வெல்லுவதோ இளமை 04: கால்களில் மகுடம் தரித்தவன்

By என்.சொக்கன்

 

ன்றைக்குப் பள்ளி மைதானத்தில் ஏகப்பட்ட கூட்டம். பிள்ளைகள் குழுக்களாகப் பிரிந்து ஏதேதோ விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

எட்டு வயது உசேனுக்குப் பிடித்த விளையாட்டுகள், கிரிக்கெட்டும் கால்பந்தும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களோடு விளையாடக் கிளம்பிவிடுவான். அதன்பிறகு, அவனுக்கு நேரம் போவதே தெரியாது. சாப்பாடு, தண்ணீர் தேவை இல்லை. விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டுதான்.

அன்றைக்கு உசேன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். எப்போதும்போல் அதே சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, வேகம்.

சிறிது நேரம் கழித்து, யாரோ அவனைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், மிஸ்டர் டேவெரெ.

அவருடைய முழுப்பெயர், டேவெரெ நுஜென்ட். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஆசிரியர். பையன்கள் விளையாடுவதைக் கூர்ந்து கவனித்து அவர்களுடைய திறமைகளைக் கண்டுபிடிப்பார், குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவார். இன்னும் சிறப்பாக விளையாட ஊக்குவிப்பார்.

ஆகவே, உசேன் அவரிடம் ஆர்வத்துடன் ஓடினான், வணக்கம் சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தான்.

‘உசேன், கொஞ்ச நாளாவே நீ கிரிக்கெட் ஆடறதை நான் கவனிச்சுகிட்டுதான் இருக்கேன். நல்லா விளையாடறே, வெரிகுட்!’ என்றார்.

‘நன்றி சார்’ என்றான் உசேன். திரும்பி மைதானத்துக்கு ஓடலாமா என்று யோசித்தவனை டேவெரெ விடவில்லை. ‘நம்ம பள்ளியில ஸ்போர்ட்ஸ் டே வருதே, அதுல நீ கலந்துக்கறியா?’

‘கலந்துக்கறேன் சார்.’

‘எந்தப் போட்டியிலெல்லாம் கலந்துக்கறே?’ என்றார் டேவெரெ, ‘ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கறியா?’

சட்டென்று உசேனின் முகம் மாறியது, ‘தெரியலை சார்’ என்றான் மழுப்பலாக.

விளையாட்டு என்றாலே மகிழும் சிறுவன், ஓட்டப்பந்தயம் என்றதும் விட்டேத்தியாகப் பேசக் காரணமுண்டு. அந்தக் காரணத்தின் பெயர், ரிகார்டோ.

அவர்களுடைய பள்ளியில் ஓட்டப்பந்தயம் என்றாலே ரிகார்டோதான் வெற்றிபெறுவான். குறிப்பாக, 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவன் கில்லாடி. மற்றவர்களெல்லாம் ஓடத் தொடங்கும்முன் எல்லைக்கோட்டைத் தாண்டி வெளியே வந்துவிடுவான்.

உசேனும் வேகமாக ஓடுகிறவன்தான், ஆனால், ரிகார்டோவை வெல்வது எளிதில்லை. ஒவ்வொருமுறை அவனிடம் தோற்றுப்போகும்போதும் உசேனுக்குக் கோபம் வரும் அல்லது அழுகை வரும்.

ஆகவே, உசேனுக்கு ஓட்டப்பந்தயத்தின்மேல் பெரிய ஆர்வமில்லை. யாராவது ஓடச் சொன்னால் ஓடுவான். மற்றபடி அவனுடைய மனமெல்லாம் கிரிக்கெட், கால்பந்தில்தான் இருந்தது.

டேவெரெ இதை ஏற்றுக்கொள்ளவில்லை, ‘நீ நல்லா ஓடறே, கொஞ்சம் முயற்சி செஞ்சா உன்னால மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனா வர முடியும்!’ என்றார்.

அவரை நம்ப முடியாமல் பார்த்தான் உசேன். வேறு என்ன காரணம் சொல்லி இவரிடமிருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தான்.

டேவெரெ அதைப் புரிந்துகொண்டதுபோல் பேசினார், ‘உசேன், உனக்குக் கிரிக்கெட்லதான் ஆர்வம்னு எனக்குப் புரியுது. ஆனா, கிரிக்கெட்ல பந்து வீசறதுக்காக நீ ஓடிவர்றதைப் பார்க்கும்போதே நீ பிரமாதமான ஓட்டப்பந்தய வீரனா வருவேன்னு எனக்குப் புரிஞ்சுபோச்சு. இந்த அளவு வேகமா ஓடறவங்க யாரையும் நான் பார்த்ததில்லை. நான் சொல்றதைக் கேளு, நீ இந்த கிரிக்கெட், ஃபுட்பாலையெல்லாம் ஓரங்கட்டிட்டு ஓட்டப்பந்தயத்துல கவனம் செலுத்து, பெரிய அளவுல வருவே!'

அப்போதும் உசேனுக்கு நம்பிக்கை வரவில்லை. ‘முயற்சி பண்றேன் சார்’ என்று நழுவப் பார்த்தான்.

‘சரி, நீ இந்த ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சா நான் உனக்கு ஒரு பரிசு தர்றேன்’ என்றார் டேவெரெ, ‘ஒரு பாக்ஸ் லஞ்ச்!’

சட்டென்று நிமிர்ந்தான் உசேன். ‘ஆஹா, பாக்ஸ் லஞ்ச், நிஜமாவா?’

‘பாக்ஸ் லஞ்ச்’ என்பது, சிக்கனும் இன்னும் பல தின்பண்டங்களும் கொண்ட உணவுப்பொட்டலம். உசேனுக்கு மிகவும் பிடித்த விஷயம்.

ஆகவே, பெரிய சிரிப்போடு தலையாட்டினான் அவன், ‘நான் நிச்சயமா ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கறேன் மிஸ்டர் டேவெரெ!’

கலந்துகொள்ளலாம், ஆனால், ரிகார்டோவை வெல்வது எப்படி?

உசேன் வேகமாக ஓடுவதாக டேவெரெ சொல்கிறார்; அதை நம்பி ரிகார்டோவின் வேகத்துடன் போட்டிபோட முடியுமா?

முயன்று பார்த்துவிட வேண்டியதுதான். பாக்ஸ் லஞ்ச் சும்மா கிடைக்குமா?

போட்டி நாள் வந்தது. ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் வரிசையில் நின்றார்கள். உசேனுக்குச் சற்றுத் தள்ளி ரிகார்டோ நின்றிருந்தான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஓடத் தயாரானான் உசேன்.

சில நிமிடங்களில், டேவெரெ சத்தமாக, ‘கோ!’என்று கூவினார். எல்லாரும் ஓடத் தொடங்கினார்கள்.

அதுவரை உசேன் பல ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டிருந்தான்; ஆனால், இந்த ஓட்டப்பந்தயம் மிகவும் வித்தியாசமாகத் தோன்றியது. காரணம், அந்த பாக்ஸ் லஞ்ச் பரிசு.

அவன் சாப்பாட்டுக்காக ஓடவில்லை, ஆனால், இந்தப் பந்தயத்தில் ஜெயித்தால் ஒரு பரிசு உண்டு என்ற எண்ணம் அவனைச் செலுத்தியது, அவனுடைய போட்டி மனப்பான்மை வெளியே வந்தது, இயல்பான ஓடும் திறமையும் அதனுடன் சேர்ந்துகொண்டது, வெற்றி பெற வேண்டும், அந்தப் பரிசைக் கையில் வாங்க வேண்டும் என்ற துடிப்புடன் அதிவேகமாக ஓடத் தொடங்கினான்.

போட்டி தொடங்கிய சில விநாடிகளுக்குள், உசேன் ரிகார்டோவைத் தாண்டியிருந்தான். அதன்பிறகு, ரிகார்டோவின் மூச்சுச் சத்தம்தான் அவனுடைய முதுகுக்குப்பின் கேட்டது, ஓரக்கண்ணால் பின்னே பார்த்தால், ரிகார்டோவைக் காணவில்லை.

‘அப்படியானால், நான் ரிகார்டோவைவிடக் கணிசமாக முன்னே இருக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டான் உசேன். அந்த எண்ணமே அவனை இன்னும் வேகமாக ஓடச்செய்தது. டேவெரெ கண்டுபிடித்துச் சொன்ன ஓட்ட திறமை அவனை முன்னோக்கிச் செலுத்தியது, எல்லைக்கோட்டைத் தொட்டு வெற்றிக் களிப்போடு துள்ளிக் குதித்தான்.

அதுதான் தொடக்கம். அதன்பிறகு, அந்தப் பள்ளியில் மட்டுமல்ல, சுற்றியிருந்த மற்ற பல பள்ளிகளிலும்கூட ஓட்டப்பந்தயத்தில் உசேனை வெல்ல யாரும் இல்லை. கலந்துகொண்ட போட்டிகளிலெல்லாம் வெற்றியைக் குவித்தான் அவன்.

அப்போதும், அவனுக்குள்ளிருந்த கிரிக்கெட், கால்பந்து ஆர்வம் குறையவில்லை. அவ்வப்போது நண்பர்களுடன் விளையாடச் சென்றுவிடுவான். ஆசிரியர்கள் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து ஓடவைப்பார்கள். ‘டேய், உன்னோட தங்கச் சுரங்கம் உன் கால்ல இருக்குடா’என்பார்கள்.

கொஞ்சம்கொஞ்சமாக, மற்ற கவனச்சிதறல்கள் நின்றன. ஓட்டப்பந்தயம் மட்டும்தான் முக்கியம், அதில் நிறைய பயிற்சி எடுப்பதுதான் தன்னை இன்னும் சிறந்த வீரனாக்கும் என்பதைப் புரிந்துகொண்டு முழுக் கவனத்தையும் அதில் செலுத்தத் தொடங்கினான். அது அவனை உலகின் உச்சத்துக்கே கொண்டுசென்றது, ‘உசேன் போல்ட்’ என்ற பெயரை எல்லாருக்கும் தெரியச் செய்தது, எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், இன்னும் எண்ணற்ற கோப்பைகள், வெற்றிகள், கவுரவங்கள் என்று பெரும் புகழையும் செல்வத்தையும் சேர்த்துத் தந்தது.

மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையனுடைய ஓட்டத் திறமையை அடையாளம் கண்டு, அதை அவனுக்கே அறிமுகப்படுத்தி, ‘ஜெயிச்சா பாக்ஸ் லஞ்ச் வாங்கித் தர்றேன்’ என்று தந்திரமாக அவனை ஓட்டப்பந்தயக் களத்துக்கு அழைத்துவந்து வெற்றிக்குப் பழக்கப்படுத்திய அந்த ஆசிரியர், உசேனின் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார். ‘விளையாட்டுப் பையன்’ உசேனை ‘வெற்றியாளர்’ ஆக்கினார்.

சுறுசுறுப்பான இளைஞர்களுடைய திறமைகள் பல திசைகளில் ஓடுவதைவிட, ஒருங்கிணைந்த ஆற்றலாக ஒரே திசையில் செல்லும்போது வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன, இலக்கு விரைவாகக் கைக்கு எட்டுகிறது!

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்