அனுபவம் புதுமை 14: அஞ்சாதே!

By கா.கார்த்திகேயன்

பெண்களுக்கு சம உரிமை என்பது எப்போதும் தேவையானதாவே இருக்கிறது. முக்கியமாக அவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து பேசு பொருளாகவே இருந்துவருகிறது. இந்த வன்முறை நடக்கிறபோது பலருக்கும் வருத்தமும் கோபமும் ஏற்படும். ஒரு பேராசிரியராக மாணவிகளிடம் அடிக்கடி இதைப் பற்றியெல்லாம் பேசுவதுண்டு.

உடல்ரீதியான தாக்குதல் மட்டுமல்ல; மனரீதியான தாக்குதலும் பெண்களுக்கு எதிரான வன்முறைதான். ஆசிட் தாக்குதல், வாகனத்தில் செல்லும்போது அச்சுறுத்துவது, தேவையில்லாமல் பெண்களிடம் பேச முயல்வது,  தொலைபேசியில் அழைப்பது, வாட்ஸ்அப் அனுப்புவது, இரட்டை அர்த்தத்துடன் உரையாடுவதெல்லாம்கூட வன்முறைதான்.

இருபாலரும் இருக்கிற இடத்தில் சிலர் பெண்கள் பக்கம் மட்டுமே பார்த்துப் பேசுவார்கள். ஆண்கள் ஏதாவது கேள்வி கேட்டால்கூடப் பெண்களைப் பார்த்தே பதில் சொல்பவர்களும் உண்டு. ஆனால், இதையெல்லாம் எச்சரிக்கையாக அணுக வேண்டுமே தவிர, ஒரு போதும் கூண்டுக்குள்ளே முடக்கிப் போடும் விதமாக எடுத்துகொள்ளக் கூடாது.

தன்னம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். அதை வலிமைப்படுத்தும் காரியங்களைச் செய்ய வேண்டும். வங்கிக்குச் செல்வது, வாகனத்தை ஓட்டிப் பழகிக்கொள்வது என வெளியுலக வேலைகளைச் செய்ய முன்வர வேண்டும். பெற்றோரும் பெண் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தற்காப்புக் கலையும் பெண்களுக்கு மிகவும் அவசியம். ஏனென்றால், பெண்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் எல்லாம் நெருங்கிய உறவுகள், தெரிந்த வட்டாரங்கள் மூலமே அதிகம் நடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின்  மனவோட்டத்தை அறிந்துகொள்கிற கலையையும் பெண்கள் வளர்த்துகொள்ள வேண்டும்.

ஒரு ஆண் எந்த மாதிரி பேசுகிறார். எந்த மாதிரியான உடல்மொழியுடன் இருக்கிறார் என்பதையெல்லாம் இளம் பெண்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். படிக்கிற இடத்தில், சமுதாயத்தில், வேலை பார்க்கிற இடத்தில் இந்த எச்சரிக்கை உணர்வு ரொம்பவே அவசியம். ஒரு பெண்ணின் வேலையை வலிய வந்து செய்யும் ஆணைக் கண்டால்,  ‘எல்லா வேலையும் செய்துகொடுக்கிறான், ஆனா என்ன, தேவையில்லாம வழியுறான். பரவாயில்லை’ என்று சகித்துக்கொள்ள பழகிக்கொண்டால், பிறகு சிக்கல்தான். அந்த எச்சரிக்கை உணர்வு எப்பவுமே தேவை.

கனிவாகப் பேசுகிற அதிகாரிகள், சக அலுவலர்கள் ரொம்பவே நல்லவர்கள். குறைவாகப் பேசுகிற, தவறு செய்யும்போது கோபப்படுகிற அதிகாரிகள் எல்லாருமே கெட்டவர்கள் என்ற மாதிரியான பொதுப்புத்தியும் இருக்கக் கூடாது! சம்பந்தப்பட்டவர்கள் மனத்தைப் படிக்கிற கலை உங்கள் கைவசம் இருந்தால், பிரச்சினை வருவதற்கு முன்பே சரி செய்துவிடலாம்.

இதைப் பற்றிப் பேசுகிறபோது நினைவுக்கு வருகிற கவிதா. ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்த மாணவி. கிராமப்புறத்திலிருந்து படிப்பதற்கு ஆர்வத்துடன் வந்தவர். அவருடைய தந்தை என்னிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

“மகள் படிக்க வேண்டுமென்று  ஆசைப்படுகிறாள். ஆனால், எனக்கு இஷ்டம் இல்ல சார்” என்றார்.

“படிப்பு அறிவை மட்டுமல்ல தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் சேர்த்தே தரும்” என்று கூறிய பிறகு அவர் சமாதானமடைந்தார்.

கவிதா நினைத்ததுபோலவே படிப்பை முடித்துவிட்டு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். நேரில் வந்து என்னுடைய வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்ட அவர், இரண்டே மாதத்தில் தொலைபேசியில் என்னை அழைத்தார்.

“சார், வேலையே புடிக்கல, ராஜினாமா செய்யலாம்னு இருக்கேன்” என்று அழுகிற தொனியில் பேசினார். அவரைச் சமாதானப்படுத்தி பேச வைத்த பிறகுதான், பிரச்சினை தெளிவாகப் புரிந்தது. அலுவலகத்தில் அவருடைய அதிகாரி தேவையில்லாமல் தொந்தரவு செய்கிறார் என்று!

 “காரணமே இல்லாமல் அழைத்துப் பேசுகிறார். இரவு பத்து மணிக்கு மேல் அலைபேசியில் அழைத்து, சந்தேகம் கேட்கிறார். எனக்குப் பிடிக்கவே இல்ல, எங்கப்பாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சா வேலையைவிடச் சொல்வார். இன்னும் நம்ம சமூகத்துல ஆண், பெண் வேறுபாடு இருக்கத்தான் செய்யுது. வேலையைத் திறமையா செஞ்சு சொந்த முயற்சியில உயர்ந்தால், அதுலேயும் பாகுபாடும் குறை கண்டுபிடிக்கிற கூட்டமும் இருக்கத்தான் செய்யுது” என்று வருத்தப்பட்டார்.

“எங்கேயுமே கெட்ட எண்ணம் உள்ள மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதனால வேலையை விடுவது சரியான தீர்வு இல்ல. முதல்ல அவரிடம் கடுமையா எச்சரிக்கை பண்ணு. மேலதிகாரியிடம் புகார் பண்ணு. பயந்து ஓட வேண்டாம். நிமிர்ந்து நில்லுங்க” என்று தைரியம் சொன்னேன்.

இதன் பின்னர் தேவையில்லாமல் பிரச்சினை செய்யும் அதிகாரியிடம்  நேரிடையாகவே தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினார் கவிதா. மேலதிகாரியிடமும் புகார் தெரிவித்தார். இரண்டு நாள் கழித்து கவிதா மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் அழைத்தார். “சார் பிரச்சினை தீர்ந்தது. அந்த வழியுற பார்ட்டி இனி என் பக்கம் வரமாட்டார்” என்று தெரிவித்தார்.

எப்போதும் நியாயமான கோபமும் தைரியமும் சேர்கிறபோது யாருக்குத்தான் வாலாட்டத் துணிவு இருக்கும்? அதை என் மாணவி கவிதா உணர்ந்துகொண்டார். இளம் பெண்கள் பயத்தைத் தள்ளிவைக்க விரும்பினால், முதலில் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் மனம் நிலைகுலையாத அளவுக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் கவிதாவைப் போல அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் லாகவமாகச் சமாளித்து வெற்றிபெற முடியும்!

கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்