க
ல்லூரியில் காலடி எடுத்து வைக்கும்போதோ ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். இதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு. இளைஞர்களைப் பொறுத்தவரை பைக் ஒரு வாகனம் அல்ல; அது உற்சாகத்தின் வெளிப்பாடு. இளமையின் குறியீடு. பைக் ஓட்டும்போது கிடைக்கும் மன ஆற்றலும் ஆனந்தமும் வேறு எதிலும் இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை.
ஆனால், பைக் மீதான மோகம் நாளுக்கு நாள் அவர்கள் மத்தியில் அதிகரிப்பதைப் போல, அதில் அவர்கள் காட்டும் அதீத வேகமும் விபரீதமாகும் அளவுக்கு ஆபத்தாகி வருகின்றன. அதிவேகத்தில் பைக்கை ஓட்டுவது, ஐந்தாறு நண்பர்கள் சேர்ந்து பைக் ரேஸ் செல்வது, ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று எதிரே வரும் வானங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டுவது, வேகமாக வந்து ஆபத்தான ‘ஸ்டண்ட்’ அடிப்பது, ‘வீலிங்’ செய்தபடியே பைக்குகளை ஓட்டிச்செல்வது என இளைஞர்கள் பைக்கை வைத்து செய்யும் சாகசங்கள் திகிலானவை.
வெளியூர்களில் தங்கிப் படிக்கும் பல மாணவர்கள் கல்லூரி விடுமுறை நாளிலோ பண்டிகை நாட்களிலோ பைக்கிலேயே நீண்ட தூரம் வீடு திரும்புவதும் இன்று சகஜமாகிவிட்டது. அதுவும், அதிவேகத் திறன் கொண்ட பைக்குகள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் ஏதேனும் ஒரு சிறு நிகழ்வுக்குச் சென்றுவர வேண்டுமென்றாலும், 300 கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஊருக்கும் பைக்கிலேயே சென்று திரும்பும் அளவுக்கு பைக் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் துயரம் தந்துவிடும் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவத்தைத் தான் சில வாரங்களுக்கு முன்பு பார்த்தேன்.
நான்கு வாரங்களுக்கு முன்னர், மதியம் திருச்சியிலிருந்து சென்னைக்குப் போக பேருந்தில் ஏறி ஓட்டுநரின் எதிர் வரிசையில் உட்கார்ந்தேன். பேருந்தை ஓட்டியபடியே ஓட்டுநர் என்னிடம் பேச ஆரம்பித்தார். “ரோட்ல வண்டியா ஓட்டுறாங்க. பொறுமைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிறாங்க. சின்ன பசங்க சாதாரண வண்டியையே தலைதெறிக்க ஓட்டுறாங்க, இதில் ஸ்பீடு இன்ஜின் பைக் வேற. உருப்பட்ட மாதிரிதான். சாரப் பாம்பு மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு வண்டிய ஓட்டிக்கிட்டு போறத பார்த்தா டென்ஷன் ஏறுது” என்று பொரிந்து தள்ளியபடியே வந்தார்.
பெரம்பலூரைத் தாண்டி வந்தபோது திடீரென ஓட்டுநர் பதற்றமாகி, பேருந்தை நிறுத்தினார். வேன் ஒன்று சாலையில் கோணல் மாணலாய் நின்றது. சற்றுத் தூரத்தில் பைக் சேதாரமாகிக் கிடந்தது. அதன் அருகே ஒரு இளைஞன் அடிபட்டு மயங்கிக் கிடந்தான். பக்கத்தில் போய்ப் பார்த்தபோது, பதறிவிட்டேன். அவன், என் நண்பருடைய மகன்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றேன். நல்லவேளை பெரிய அடி இல்லை. அரைமணி நேரத்தில் மயக்கம் தெளிந்து தெளிவான குரலில் பேச ஆரம்பித்தான். “ஓ அங்கிள் நீங்களா ஆஸ்பத்திரியில சேர்த்தீங்க, அப்பாவுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டீங்களா” என்று படப்படப்புடன் கேட்டான்.
அவனை அமைதிப்படுத்திவிட்டு கேட்டேன். “இவ்ளோ தூரம் எங்கே வந்த” என்று கேட்டவுடன், “சென்னையில் மாலையில் ஒரு திருமண வரவேற்பு விழா. அதற்காகத்தான் சென்றேன். அந்த வேன் டிரைவர் சரியாகக் கவனிக்காமல் என் மீது இடித்துவிட்டார்” என்று சொன்னவுடன் அதிர்ச்சியாக இருந்தது.
“திருச்சியிலிருந்து சென்னைக்கு பைக்கில் போறீயா, இப்பவே மாலை வேளை ஆகிவிட்டது. அப்போ எவ்ளோ வேகமாகப் போவாய்” என்று கேட்க, அவனிமிருந்து பதிலோ வித்தியாசமாக வந்தது. “அங்கிள், இது ஹைஸ்பீடு இன்ஜின் வண்டி. 60 கிலோ மீட்டர் வேகத்தில் போனால், இந்த வண்டிக்குத்தான் அவமானம். வேகமா போனா மூன்று மணி நேரத்தில் போய்டலாம்” என்று சாதாரணமாகக் கூறினான்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல், அவனுடைய அப்பாவுக்காகக் காத்திருந்தேன். அவனுடைய குடும்பத்தினர் பதறி அடித்துக்கொண்டு வந்தனர். சிறிது நேரம் கழித்து, ‘படிக்கிற வயசில எதுக்கு ஹை ஸ்பீடு வண்டி வாங்கி கொடுத்தே’ என்று நண்பனைக் கடிந்துகொண்டேன். அங்கிருந்து கிளம்பும் முன்பு, “சொடக்கு போடும் நிமிடத்தில எல்லாம் நடக்க வேண்டும் என்ற மனோபாவத்தை மாத்திக்கோ” என்று சொல்லிவிட்டு மீண்டும் சென்னைக்குக் கிளம்பினேன்.
இளைஞர்கள் பலரும், பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டாலே ராக்கெட்டில் பறப்பதுபோல் நினைத்துக்கொள்கிறார்கள். வாகனங்களுக்கு இடையே ‘கட்’ அடித்து மற்றவர்களையும் மிரட்ட நினைக்கிறார்கள். சாலையில் அதிவேகத்தில் சென்றால்தான் வீரம் என்று நினைக்கிறார்கள். ‘மற்றவர்கள் தன்னை ஹீரோவாக நினைக்க வேண்டும்’ என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். அதனாலேயே பயணத்தின் நோக்கமே வேகம் என்று தப்பாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள்.
எப்போதுமே இந்த ‘ஹீரோயிசம்’ வெற்றி பெறாது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. பொறுமை என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல; வண்டி ஓட்டுவதற்கும் ரொம்பவே அவசியம். இதைச் சொல்லி புரிய வைக்க வேண்டிய கடமை பேராசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு.
கட்டுரையாளர்: பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago