சிங்கிள் பைசா செலவில்லாமல் டைம் பாஸ் செய்ய முடியுமா? இந்தக் கேள்வியை இளைஞர்களிடம் கேட்டால் ‘ஏன் முடியாது’ எனச் சட்டென பதில் வருகிறது. சிங்கிள் பைசா இல்லாமல், குளுகுளுவென ஏ.சி.யில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் டைம் பாஸ் செய்ய முடியும் என்றும் அடித்துக் கூறுகிறார்கள் அவர்கள். ஆமாம், அவர்கள் கூறுவது வானளாவ உயர்ந்து நிற்கும் ஏ.சி. ஷாப்பிங் மால்களைத்தான்.
இங்கே செல்லக் காசு வேண்டாம், யாராவது, ‘என்ன சார் வேணும்’ எனக் கேட்பார்களோ என்ற தொந்தரவு கிடையாது. எந்தத் தளத்தில் உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசினாலும் கேட்க ஆளில்லை, நினைத்த கடைகளில் புகுந்து ஷாப்பிங் செய்வது மாதிரி நடித்துவிட்டு, எதையும் வாங்காமல் வந்தாலும், ‘சாவு கிராக்கி’ என்ற ஏச்சு கிடையாது. அதோடு எங்கே திரும்பினாலும் சூடாகவும் குளிர்ச்சியாகவும் குடிக்க, காபி ஷாப்புகள்.
சுவையாகச் சாப்பிட நொறுக்குத் தீனிகள், ‘அய்யோ சாப்பாட்டுக்கு நேரமாச்சே’ என்று நினைக்காமல் இருக்க விதவிதமான ஓட்டல்கள், ஹாயாக சினிமா பார்க்க மினி தியேட்டர்கள், ஜாலியாக பொழுதுபோக்க விதவிதமான விளையாட்டுகள் என ஒரு புத்தம் புது உலகம் கிடைத்தால் சும்மா விடுவார்களா இளைஞர்கள்? புகுந்து விளையாடிவிட மாட்டார்களா?
இப்படிச் சகல வசதிகளும் உள்ள ஏ.சி. மால்கள்தான் இன்றைய இளைஞர்களின் ஹாட் ஸ்பாட். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு பீச், பார்க், தியேட்டருக்குச் செல்வதையெல்லாம் இந்தக் காலத்து இளைஞர்கள் மறந்தேவிட்டார்கள். முழுவதும் ஏ.சி. செய்யப்பட்ட மால்களில் கும்பலாகக் கூடிச் சுற்றுவதைத்தான் ஹாபியாக வைத்திருக்கிறார்கள்.
சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் கும்பலாகச் சுற்றிக்கொண்டிருந்த கல்லூரி இளைஞர்களிடம், இங்கு என்ன வாங்க வந்திருக்கிறீர்கள் என்று பேச்சுக் கொடுத்தால், “எதுவும் வாங்க இங்கு வரலை” என்று கல்லூரி மாணவர் விக்னேஷ் முதல் ஆளாகக் குரல் கொடுத்தார்.
“காலேஜில் இன்னைக்கு பீரியட்ஸ் இல்லை. சும்மா எதுக்கு இருப்பானேன்னு இங்க வந்துட்டோம். இங்க பாருங்க சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கு. இந்த இடமே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு. எல்லாமே இங்க புதுசுதான். ரொம்ப ஃபன் உள்ள இடம். இங்க வந்தா டைம் போறதே தெரியாது. வெயில்ல பீச்சுக்கும், பார்க்குக்கும் போய் வெயில உட்கார்ந்து பேசுறதவிட இங்கு ஜாலியா இருக்கலாம். அப்படியே திடீர்னு தோணுச்சுனா மாலில் உள்ள தியேட்டருக்குப் போகலாம். சாப்பாடு பத்தி கவலையே இல்லை. இந்த உலகத்தை வேறு எங்கேயும் பார்க்க முடியாது” என்று படபடவெனப் பேசினார் விக்னேஷ்.
இன்றைய இளைஞர்கள் விரும்பும் அனைத்துப் பொருள்களும், விஷயங்களும் மால்களில் நிறைந்திருப்பதுதான் இங்கு இளைஞர்கள் படையெடுக்க முக்கியக் காரணம். ஷாப்பிங் மால்களுக்கு வருபவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் 18 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களே. அதுமட்டுமில்ல, காதல் ஜோடிகளுக்கு இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
பீச், பார்க்குகளை விட ஷாப்பிங் மால்களையே பாதுகாப்பான இடமாகவும் காதல் ஜோடி பார்க்கிறார்கள். எத்தனை முறை, எவ்வளவு நேரம் சுற்றி வந்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க யாரும் இல்லை என்பது இவர்களுக்குக் கூடுதல் உற்சாகம் தரும் விஷயம்.
மால்களின் பிரம்மாண்டம், கவர்ச்சிகரமான தோற்றம், சுத்தமான பராமரிப்பு ஆகியவையும் இளைஞர்களையும் ஜோடிகளையும் கவர்ந்திழுக்கிறது. “பிரம்மாண்டமாக உள்ள ஒவ்வொரு தளத்திலும் சுற்றி வருவதே தனி சுகம்தான். இங்க சுத்த அழகா டிரஸ்ஸிங் மட்டும் செய்து வந்தால் போதும். எங்க வேண்டுமானாலும் சுத்தி பொழுதைக் கழிக்கலாம். இங்க நான் வருவதே ஜாலியா சுத்துறதுக்குதான். இங்க எல்லாமே கிடைச்சாலும், எப்போதாவதுதான் பர்ச்சேஸ் பண்ணுவேன். வாரத்துக்கு ஒருமுறையாவது ஃபிரண்ட்ஸ்களோட இங்க வருவதை பழக்கமாவே வைச்சுருக்கோம்” என்கிறார் இன்னொரு கல்லூரி மாணவர் ராஜா.
இப்படிச் செலவில்லாமல் டைம் பாஸ் செய்ய இன்றைய இளைஞர்களுக்கு ஏ.சி. ஷாப்பிங் மால்கள் உதவுகின்றன என்று சொல்லலாம். எதிர்காலத்தில் ஷாப்பிங் மால்கள் நகரங்களை மேலும் ஆக்கிரமித்து இளைஞர்களைக் குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லவே இல்லை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago