முதல் ஐ.பி.எல் 
இளமை புதுமை

ஐசிஎல் டூ ஐபிஎல் - ஒரு ரீவைண்டிங் | ஈராயிரத்தில் ஒருவன்

ப. சூரியராஜ்

மார்ச் முதல் ஐ.பி.எல் மாதம்! இத்தோடு 18ஆவது சீசன் என்பதை நினைத்துப் பார்க்கவே தலைசுற்றுகிறது. காலத்தின் பற்சக்கரங்கள் முன்னும் பின்னும் மோதி களிமண்ணாகப் பின்னிப் பிசைந்து தரையில் சொத்தென விழுகிறது. ஒரு பக்கம் சச்சின் காலம், இன்னொரு பக்கம் ரோஹித் காலம் என எழுதப்பட்டிருக்கும் காகித மடிப்பை விரிக்க விரிக்க அவ்வளவு அகலமாக விரிகிறது. அதில் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட அத்தனை தருணங்களும், கூடவே பழைய கையெழுத்தும் நினைவுகளைக் கிளப்புகின்றன.

பிரீமியர் லீக், லா லீகா, பன்டஸ் லீக் எனக் கால்பந்து கிளப் போட்டிகளைப் பார்த்து வெதும்பி, ரியல் மாட்ரிட், பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் என கிளப் அணிகளைப் பார்த்துக் கண்ணீர் வடித்து, இதெல்லாம் எப்போது கிரிக்கெட்டுக்குள் வரும் என்று நொந்து போனது ஒரு காலம். எப்போது ஆதர்ச கிளப் அணியின் வண்ணத்தில் நம்முடைய அறை, உடை, உடைமை எல்லாவற்றையும் மாற்றுவது என ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், 2007 வாக்கில் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் யோசனையில் இந்தியன் கிரிக்கெட் லீக் எனப்படும் ஐ.சி.எல். உதித்தது.

உள்குத்தால் வந்த ஐபிஎல்: அப்போது, மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஹைதராபாத் ஹீரோஸ், ராயல் பெங்கால் டைகர்ஸ் என அணியின் பெயர்கள் எல்லாம் அட்டகாசமாக இருந்தன. இந்திய நகரங்களின் பெயர் கொண்டு விளையாடும் கிளப் அணிகளில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், இலங்கையின் மாரவன் அட்டபட்டு, தென் ஆப்ரிக்காவின் லான்ஸ் க்ளூஸ்னர் எனச் சர்வதேச ஜாம்பவான்கள் விளையாடுவதும், நம் ஊர் இளம் வீரர்களுடன் சிரித்து, அணைத்து, கைதட்டி உற்சாகப்படுத்தவதும் புதுவிதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. சன் டி.வியில் இடையிடையே வரும் ஐ.சி.எல்.

விளம்பரங்களைப் பார்க்கக்கூட சந்தோஷமாக இருந்தது. பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உள்குத்தால் ஐ.சி.எல். மறைந்து ஐ.பி.எல். உதயமானது. சச்சின் மும்பைக்கு, சேவாக் டெல்லிக்கு, கங்குலி கொல்கத்தாவுக்கு, டிராவிட்டும் கும்ப்ளேவும் பெங்களூருவுக்கு, வி.வி.எஸ். லட்சுமண் ஹைதரா பாத்துக்கு எனும்போது சென்னைக்கு தினேஷ் கார்த்திக்கா, பதானியா எனக் கண்ணைக் கசக்கிக்கொண்டு காத்திருக்கையில், எம்.எஸ். தோனி என்றவுடன் வந்ததே ஓர் ஆனந்தம்! ஹெய்டன் (ஆஸ்திரேலியா), ஃபிளம்மிங் (நியூசிலாந்து), முத்தையா முரளிதரன் (இலங்கை) படை சூழ கையில் வாள், கேடயத்துடன் கர்ஜிக்கும் சூப்பர் கிங்ஸ் தோனியின் போஸ்டரைப் பார்த்துவிட்டுச் சொல்லாமலேயே பெரிய விசில் அடித்தோம்.

விஜய்யின் விசில்: கங்குலியும் பாண்டிங்கும், ஜாகீரும் ஸ்டெய்னும், அஃப்ரிடியும், சைமண்ட்ஸும் ஒரே அணியில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடப்போகிறார்கள் என்பதெல்லாம் எவ்வளவு ஆனந்தத்தை அள்ளித் தந்தது என்பதைச்
சொல்லி மாளாது. கூடவே, கில்கிறிஸ்ட், கிப்ஸ், அஃப்ரிடி, சைமண்ட்ஸ் எனும் முரட்டு அடி டீமுக்கு வி.வி.எஸ். லட்சுமண் கேப்டன் எனும் அதிர்ச்சியையும் சொல்லி மாளாது.

அணியில் உள்ளவர்களின் பெயர்களை எழுதினால் பேப்பரே கருகிவிடுகிறது. அந்தளவிற்கு நெருப்பு வீரர்களைக் கொண்ட இந்தச் சிறப்பு அணிதான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்த் திருக்கையில், யாருமே நினைத்துப் பார்க்காத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி வாகை சூடியதெல்லாம் லிஸ்ட்லேயே இல்லாத ரகம்! முதல் சீசனில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நடிகர் விஜய் விசில் அடித்தது, கொல்கத்தா ஜெயிக்க ஷாரூக் தவம் கிடந்தது, ப்ரீத்தி ஜிந்தாவின் ஆனந்தக் கண்ணீர், விஜய் மல்லையாவின் கேமியோ என எத்தனை எத்தனை நினைவுகள்.

முன்னோடியை மறக்காதீங்க... இதுவே, ஏதோ பத்து வருடங்களுக்குள் நடந்தது போலத்தான் இருக்கிறது. 18 ஆண்டுகள் என்பதெல்லாம் நம்ப முடியவில்லை. ஆனால், இந்த ஈராயிரக் குழவிகளோ `நம் பால்யத்தின் நாயகர்கள்' எனப் போன சீசன் வரை விளையாடிய ஷிகர் தவான், டேவிட் வார்னர், டூப்ளெஸ்ஸி ஆகியோரை வைத்து ரீல்ஸே போட்டுவிட்டார்கள்! அடுத்த மாதம் முதல் 2கே கிட்ஸ்களை கையில் பிடிக்கவே முடியாது. கிரிக்கெட் ஜூரத்தில் மல்லாந்துவிடுவார்கள், நல்லாருங்கடே... அதேநேரத்தில் ஐபிஎல்லுக்கு முன்னோடியாக இருந்த கபில் தேவை எப்போதும் மறக்காமல் இருங்கடே.

(நிறைவடைந்தது)

- iamsuriyaraj@gmail.com

SCROLL FOR NEXT