இளமை புதுமை

தேவை இல்லை என்றாலும் தேடணும்! | காபி வித் திவ்யா நாதன்

மிது கார்த்தி

செய்தியாளராகப் பணியைத் தொடங்கி செய்தி வாசிப்பாளர், அரசு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் எனப் படிப்படியாக முன்னேறி வந்திருப்பவர் திவ்யா நாதன். அவருடன் ஒரு காபிக் கோப்பை உரையாடல்.

சூரிய உதயத்தைப் பார்க்கும் பழக்கம் உண்டா? - நைட்டு முழுவதும் விழித்திருந்து நிலாவைப் பார்க்குற பழக்கம்தான் இருக்கு. ஏன்னா, நம்ம வேலை அப்படி.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - 80% டயட். 20% ஒர்க் அவுட். தேவையில்லாம எதையுமே சாப்பிட மாட்டேன், தெரியுமா?

தனித்துவமான பழக்கம்? - கேள்விப்படாத விஷயங்களா இருந்தா, எனக்கு அது தேவையே இல்லைன்னாலும், அதைப் பற்றி தேடித் தெரிஞ்சுக்க விரும்புவேன்.

இந்த வேலை இல்லையென்றால்? - எழுத்து சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ ஏதோ ஒரு தேடுதலில்தான் இருந்திருப்பேன்.

மறக்க முடியாத தருணம்? - களச் செய்தியாளரா இருந்த நான் ஆன் ஸ்கிரீன்ல வந்தது. அப்போ என்னுடைய வாய்ஸ் மீது எனக்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால், இன்னைக்கு வாய்ஸ்தான் இந்த இடத்துக்குக் என்னைக் கொண்டு வந்திருக்கு.

எதிர்காலக் கனவு? - பொதுவாக எதிர்காலம் பற்றி பிளான் பண்றதில்ல. என் வாழ்க்கையில் எல்லாமே அதுவா நடந்திருக்கு. இன்று முயற்சியுடன் செய்யுற விஷயங்கள் நம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகுங்கிற நம்பிக்கை கொண்ட ஆள் நான்.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - புத்தக வாசிப்புதான், படித்துப் படித்துதான் என்னை நான் ‘ரீஃபைன்’ செய்துகொள்வேன்.

பொழுதுபோக்கு? - என்னுடைய 7 வயது குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தால் நேரமெல்லாம் எங்கே போகும்னே தெரியாது.

பிடித்த சமூக வலைதளம்? - எழுதவும் படிக்கவும் நிறைய வாய்ப்புகளை ஃபேஸ்புக்தான் கொடுக்குது.

உறங்கவிடாதது? - சிறு வயதில் என் ஊரைச் சுற்றியுள்ள மீனவக் கிராமங்களில் சுனாமியின் தாக்கத்தைப் பார்க்க நேர்ந்தது.

மனதில் பதிந்த சொல்? - தீதும் நன்று பிறர் தர வாரா.

மறக்கவே முடியாத நபர்? - கருணாநிதி. 21 வயதில் பத்திரிகையாளராகக் கருணாநிதியிடம் கேள்வி கேட்டேன். என் தொழிலுக்கு மதிப்புகொடுத்து, அதற்கு நிதானமாக அவர் பதில் அளித்தார். கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அது கொடுத்தது.

மறக்க முடியாத தேதி? - 03-02. என்னுடைய திருமண தேதியும் என் பெற்றோருடைய திருமண தேதியும் ஒரே நாள்தான்.

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - என்னுடைய சொந்த ஊரான சீர்காழிக்கும் சென்னைக்கும் இடையிலான பயணப் பாதை. அந்தப் பயணப் பாதை ஏதோ ஓர் உணர்வைக் கொடுக்கிறது.

‘திவ்யா நாதன்’ - ஒரே வரியில்? ‘கம்போஸ்’டான பெண்ணு.

SCROLL FOR NEXT