இளமை புதுமை

கொஞ்சம் பாசம் காட்டினால் போதும்! | காபி வித் அஞ்சலி பாஸ்கர்

மிது கார்த்தி

மலையாளக் கரையோரத்திலிருந்து வந்து தமிழ் மக்களின் வீட்டு வரவேற்பறையை ஆக்கிரமித்திருப்பவர் அஞ்சலி பாஸ்கர். சின்னத் திரை நெடுந்தொடர்களில் படிப்படியாக முன்னேறி, இன்று கதையின் நாயகியாக உயர்ந்திருக்கும் அஞ்சலியுடன் ஒரு காபி கோப்பை உரையாடல்.

சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - ஷூட்டிங் இருக்கறப்போ மட்டும் சீக்கிரமாக எழுந்திரிக்கிற ஆளு நான். மற்ற நாள்களில் எனக்குத் தூங்கவே பிடிக்கும்.

‘ஒர்க்-அவுட்’டா இல்ல ‘டயட்’டா? - 2025லிருந்துதான் ஒர்க் அவுட் தொடங்கியிருக்கேன். கொஞ்சம் டயட், உடற்பயிற்சி, யோகான்னு நல்லா போகுது.

தனித்துவமான பழக்கம் ஏதேனும் இருக்கா? - வீட்டை விட்டு ரொம்பத் தள்ளி சென்னையில இருக்கேன். எந்தச் சின்ன விஷயமா இருந்தாலும் அதை ஷேர் செய்ய என் அம்மாவைதான் போனில் அழைப்பேன். தினமும் அம்மாவிடம் பேசினால்தான் எனக்கு ‘டீ ஸ்ட்ரஸ்’டா இருக்கும். எனக்கு இது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது.

‘கம்-பேக்’ தருணம்..? - தொடக்கத்தில் ஆங்கரிங் செய்தேன். அப்போதிருந்தே நிறைய போராட்டங்களைச் சந்தித்தேன். சீரியலுக்கு வந்தபோது எல்லாம் சீக்கிரமாக கிடைச்சிடும்னு நினைச்சேன். ஆனால், அப்படி நடக்கலை. எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பாடமாக வெச்சுதான் மேலே வரத் தொடங்கினேன். பல ஆண்டுகளாக முயற்சி செய்துதான் ‘சக்திவேல்’ தொடரில் நாயகி வாய்ப்பு கிடைச்சது.

இந்த வேலை இல்லையெனில்? - யாரு வீட்டிலாவது ‘ஹவுஸ் ஒய்ஃப்’பா இருந்திருப்பேன். என்கூட இருந்த எல்லாரும் கல்யாணம் செய்து செட்டில் ஆயிட்டாங்க. ஆனால், எனக்கு ஆக்டிங் கிளிக் ஆயிடுச்சு.

எதிர்காலக் கனவு? - நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். வெள்ளித்திரைக்குப் போகும் ஆசை இருக்கிறது. மக்கள் எப்போதும் மறக்காத அளவுக்கு ஒரு நல்ல ரோல் பண்ணணும்.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - முன்பு புத்தகங்கள் நிறைய வாசிச்சுக்கிட்டிருந்தேன். ஆனால், இப்போது ஷூட்டிங் இருக்கிறதால தொடர்ந்து வாசிக்க முடியாமல் போயிடுது. படங்களும் பார்ப்பேன். இப்போதைக்கு ரெண்டுமே ‘மிக்ஸ்’டா இருக்கு.

பொழுதுபோக்கு? - ஓவியம் ரொம்பப் பிடிக்கும். ஃப்ரீயா இருந்தா, வரையத் தொடங்கிவிடுவேன்.

பிடித்த சமூக வலைதளம் எது? ஏன்? - பொதுவாக சோஷியல் மீடியாவில் பொழுதுபோக்க மாட்டேன். என்றாலும் இன்ஸ்டகிராம் பிடிக்கும். என்னுடைய போட்டோஸ், வேலை, அப்டேட் பற்றியெல்லாம் சொல்ல இன்ஸ்டகிராம் ஏற்றதா இருக்கு.

உறங்கவிடாதது…? - முன்பு யாராவது என்னைப் பற்றி நெகட்டிவா சொன்னால், நம்முடைய ஒர்த் அவ்ளோதான் என்று இருந்துவிடுவேன். இதைப் போன்ற பேச்சுகளைக் கேட்டு என்னுடைய இலக்கை அடைவதைத் தவறவிட்டுவிட்டேனோ என்று நினைச்சதுண்டு.

மறக்கவே முடியாத நபர்? - உனக்கு நான் இருக்கேன் என்று யாரும் சொன்னதெல்லாம் கிடையாது. என் குடும்பம்தான் எனக்காக நின்றிருக்கிறது. கடவுள் நம்பிக்கையும் அதிகம். ‘கடவுளும் குடும்பம்’தான் என்னுடைய பதில்.

மனதில் பதிந்த வாசகம்? - இதுவும் கடந்து போகும்.

மறக்க முடியாத தேதி? - நான் பிறந்த ஜனவரி 13.

திரும்பத் திரும்பப் போக விரும்புமிடம்? - கோழிக்கோட்டில் உள்ள என்னுடைய வீடு.

நான்கு ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறீர்கள். இங்கு பிடித்த இடம்? - மெரீனா பீச் அல்லது பெசன்ட் நகர் பீச். மனம் பாரமாக இருந்தால் பீச் போய்விடுவேன்.

இதுதான் நான்..? - எனக்கு உண்மையா இருந்தால், நானும் உண்மையாக இருப்பேன். கொஞ்சம் பாசம் காட்டினாலும் நான் அவ்ளோ உண்மையாக இருப்பேன்.

SCROLL FOR NEXT