இளமை புதுமை

பிரபல செல்லப்பிராணிகளின் செல்லம்!

ராகா

செலிபிரிட்டி மேலாளர், ஒளிப்படக்கலைஞர், ஆடை வடிவமைப்பாளர் தெரியும். ‘செலிபிரிட்டி பெட் க்ரூமர்’ தெரியுமா? சென்னையைச் சேர்ந்த 24 வயதான அருண் கிரி அப்படித்தான் வலம் வருகிறார். கமல்ஹாசன், தனுஷ், ஜீவா, கீர்த்தி சுரேஷ், துஷாரா விஜயன் உள்ளிட்டோரின் செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் இவர், கோலிவுட்டில் 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் செல்லம் இவர்!

அதென்ன ‘பெட் க்ரூமிங்’? - வீட்டுச் செல்லப் பிராணிகளைக் குளிக்க வைப்பது, முடியைக் கத்திரிப்பது, நகங்களை வெட்டுவது எனச் சரும பாதிப்பு ஏற்படாத வகையில் பராமரிப்பதுதான் ‘பெட் க்ரூமிங்’. பள்ளி விடுமுறைக் காலத்தில் ‘பெட் க்ரூமிங்’கைக்கற்றுக்கொண்டு அனுபவம் பெற்ற அருண், கல்லூரிப் படிப்பை முடித்து, தற்போது முழு நேர ‘பெட் க்ரூம’ராக உருவெடுத்துவிட்டார்.

“சிறு வயதிலேயே நாய், பூனை என்றால் அளவு கடந்த அன்புதான். ஆனால், வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்க அனுமதி தரவில்லை. இதனால், நேரம் கிடைத்தபோதெல்லாம் செல்லப் பிராணிகள் தொடர்பான பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அரிய வெளிநாட்டு நாய்களுக்கான சந்தை உள்ளூரில் பெருகியதால், ‘பெட் க்ரூம’ருக்கான தேவையும் அதிகரித்துவிட்டது. இதனால், இதையே என்னுடைய ‘கரியர்’ ஆகவும் தேர்ந்தெடுத்தேன்” என, தான் ‘பெட் க்ரூமர்’ ஆன கதையை விளக்குகிறார் அருண்.

அழகும் ஆரோக்கியமும்: ‘பெட் க்ரூமிங்’ என்பது அழகுப்படுத்துவது மட்டுமல்ல ஆரோக்கியம் சார்ந்ததும்தான் என்கிறார் அருண். “ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை போன்ற உள்ளூர் நாய்கள் காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடியும். ஆனால், வெளிநாட்டு வகை நாய்களால் ஏ.சி. இல்லாமல் இருக்க முடியாது. சிட்சூ, பூடில் போன்ற செல்லப் பிராணிகளுக்கு முறையாக ‘பெட் க்ரூமிங்’ செய்வது அவசியம். இது செல்லப் பிராணிகளை அழகாகவும் கண், காது, சரும பாதிப்பு அண்டவிடாமலும் காக்க உதவும்” என்கிறார் அருண்.

பயிற்சி வேற, ‘க்ரூமிங்’ வேற: செல்லப் பிராணிகளைப் பயிற்றுவிப்பவர் பயிற்றுநர்; உடல்நலப் பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிப்பது கால்நடை மருத்துவர்; இவர்களது பணிகளிலிருந்து சற்று மாறுபட்டது ‘பெட் க்ரூமிங்’. சரி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ‘பெட் க்ரூமிங்’ அவசியமா? “எந்தச் செல்லப் பிராணிக்கும் ‘க்ரூமிங்’ அவசியம். ஆனால், நாட்டு நாய்கள், பூனைகளை உரிமையாளரே பராமரித்துவிடலாம்.

வெளிநாட்டுச் செல்லப் பிராணிகளுக்கு ‘பெட் க்ரூமிங்’ செய்வது அவசியம். ‘பெட் க்ரூமிங்’ செய்ய அதிக செலவாகும். நம்மோடு 12-15 ஆண்டுகள் வாழப்போகும் செல்லப் பிராணியின் தன்மைக்கேற்ப செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனவே, வெளிநாட்டுச் செல்லப் பிராணிகளை வாங்க திட்டமிடுவோர் முன்கூட்டியே ‘பெட் க்ரூமிங்’, மருத்துவச் சிகிச்சை போன்ற செலவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார் அருண்.

SCROLL FOR NEXT