்கு ஒரு நாளும் பலியாகிவிடக் கூடாது.

“நிறைய செலவழிச்சு படிக்க வைக்கிறேன். ஒரு பிரயோஜனமும் இல்லை. உனக்கு கட்டற காலேஜ் ஃபீஸ், போடுற சாப்பாடு, வாங்கி கொடுத்த பைக், அதற்கு பெட்ரோல் எனப் பண்ற செலவு எல்லாம் தண்டம்தான். நீ கொஞ்சம்கூட உருப்படற வழிய காணோம்” என விளாசும் பெற்றோர்கள் அதன் பொருளை உணர்ந்து சொன்னாலும், உணராமல் சொன்னாலும் விளைவு ஒன்றுதான். எதிர்மறைச் சொற்களால் காயம்பட்ட பிள்ளைகளும் அதையேதான் எதிரொலிக்கிறார்கள்.

“எப்படி மச்சான் எக்ஸாம் எழுதியிருக்க” என்றால், “பாஸ் பண்ணா ஆச்சரியம்தான்” என்று சொல்வதும், “படிச்சு முடிச்சிட்டு என்ன பண்ணலாம்னு இருக்க” என்று கேட்டால், “படிச்சு என்ன பிரயோஜனம். என்ன பண்ணினாலும் உதவாக்கரைங்கிற பட்டம்  நிச்சயம்” என்று விரக்தியாகப் பதில் சொல்லும் மாணவர் வட்டம் கவலைக்குரியது மட்டுமல்ல; கவனத்திற்குரியதும்கூட.

நாம் தேர்ந்தெடுக்கிற சொற்கள்தாம் நம் வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கும். இதை இளைய தலைமுறை மனத்தில் அழுத்தமாகப் பதியவைக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. ஏனெனில், பிள்ளைகளின் சந்தோஷம், கோபம், முடிவெடுக்கிற திறன், விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை, இப்படி எல்லாவற்றிலும் சொற்கள்தாம் முக்கியமானவை.

இதைப் பற்றி பேசக் காரணம் அண்மையில் என்னைச் சந்தித்த, எனது கல்லூரிக் கால நண்பர் இளங்கோ. அவருடைய மகனைப் பற்றி முழு நீள குற்றப்பத்திரிகை வாசித்தார். “நான் ஒரு அரசு ஊழியர். ஆனா, வேலை விஷயமா வெளியூரிலேயே இருக்கிறவன். என் பையன் மனோஜை நினைச்சா கோபம் கோபமா வருது. ஒரு பிடிப்பும் இல்லாம இருக்கான். கல்லூரி முடித்து ஒரு வருஷம் ஆச்சு. படிப்பெல்லாம் சுமார்தான்.

பட்டப் படிப்பு முடிச்சதாலேயே ஏதோ பெரிசா சாதிச்ச மாறி நினைப்பு வேற. இண்டர்வியூவுக்குப் போகக்கூட ஆர்வம் இல்லாம இருக்கான். வேலைக்கு விண்ணப்பிக்க டிடி எடுக்கணும்னு 500 ரூபாய் கேட்டான். ஆனா, அந்த டிடியை எடுக்கவே இல்லை, இப்படி இருக்கிறவனை நான் என்னான்னு சொல்றது. கொஞ்சம்கூடப் பொறுப்பே இல்லாம இருக்கான். நீ அவனைக் கூப்பிட்டுப் பேசிப் பாரேன்” என்றார் இளங்கோ.

மனோஜை அழைத்துப் பேசினேன். ஆனால், அவனது பார்வை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. அவனது படிப்பு, ரசனை, விருப்பம் என எல்லாவற்றையும் பேசிவிட்டு விஷயத்துக்கு வந்தேன். அவன் மேல் உள்ள புகாரைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தான். “ஒவ்வொரு முறையும் கல்லூரி ஃபீஸ் கட்டுறப்ப, புத்தகங்கள் வாங்குறப்ப, டிரஸ் எடுக்குறப்பல்லாம்  என் பணம் வீணா போகுதுன்னுதான் அப்பா சொல்வார். படிப்பு முடிச்சிட்டு என்ன பண்ணப் போறியோன்னு நம்பிக்கை இல்லாமத் திட்டுவார்.  ஒரு வேளை எனக்கு நல்ல வேலை கிடைச்சாகூட, உன்னை நம்பி எப்படிடா வேலை கொடுத்தான்னு கிண்டலாதான் கேட்பார். இப்படி இருந்தால், நான் எப்படித் தன்னம்பிக்கையோடு யோசிக்கிறது, செயல்படறது” என்று வருத்தப்பட்டான் மனோஜ்.

நான் இளங்கோவை அழைத்துப் பேசினேன். “அவனுக்கு கவுன்சலிங் தர்றதுக்கு முன்னாடி முதலில் அதை உனக்குத் தரணும். மனோஜைக் கண்டிக்க நீ பயன்படுத்தின வார்த்தைகள்தாம் அவனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. பெத்தவங்க எதிர்பார்ப்பு ரொம்பவே சரியானது. ஆனால், அதில் ஏமாற்றம் வர்றப்ப அதைப் புரிய வைக்கணுமே தவிர, வார்த்தைகளால காயப்படுத்தக் கூடாது. இப்போ பாரு, பாதிக்கப்பட்டது மனோஜ் மட்டுமல்ல; நீயும்தான்” என்றேன்.

மனோஜிடம் இருந்த பிரச்சினையே தன் அப்பாவை எப்படித் திருப்திப்படுத்துவது என்ற பயம்தான். மனோஜிடம் சரியான அணுகுமுறையில் அவனுடைய அப்பா பேசினாலே எல்லாமே தீர்ந்துவிடும் என்பதை இளங்கோவுக்கு முதலில் உணரவைத்தேன்.

ஒரு மாதம் கழித்து தொலைபேசியில் மனோஜ் தொடர்புகொண்டான்.   “அங்கிள், எங்கப்பாவ முழுசா மாத்திட்டீங்களே, இப்பெல்லாம்

அவரு என்கிட்ட நேர்மறையா பேசறார்” என்றான். “நீ இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று பதிலுக்குக் கேட்டேன். “வேலைக்குப் போகிறேன்” என்று பதில் வந்தது.

எப்போதும் பயன்படுத்துகிற சொற்கள் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டுமே தவிர விரக்தியின் விளிம்பை நோக்கி தள்ளிவிடக் கூடாது. ஏதோ ஒரு விஷயத்துக்காகத் தங்கள் பிள்ளைகளிடம் குறைபட்டுக்கொண்டு அவர்களிடம் சரியான அணுகுமுறையுடன் அணுகுவதைப் பெற்றோர் தவிர்க்கிறார்கள். அது தேவையற்ற எதிர்மறையான சொற் பிரயோகங்களை கொண்டுவந்துவிடுகிறது. பிள்ளைகளிடம் எதிர்மறைச் சொற்களைப் பெற்றோர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்