புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்குச் சிறு கிராமம் போலிருக்கும் நார்த்தாமலை, ஒரு காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வணிகத் தலமாக இருந்துள்ளது. ஒரு கோடைக் காலத்தில் அங்கு சென்றிருந்தபோது, சாலையோரத்தில் எட்டு உயரமான கல்தூண்கள் பதிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவற்றின் மேற்புரத்தில் குழியும் உருவாக்கப்பட்டிருந்தது.
எந்தப் பயன்பாடும் இல்லாமல் அந்தக் கல்தூண்கள் எதற்காக அங்கு நிற்கின்றன? பக்கத்தில் விசாரித்தபோது, அங்கேயுள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலின் திருவிழா கோடை காலத்தில் நடக்கும்போது, தண்ணீர்ப் பந்தல் அமைக்க வசதியாக இந்தக் கல்தூண்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரையைப் பொருத்துவதற்காகவே உச்சத்தில் குழிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது.
அறச்செயல்
யோசித்துப் பார்த்தபோது, வெப்பமண்டலப் பகுதியான நமது மண்ணில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துத் தாகம் தீர்ப்பது என்பது மிகப் பெரிய அறச்செயலாகத் தொடர்ந்துவந்துள்ளது.
தண்ணீர்ப் பந்தலுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்தவருக்கும், கலம் வடித்துத் தரும் குயவருக்கும், தண்ணீர் ஊற்றி வழங்குபவருக்கும் மானியம் வழங்கப்பட்டது குறித்து வரலாற்றில் பதிவுகள் உள்ளன. இதைச் சோழர் காலக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவதாகப் பண்பாட்டு ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலத் தண்ணீர் பந்தல்களில் தண்ணீர் மட்டுமல்லாது நீர்மோர், பானகம் (போர் வீரர்களுக்கு உடனடி சக்தி தருவதற்காக வழங்கப்பட்டது), சர்பத் போன்றவையும், தென் மாவட்டங்களில் பதநீரோ, தேநீரோ வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.
கோயில் பாதயாத்திரை செல்பவர்களின் தாகம் தணிக்க இதுபோலத் தண்ணீரும் உணவும் வழியில் வழங்குவது வழக்கம்.
இந்தச் செயல்கள் அனைத்துக்கும் காரணம், நம்முடைய மண்ணைத் தொட்டுச் செல்பவர்கள் தாகத்துடனோ, பசியுடனோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், அது அந்த மண்ணில் வாழ்பவர்களுக்கு அவமானம் என்று கருதப்பட்டதுதான்.
மனிதர்களும் மாடும்
தண்ணீர்ப் பந்தல்கள் மட்டுமல்லாது, 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு பொது இடங்களிலும், சில வீடுகளின் முன்புறமும் மண்பானையில் போவோர், வருவோருக்காகத் தண்ணீர் வைக்கும் பழக்கம் இருந்தது. இன்றைக்கு அவற்றைப் பார்க்க முடியவில்லை. அது மட்டுமல்லாது, பொது இடங்களில் கிடைக்கும் தண்ணீர் சுகாதாரமானதா என்ற சந்தேகமும் இன்று பரவலாக உள்ளது.
ஒரு படி மேலே போய் மாடு, குதிரை போன்றவற்றின் தாகத்தைத் தணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சி மேலப் புலிவார்டு ரோடில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட கட்டப்பட்ட இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்புகூடப் பார்த்திருக்கிறேன்.
ஒரு படி மேலே போய் மாடு, குதிரை போன்றவற்றின் தாகத்தைத் தணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. திருச்சி மேலப் புலிவார்டு ரோடில் மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட கட்டப்பட்ட இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்புகூடப் பார்த்திருக்கிறேன்.
மாடும், குதிரையும் தண்ணீர் குடிக்கத் தலையைத் தாழ்த்தினால், வண்டியில் உள்ள பாரம் சரிந்துவிடும் என்பதால் அதற்கேற்ற வகையில் இந்த தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சத்திரம், அன்னச் சத்திரம், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சாவடி, திண்ணை, சுமை தாங்கிக் கல், மாடு உரசும் கல் உள்ளிட்ட அனைத்து தர்ம காரியங்களும், இது போன்று பொதுப் பயன்பாட்டை மனதில் கொண்டு பலரும் செய்த நற்செயல்களே.
மதிப்புகளின் வீழ்ச்சி
தண்ணீர்ப் பந்தல் நடத்துவதால் மக்களிடம் நன்மதிப்பைப் பெறலாம் என்பதை, எம்.ஜி.ஆர். காலத்தில் உருவான ரசிகர் மன்றங்களும், பிறகு அரசியல் கட்சிகளும்கூடக் கையில் எடுத்துக்கொண்டன. தேர்தல் நேரத்தில் வாக்குகளை அறுவடை செய்யவும் தண்ணீர்ப் பந்தல்கள், புற்றீசல்களாகப் பெருகியது உண்டு. தனியார் நிறுவனங்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தன, குறிப்பாகத் திருவிழாக் காலங்களில்.
ஒவ்வொரு கோடைக்கும் அரசியல் கட்சிகள் உட்பட பலரும் அமைத்து வந்த தண்ணீர் பந்தல்கள், மழைக்கு முளைக்கும் காளான்களைப் போல இன்றைக்குத் திருவிழாவுக்கு மட்டுமானதாகச் சுருங்கிவிட்டன.
ஆனால், உலகமயமாக்கத்தின் உச்சத்தில் நமது உள்ளூர் நீராதாரங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, தண்ணீர் இன்றைக்கு ஒரு பண்டமாக அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட் தண்ணீர் மூலம் உள்நாட்டு நிறுவனங்களும் கொழிக்கின்றன. ஒரு லிட்டர் தண்ணீர் ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்கப்படுகிறது.
எந்த அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தலைச் செல்வாக்குப் பெற பயன்படுத்தினவோ, அவையேதான் தண்ணீர் விற்பனைப் பண்டமாக மாற்றப்படவும் காரணமாக இருந்துள்ளன. அரசியல் கட்சிகளின் ‘பரிணாம வளர்ச்சி'யும், நம்முடைய மதிப்புகளின் வீழ்ச்சியையும் இது ஒருசேர அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago